குப்பிழான் மண்ணின் மைந்தன் தியாவின் "நீ கொன்ற எதிரி நான் தான் தோழா" நூல் வெளியீடு

 

குப்பிழான் மண்ணின் மைந்தனும் வவுனியா, இந்தியா, தற்போது புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழ்ந்து வரும் ஈழ எழுத்தாளரான தியாவின் (இராசையா காண்டீபன்) "நீ கொன்ற எதிரி நான் தான் தோழா" கவிதை நூல் வெளியீட்டு விழா கடந்த 20.08.2023 ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது.


ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.


எழுத்தாளர் தீபச்செல்வன் தனது தலைமையுரையில்,

தமிழர் உரிமை மற்றும் தமிழ் தேசியம் சார்ந்த இலக்கியப் பணிகளை முன்னெடுக்கவும் இளைய தலைமுறையினரை இலக்கிய வழியில் ஊக்கப்படுத்தவும் தமிழ் தேசியக் கலை இலக்கியப் பேரவை என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

2009 இற்கு முந்தைய காலத்தில் இலக்கியம் சார்ந்து பயணிக்கும் இளையவர்களுக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கலை இலக்கிய அமைப்புகள் மற்றும் போராளிப் படைப்பாளிகள் பெரும் ஊக்குவிப்பை வழங்கி இருந்தனர். இன்று இலக்கியம் சார்ந்து புதிய தலைமுறையை வழிநடத்த அந்த தலைமைத்துவம் இல்லாத நிலையில் சிலர் தவறாக வழிநடத்த முனைகின்றனர். என்றார். 


வரவேற்புரையினை யாழ். பல்பகலைக்கழக மாணவன் கி. அலக்ஷன் வழங்க, வாழ்த்துரைகளை முன்னாள் வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, முன்னாள் கரைச்சிப் பிரதேச சபை தவிசாளர் அ. வேழமாலிகிதன், கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி அதிபர் திருமதி சூரியகுமாரி இராசேந்திரம் ஆகியோர் வழங்கினர்.


புத்தகம் குறித்த விமர்சன உரைகளை விமர்சகர் செந்தூரனும், ஆசிரிய ஆலோசகர் எஸ். லோகேஸ்வரனும் நிகழ்த்த ஏற்புரையை யாழ். பல்பகலைக்கழக மாணவன் லம்போ கண்ணதாசனும் நன்றியுரையை எழுத்தாளர் குரு சதாசிவமும் வழங்கினர்.


நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் கருத்துரை வழங்குகையில், 

தனது இருப்பைத் தக்க வைப்பதற்காக எல்லா வழிகளிலும் போராட நிர்பந்திக்கப்பட்டுள்ள தமிழினத்தின் வரலாற்றை, வாழ்வியலை, உணர்வு நிலைகளைப் பேசும் பல்வேறு படைப்புகளை தமிழ்த் தேசியத் தளத்தில் நின்று படைத்தளிக்கும் தியா காண்டீபன் போன்ற இளம் எழுத்தாளர்களின் உருவாக்கம் நிறைவைத் தருகிறது. 

அத்தகைய படைப்பாளர்களின் படைப்புத்தளம் என்பது எமது இனத்தின் இருப்புக்கு வலுச்சேர்ப்பதாய் தொடர்ந்து விரிவடைய வேண்டும். அதற்குக் களம் அமைத்துக் கொடுக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கலை இலக்கியப் பேரவை தனது பணிகளை முன்னெடுக்க வேண்டும். என்றார். 


இந்நிகழ்வில் வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், கரைச்சிக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சுப்பிரமணியம் தர்மரட்ணம், முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரியின் அதிபர் திருமதி.சூரியகுமாரி இராசேந்திரம், துணுக்காய் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் சுந்தரலிங்கம் லோகேஸ்வரன், ஆசிரியர் அருணாசலம் சத்தியானந்தன், தேசிய கல்வி நிறுவகத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் சிதம்பரநாதன் கதிர்மகன், மூத்த எழுத்தாளர் குரு சதாசிவம், யாழ் பல்கலைக்கழக மாணவர்களான கி. அலக்ஷன், லம்போ கண்ணதாசன் ஆகியோரோடு கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவையின் முதலாவது நூல் வெளியீட்டு நிகழ்வாக இது அமைந்திருந்தது. ஜீவநதியின் 282 வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூலின் அட்டைப் படத்தினை தமிழ்நாட்டின் புகழ்பூத்த ஓவியர்  புகழேந்தி வரைந்திருக்கிறார். இக் கவிதை நூலுக்கு வாழ்த்துரையினை கவிஞர். ச.வே.பஞ்சாட்சரமும், அணிந்துரையினை எழுத்தாளர் தீபச்செல்வனும் எழுதியுள்ளார்கள். 


இந்நூல் வெளியீடு முடிந்த பின் அமெரிக்காவில் இருந்து எழுத்தாளர் தியா காண்டீபன் தனது நன்றியறிதலை பின்வருமாறு தெரிவித்திருந்தார். 

உறவுகள் அனைவருக்கும் வணக்கம். “நீ கொன்ற எதிரி நான் தான் தோழா” கவிதை நூல் வெளியீட்டு விழா இனிதே நடந்தேறி முடிந்திருக்கின்றது.


