நூற்றாண்டு விழாவினை அண்மித்த குப்பிழான் - விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்


எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு.

நூற்றாண்டு நிறைவினை அடைகின்றது எம் செம்மண்ணின் கல்வியாலயம். 

"குப்பிழான் - விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்"

கடந்த நூற்றாண்டு காலமாக குப்பிழான் கிராம மண்ணில் பிறந்து, வளர்ந்த ஒவ்வொரு கிராமத்தவர்களிடமும்  தமது ஆரம்ப கல்விக்கு அத்திவாரம் நாட்டிய கல்வியாலயம் எது? என வினாவினால், அவர்கள் சுட்டிக் காட்டும் ஒரே இடம்.

நம்மூர் மத்தியிலிருக்கும் "குப்பிழான் - விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்".

அது விக்கினேஸ்வரப் பெருமானின் ஆத்மீக அலையினுள் நின்றியங்கும் கல்வியாலயம்.

1928 ஆம் ஆண்டு!

கிராமத்தில் சிறு நில சுவாந்தர் என அக்காலத்தில் இருந்த சட்டத்தரணி திரு. வ. தம்பிராசா அவர்கள் தமது மூன்று பரப்புக் காணியினை நன்கொடையாக வழங்கி, அந்தக் காணிக்குள், தென்னை ஓலை கிடுகுகளினால் கூரை உருவாக்கப்பட்ட இரு ஓலை கொட்டில்கள் உருவாக்கப்பட்டது. அதில் ஓன்று சற்றுப் பெரியது. மற்றது கொஞ்சம் சிறியது.

சாணியால் மெழுகப்பட்ட மண்தரை மற்றும் அழகான திண்ணைகள், மேலும் கரும்பலகைகள், கொஞ்ச வாங்குகள், மேசைகள் உள்ளிட்ட தளபாடங்களுடன் “விக்கினேஸ்வரா வித்தியாசாலை” என்ற பெயரில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. 

 பாடசாலை நிர்வாகத்தில் அன்றைய காலகட்டத்தில் சட்டத்தரணி திரு.வ.தம்பிராஜா அவர்களுக்கு மிகப்பெரும் அனுசரணையாக திரு. வ. சுப்பையா, திரு. பொ. சுந்தரசர்மா ஆசிரியர் போன்றோர் கரம் கொடுத்து உதவினார்கள்.

முதன்முதலாக குரும்பசிட்டியினை சேர்ந்த திரு. கோ. நமசிவாயம் என்பவர் தலைமையாசிரியராகவும், கிராமத்தில் உள்ளவர்கள் சிலர் உதவி ஆசிரியர்களாகவும், வேதனமின்றியும், வேதனத்தின் ஒரு பகுதியினையும் பெற்றுக் கொண்டு சமூக உணர்வுடன் பணியாற்றினார்கள்.

இப்படியே சில வருடங்கள் தொடர்ந்தது. 

 தொடர்ந்த முதுமைகள்,  நிதி சிக்கல்கள் காரணமாக, அவர்களால் தனித்து நின்று நடத்த முடியாத காரணத்தினால், தங்களால் தொடங்கப்பட்ட இப்பாடசாலையினை அக்காலத்தில் ஈழமண்ணில் பல இந்து பாடசாலைகளை ஆரம்பித்து நிர்வகித்து வந்த “சைவ வித்தியாவிருத்திச் சங்கம்" என்ற நிறுவனத்துக்கு தொடர்ந்து நிர்வகிப்பதற்கு அதன் உரிமையினை மாற்றிக் கொடுத்தார்கள்.

சரி. இந்த "சைவ வித்தியாவிருத்திச் சங்கம்" என்பது எது ? என்ற விடயத்துக்கு வருவோம்.

சுதந்திரம் அடைவதற்கு முன்பு இலங்கை பிரித்தானியர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அதற்கு முன்பு போத்துக்கீசர், ஒல்லாந்தரின் காலனித்துவ ஆட்சிக்குள் நாடு சிக்குப்பட்டு இருந்தது.

அவர்களுடைய ஆட்சிக் காலங்களில் தங்கள் கிறிஸ்தவ மதத்தினை பரப்பும் நோக்கில் பல பாடசாலைகளை நாடு முழுவதும் காலனித்துவ ஆதிக்கவாதிகள் ஆரம்பித்து நிர்வகித்து வந்தனர்.

