குப்பிழான் தெற்குப் பகுதியின் ஓய்வுநிலைக் கிராம அலுவலரும், குப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயப் பரிபாலன சபையின் முன்னாள் தலைவரும், சமூக சேவகருமான சோ.பரமநாதன் ஐயா அவர்கள் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை (27.05.2026) இரவு காலமானார்.
குப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயப் பரிபாலன சபையின் தலைவராக நீண்டகாலம் பதவி வகித்த பரமநாதன் ஐயா தலைவராகவிருந்த காலப் பகுதியில் ஆலய வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார். மஹோற்சவ காலங்களில் ஆன்மீகச் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்து நடாத்தியதுடன் ஆன்மீகச் சொற்பொழிவிலிருந்து கேள்விகள் கேட்டுக் கிராம மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கி அவர்களை ஊக்குவித்தார். தலைவர் பதவி வகிக்காத காலங்களிலும் கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயத்தின் மீது மாறாத பக்தியுடையவராகவிருந்தார்.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகனதாஸ் சுவாமிகள் ஐயா மீதும், ஆச்சிரமப் பணிகள் மீதும் நாட்டம் கொண்ட பரமநாதன் அவர்கள் சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெறும் ஞானச்சுடர் சஞ்சிகையின் மார்கழிமாத வெளியீட்டு நாளில் வருடம் தோறும் தவறாது கலந்து கொண்டு மலர் வெளியீட்டுரை ஆற்றி வந்தார்.
குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்களை ஒருங்கிணைத்து வெள்ளிதோறும் அறநெறிப் பாடசாலை இடம்பெறுவதில் முக்கிய பங்காற்றியவர். ஆச்சிரமத்தில் கிராமம் சார்ந்து பல்வேறு நிகழ்வுகளையும் தலைமை தாங்கி நடாத்திய பெருமைக்குரியவர்.
அத்துடன் பொருளாதார நலிவுற்ற கிராம மக்கள் பலருக்கும் உதவிகள் கிடைப்பதற்குக் காரணமானவர். விவசாயத்தில் அதிக நாட்டம் கொண்டவராகவும் இவர் விளங்கினார். இவரது உரைகளில் பெரும்பாலும் கிராமப் பற்றும், சமூக அக்கறையும் மிகுந்து காணப்படும்.
இதேவேளை, அன்னாரின் இறுதிக் கிரியைகளும் இறுதி யாத்திரையும் நாளை வெள்ளிக்கிழமை (29.05.2026) குப்பிழான் தெற்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெறுமெனத் தெரியவருகிறது. ஆழ்ந்த அஞ்சலிகள்.... அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறையருளைப் பிரார்த்திக்கின்றோம்.
பதிவு - செ. ரவிசாந்




Post a Comment