பாடசாலைகளினூடாக உருவாகும் மத மாற்றத்தினைத் தடுக்கும் நோக்கில் ஈழ மண்ணின் சைவ பெரியார்கள் என வாழ்ந்த ஆறுமுகநாவலர், சேர். பொன். இராமநாதன், சேர். வைத்திலிங்கம் துரைசாமி, சட்ட வல்லுநர்  திரு. சு. இராஜரத்தினம் ஆகியோர் சேர்ந்து சைவ சூழலை பேணுதல், மற்றும் இந்துமத நெறியில் மாணவர்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற  நோக்கில் சைவப் பாடசாலைகள் மற்றும் இந்துக் கல்லூரிகளை ஈழமண்ணில் படிப்படியாக ஆரம்பிக்க தொடங்கினார்கள்.

ஆரம்பிக்கப்பட்ட சைவப் பாடசாலைகளை முகாமைத்துவம் செய்வதற்காக டிசம்பர் 09, 1923 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இவர்களினால் உருவாக்கப்பட்ட நிறுவனமே 

“சைவ வித்தியாவிருத்தி சங்கம்”.

இது இந்து போர்ட் எனவும் அழைக்கப்பட்டது.  ஈழத்து சைவ சமயக் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைப்பாகும்.



“குப்பிழான் - விக்கினேஸ்வரா வித்தியாசாலை” உரிமை மாற்றப்பட்ட பின்பு அது உட்பட சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட சைவப் பாடசாலைகள் இந்நிறுவனத்தினால் முகாமைத்துவம் செய்யப்பட்டு வந்தன.

இந்நிறுவனத்தில் ஆரம்பம் தொட்டு இறுதிவரை முகாமையாளராக, தலைமை நிர்வாகியாக செயல்பட்டு வந்த வழக்கறிஞர் திரு. சுப்பிரமணியம் - இராஜரட்ணம் அவர்கள் பிரித்தானியர்களின் காலனித்துவ ஆட்சிக் காலங்களில் இலங்கை அரச சட்டசபையில் பிரதிநிதியாக பதவி வகித்தவர். அரச உதவிகளைப் பெற்று சகல சைவப்பாடசாலைகளையும் நடத்தினார்.

அவரது ஆளுமைத் திறன், அர்ப்பணிப்பு, தன்னலம் கருதாத தியாகங்கள் இவை யாவும் ஈழ மண்ணில் சைவ பாடசாலைகளை உருவாக்கி வளர வித்திட்டது.

அரசாங்கம் இயற்றும் கல்வி சட்டங்களிலும், சுற்று நிருபங்களில் விதிவிலக்குகளை கண்டுபிடித்து அதனை சாதகமாக்கி பாடசாலைகளின் நன்மைக்காக பயன்படுத்தும் வல்லமை பெற்றவர்.

கல்வித் துறையின் கட்டளைச் சட்டங்கள், விதிகள், உப- விதிகள், பிரமாணங்கள் அவருக்கு கை வந்த பாடம். 

அரச நிதிகளை சைவ பாடசாலைகளின் வளர்ச்சிக்கு எப்படி உபயோகிப்பது என்பது அவரது திறமை என அவரைப்பற்றி யாழ்ப்பாணத்தின் வரலாற்று ஆசிரியர் திரு. க.சி. குலரத்தினம் என்னும் தமிழ் அறிஞர் தமது வரலாற்று நூலில் குறிப்பிட்டிருந்தார்.

எங்கள் கிராமப் பாடசாலையின் ஸ்தாபகர் சட்டதரணி திரு. தம்பிராசா அவர்கள் இவரோடு தமக்கிருந்த நல்ல தொடர்புகள், உறவுகளைப் பயன்படுத்தி கிராமத்தில் பலருக்கு ஆசிரியர் நியமனம் பெற்றுக் கொடுத்தார் என்பதனை நம்மூர் ஆசிரியர்கள் சிலர் மிக்க நன்றியுடன் நினைவு கூர்வதும் உண்டு.

மார்ச், 12, 1970 ஆம் ஆண்டு!

கிராமத்து பாடசாலையில் நான் 5 ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த நேரம்! அன்று காலை வகுப்பில் இருக்கிறேன். 

“இந்து போர்ட்” திரு. இராஜரட்ணம் தமது 86 வயதில் மரணமாகி விட்டார் என்ற செய்தி பாடசாலைகளுக்கு வருகின்றது.

மார்ச், 13, 1970 அன்று வெளியாகிய ஈழநாடு பத்திரிகையின் தலைப்புச் செய்தி 



அன்று தலைமையாசிரியராக இருந்த நடராசா வாத்தியார் வகுப்புகள் யாவையும் நிறுத்தச் சொல்லி உடனடியாக பிரதான மண்டபத்தில் அஞ்சலிக் கூட்டத்தினை நடத்துகின்றார்.

 “இந்து போர்ட்” திரு. இராஜரட்ணம் அவர்களை நன்கு தெரிந்த எமது கிராமத்து ஆசிரியர்களான பரமானந்த வாத்தியார், கனகம்மா டீச்சர் கண்கள் கலங்கிய நிலைமையில் அவர் நினைவுகளை தங்கள் உரைகளில் பகிர்ந்து கொள்கின்றனர்.

அன்று பாடசாலை வகுப்புகள் நிறுத்தப்பட்டு தொடர்ந்து இருநாட்கள் விடுமுறை விடப்பட்டது. 

மறுநாள் சகல பத்திரிகைகள் மற்றும் வானொலி ஊடாக அவரின் இழப்பு துயரங்கள் பிரதான செய்தியாக பகிரப்பட்டத்திலிருந்து இலங்கையின் கல்விதுறையில் அவர் யார்? என்பதனை அந்த சிறுவயதில் எம்மால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

அவர் முகாமையாளராக இருந்தபோது எங்கள் பாடசாலைக்கு மேலதிகமாக அருகிலிருந்த 4 பரப்பு காணியினை வாங்கி பாடசாலைக் காணியோடு இணைத்தார். கிராமத்தவர்களின் ஒத்துழைப்புடன் ஓலைக் கொட்டிலாக இருந்த இரு வகுப்பறை மண்டபங்களும் சீமெந்தினால் நிர்மாணிக்கப்பட்ட மண்டபமாக மாறியது.

“ஹிந்து போர்ட்” என அழைக்கப்படும் சைவ வித்தியா விருத்தி சங்கத்தின் கட்டுப்பாட்டில் நமது பாடசாலை நிர்வகிக்கப்பட்டு வந்த காலத்தில் கோ.வ என அழைக்கப்படும் எங்கள் கிராமத்தவர் கோ. வைத்திலிங்கம் J.P. அவர்கள் பாடசாலைக்குரிய கிணற்றினை 1959 ஆம் ஆண்டு வெட்டுவித்து உதவினார்.

அதே ஆண்டு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் ஊரவர்களின் உதவியுடன் பாடசாலைக்குரிய மதில் கட்டப்பட்டது. அந்த மதில் அண்மைக் காலத்தில் அமரர் கதிரிபிள்ளை ஆசிரியர் குடும்பத்தவர்களின் நிதி உதவிகளால்  மீண்டும் நவீன முறையில் புனரமைக்கப்பட்டது.

1960 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலங்களில் நம்மூர் பாடசாலை உட்பட “ஹிந்து போர்ட்” முகாமைத்துவத்தினுள் இருந்த சகல பாடசாலைகளையும் இலங்கை அரசு சுவீகரித்துக் கொண்டதனை தொடர்ந்து பாடசாலைகள் யாவும் அரச பாடசாலைகளாக, அரசின் சொத்துகளாக மாறியது.



ஆசிரியர்கள் யாவரும் அரச ஊழியர்கள் என்ற பதவிகளுக்குள் உள்ளடக்கப்பட்டனர்.

இலங்கை அரசின் கல்வி அமைச்சின் கீழ் யாழ் மாவட்ட கல்வி திணைக்களம் சகல பாடசாலைகளையும் நிர்வகித்தது.

தினமும்  தேவாரங்கள் படித்து வகுப்புகள் தொடங்கி தேவாரங்களுடன் முடிவடையும். 

வெள்ளிக்கிழமைகளில் சிவபுராணத்துடன் கூட்டுப்பிரார்த்தனை நடைபெறும். நவராத்திரி காலங்கள் திறம்பட நடந்து, இறுதிநாள் அருகில் இருக்கும் சொக்கர்வளவு சோதி விநாயகர் ஆலயத்தில் பாடசாலையின் திருவிழாவாக வழிபாடுகள் நடத்தப்பட்டு பாடசாலையில் வாழைவெட்டும் பூஜை நடைபெறும்.

அகில இலங்கை முழுவதும் வருடாவருடம் நடைபெறும் கொழும்பு விவேகானந்த சபையினர் நடத்தும் இந்து சமய பாட பரீட்சைகளில் பாடசாலை மாணவர்கள் சாதனை படைப்பது வழமையாகும்.

முன்னொரு காலங்களில் பாடசாலையில் கற்பித்த சகல கிராமத்து ஆசிரியர்களும், தத்தமது நிலைப்பாடுகளிலிருந்து தங்கள் பாணிகளில் கற்பித்தல் தொழிலை அர்ப்பணிப்புடன் செய்தவர்கள் என்பது வரலாற்று ரீதியாக மறுக்க முடியாத உண்மையாகும். 

ஆசிரியர்களுக்குரிய தேசிய உடையாகிய வெள்ளை வேஷ்டி, வெள்ளை நசனல் மேலங்கி அணிந்து வருவதே அவர்களின் கம்பீரத்தினை மிளிர வைக்கும்.

1979ஆம் ஆண்டு பாடசாலையின் பரிணாம வளர்ச்சியில் ஒரு மாறுபட்ட காலமாகும்.

“விக்கினேஸ்வரா வித்தியாசாலை” என்னும் பெயருடன் இருந்த பாடசாலை

“விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்”

என பெயர் மாற்றப்பட்டு தரம் உயர்த்தப்பட்ட வருடமாகும்.

இந்த தரமுயர்வுக்கு ஓர் ஊன்று கோலாக இருந்த பாடசாலையின் பழைய மாணவனும், அந்த நேரம் யாழ் கல்வி திணைக்கள நிர்வாக அதிகாரியுமாக பதவி வகித்த திரு. ஆ. மகாலிங்கம் அவர்கள் மாலை மரியாதைகளுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு,  சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு தரமுயர்வு விழாவினை நடத்தி வைத்தார். அவர் பின்னர் 1984 - 1990 ஆம் ஆண்டுவரை உடுவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக பதவி வகித்த காலத்திலும் எமது கிராமத்துக்கு பல்வேறு உதவிகளையும், நலத்திட்டங்களையும் பெற்றுக் கொடுத்தார்.  

பாடசாலை தொடங்கி ஐம்பது ஆண்டுகள் கடந்த நிலையில் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி, 1979 ஆம் ஆண்டில் நடந்த பொன்விழா, அதன்போது வெளியிடப்பட்ட சஞ்சிகை என்பவையும் வரலாற்றின் ஒரு நிகழ்வாகும். யுத்த காலங்களில் பாடசாலையின் பிரதான மண்டபம் சீரழிந்து, தொடர்ந்து இடப்பெயர்வு காலங்களில் நிலைக்குலைந்து பாழடைந்திருந்தது.



யுத்தம் ஓரளவு ஓய்வு நிலைமைக்கு வந்தபோது அதிபர் பதவியினை ஏற்றுக் கொண்ட கிராமத்தவர் திரு. சின்னதுரை - சிவகுமார் ஆசிரியர் அவர்கள் உடைந்த கட்டிடத்தினை புனர்நிர்மாணம் செய்வதற்கு,  உலகமெங்கும் பரந்து வாழும் கிராமத்து மக்களின் உதவிகோரி தமது கைப்பட எழுதிய பகிரங்க மடல் கனடாவில் இருந்து இயங்கும் குப்பிழான் - விக்கினேஸ்வரா மக்கள் மன்றத்தின் கலைவிழா சஞ்சிகை ஒன்றில் வெளிவந்தபோது அது பல கிராமத்தவர்களின் உணர்வுகளை பாடசாலையை நோக்கி திருப்பியது.

அந்தக் கடிதம் இணைக்கப்பட்ட சஞ்சிகை சிங்கப்பூரில் வசிக்கும் எம் செம்மண்ணின் மைந்தன் திரு.கிருஷ்ணர் ஐயாவின் பார்வைக்கு கிடைத்து அவர் மனதில் ஓர் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.

நூற்றாண்டு வயதினை அடைந்து கொண்டிருக்கும் கிருஷ்ணர் ஐயா என்ற ஒரு தார்மீக வள்ளலின்  சிந்தனை பாடசாலை நோக்கி, செயல் வடிவம் பெறுகின்றது. 

 திரு. கந்தையா - கிருஸ்ணர் ஐயா அவர்கள் அக்டோபர் மாதம் 17 ஆம் திகதி, 1917 ஆம் ஆண்டில் கிராம மண்ணில் பிறந்து தமது மாணவ பருவ காலத்தில் வாழ்வின் வறுமையின் பிடியிலிருந்து விடிவு தேடி சரக்கு கப்பல் ஒன்றில் சிங்கப்பூர் சென்று தமது நிரந்தர வாழ்வினை அங்கு உருவாக்கியவர் ஆவார்.

 மாணவ பருவ ஆண்டிலிருந்து அவர் வாழ்வு முழுவதும் சிங்கப்பூரில் இருந்தாலும், கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொருவரினதும் உறவுகளும் தொடர்புகளும் அழியா நினைவுகளாக என்றும் தமது மனதில் சுமந்து செல்லும் அளவுக்கு கிராமத்து மண்ணையும் மக்களையும் நேசித்த ஒரு மாமனிதன் ஆவார்.

கடிதங்கள், தொலைபேசிகள் மூலம் உலகம் எங்கும் வாழும் கிராமத்தவர்களுடன் தொடர்பு கொண்டு நிதி திரட்டியதுடன், தமக்கு அறிமுகமான சிங்கப்பூரில் வசிக்கும் பல அந்நியர்களிடம் கூட கையேந்தி பாடசாலைக்காக நிதி கோரி திரட்டினார். தமது பணத்திலும் மிக பெருந்தொகையினை வழங்கி, அவர் முயற்சியில் எழுந்தது “கிருஸ்ணர் மண்டபம்” என்ற அந்த இரு மாடி கட்டிடம் ஆகும். 

அவரது நன்கொடையில் 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் திகதி பாடசாலை வளவில் சரஸ்வதி சிலை திறக்கப்பட்டது.

அவர் நன்கொடைகள் பாடசாலை வளர்ச்சியில் தொடர்ந்தும், பல இடங்களில் வழங்கிய அவரது மனிதநேயங்கள் வரலாற்றில் முக்கிய இடமாகும்.



கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நூறாவது வருட வாழ்வினை அடைந்த அவரது பிறந்ததினம் சிங்கப்பூரில் அவரது இல்லத்தில் கொண்டாடியபோது உலகம் வாழ் கிராம மக்கள் சமூக ஊடகதளங்கள் மூலம் தங்களின் மனமுவந்த வாழ்த்துகளை வழங்கி பாராட்டியிருந்தார்கள்.

தொடர்ந்து நூறு ஆண்டுகளையும் கடந்த அவரின் வாழ்வு  இறுதியாக 2019ஆம் ஆண்டு நிரந்தரமாக அஸ்தமித்தபோது, பாடசாலை வரலாற்றில் இன்னொரு இறுதி பரிணாமத்தின் தடயத்தினை பதித்து விட்டு சென்ற அந்த ஜீவாத்மாவினை போற்றுதல்கள், துதித்தல்களுடன் அனுப்பி வைக்கும் ஓர் நிகழ்வாக கிராம மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.



போராட்டக் காலங்களில் இடிந்து சிதைவுண்டிருந்த பிரதான மண்டபம், அவர் தயவில் மீண்டும் புனரமைக்கப்பட்டது என்பது வரலாற்றில் போற்ற வேண்டிய உண்மையாகும்.

குப்பிழான் கிராமத்து மக்களின் கல்வி என்பதில் அஸ்திவாரமிட்டு, நூற்றாண்டு நிறைவினை அண்மிக்கும் எங்கள் கல்வியாலயம் இன்றைய காலகட்டங்களில்

 எந்த நிலைமையில் சென்று கொண்டிருக்கின்றது? என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்கின்றது ?

 *   தாயக மண்ணில் பல பாடசாலைகள் மூடப்படுவது போல் நாம் நேசிக்கும் நம்மூர் கல்வியாலயமும்      மூடப்படும் நிலைமை ஏற்படுமா ?

 இது எங்கே போய் முடியும்?

 சரியான நேரத்தில் முடிவுகளை எடுத்து மேலும் வளர்ச்சிப் பாதையில் சாதகமாக கொண்டு செல்ல தலைமைப் பொறுப்பில் இருக்கும் அதிபர், உதவி ஆசிரியர்கள் மற்றும் கிராமத்தவர்கள் என்ன செய்ய வேண்டும்?

 பாடசாலையின் கல்வித்தரம் உயர்ந்து, இங்கு கல்வி கற்க அனுமதி கிடையாதா? என மாணவர்கள் தேடிவரும் நிலைமையினை எப்படி உருவாக்க வேண்டும்?

ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகள், அபிப்பிராயங்களை இத்தொடரில் விரமாக பதிவு செய்து கொள்ளுங்கள்.

மேலும் பல விடயங்களில் செயல்பாடுகளுடன் ஒன்று சேர்ந்து கூட்டாக தொடர்வோம்.

சிவ - பஞ்சலிங்கம் -



Post a Comment

Previous Post Next Post