முக்கியமாக இது நான் எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா என்பதைத் தாண்டி “தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவை”யின் முதலாவது நூல் வெளியீட்டு விழா என்பதில் நான் பெருமிதமடைகிறேன். அந்தவகையில் படைப்பாளி இல்லாத வெற்றிடம் தெரியாமல், இந்த விழாவினை முன்னின்று ஒழுங்கமைத்து தலைமை தாங்கி சிறப்பான முறையில் நிறைவேற்ற உதவி, எனக்கு எல்லாமுமாகி நிற்கின்ற சகோதரன், எழுத்தாளர், கவிஞர் தீபச்செல்வன் அவர்களுக்கும் விடிவுகளின் தேடல் குழுமம் மற்றும் சக நண்பர்களுக்கும் முதலில் என் நன்றியைக் கூறிக்கொள்கின்றேன்.

மேலும் நூல் வெளியீட்டைச் சிறப்பித்த, எங்களின் இன்றைய நம்பிக்கை ஒளியாக இருக்கும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஐயா சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும் எனது அகம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன் திரு.கி அலெக்ஷன், மற்றும் மிகச் சிறந்த வாழ்த்துரைகளை வழங்கிய கௌரவ . த. குருகுலராசா, கௌரவ. அ. வேழமாலிகிதன், கௌரவ. அ. சத்தியானந்தன் ஆகியோருக்கும், அழகிய முறையில் ஆய்வுரை செய்த என் பல்கலைக் கழக கால நண்பரும் இன்றைய ஆசிரிய ஆலோசகருமான எஸ். லோகேஸ்வரன் அவர்களுக்கும் நன்றி. மற்றும் சிறப்பான முறையில் குறை நிறைகளை வாரி வழங்கிய திறனாய்வாளர் ஆசிரியர், செந்தூரன் அவர்களுக்கும், மேலும் விழாவைச் சிறப்பித்த அனைவருக்கும், மற்றும் நேரலையில் விழாவைப் பார்த்து கருத்துக்கள், வாழ்த்துகளை பதிவிட்ட அனைவருக்கும் அன்பு கலந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.


2009 மேயுடன் தமிழீழ விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், அல்லது போர் ஓய்ந்த பின்னர்; தமிழீழ அல்லது தமிழ் தேசிய இலக்கியங்களுக்கான இடம் பற்றிய பல கேள்விகள் எழுந்தன. தமிழ் தேசிய எழுத்தாளர்கள் எனச் சொல்லிக்கொள்ளப்பட்ட பலர் தங்கள் கருத்தியல் தளத்தில் இருந்து விலகி நின்று இலக்கியங்கள் படைக்க, இன்னும் பலர் கொண்ட கொள்கை மாறாமல் தாயகத்திலும், தாம் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ் தேசியம் சார்ந்த இலக்கியங்களை படைத்துக்கொண்டே இருக்கிறார்கள், அது தொடரும், அதற்கான தேவை நிறையவே இருக்கிறது.

அந்தவகையில் கிட்டத்தட்ட 2000 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை இரண்டு தசாப்தங்களாக எழுதப்பட்ட என்னுடைய கவிதைகளில் இருந்து தெரிவு செய்த 59 கவிதைகளை ஒரு நூலாக்கி உங்கள் முன் கொண்டு வந்திருக்கிறோம்.

நண்பர்களே, உறவுகளே, முடிந்தால் இந்த புத்தகத்தை படித்துப் பார்த்து முடிந்தவரை உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். உங்கள் விமர்சனம் இனிவரும் எனது படைப்புகளுக்கு பேருதவியாக இருக்கும்.

உலகமெங்கும் கோவிட் பெருந்தொற்று நிலவிய காலகட்டத்தில் வெளிவந்த எனது “எறிகணை” நாவல் வெளியீட்டை பெரு விழாவாகச் செய்ய முடியவில்லை என்ற கவலை இருந்தது. அப்போதைய சூழலில் நாம் மெய்நிகர் ஊடகங்களூடாகவே அதற்கான அறிமுக விழாவை செய்திருந்தோம், அந்தக் குறையை இவ்விழா நிவர்த்தி செய்திருக்கின்றது. அத்துடன், தமிழ் தேசிய பயணத்தில் தொடர்ந்து எழுதும் முனைப்போடு இருக்கும் எங்களைப் போன்ற பலருக்கு ஒரு நம்பிக்கையைத் தந்திருக்கின்றது.


மேலும், இந்த நூல் வெளியீட்டில் கிடைக்கும் நிதியை தாயகத்தின் பின்தங்கிய பாடசாலை ஒன்றின் கற்றல் நடவடிக்கைக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்து வரவிருக்கும் எனது “அமெரிக்க விருந்தாளி” சிறுகதை நூல், மற்றும் அதைத் தொடர்ந்து வரவிருக்கின்ற நாவல் மூலம் கிடைக்கின்ற நிதியும் அவ்வாறே நல்ல காரியங்களுக்கு பயன்படவுள்ளது என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.


உங்கள் வேலைப் பழுக்களுக்கு மத்தியில் இன்றைய நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும், ஆதரவளித்த அத்தனை நண்பர்களுக்கும், முன்னின்று ஒழுங்கமைத்த அத்தனை உறவுகளுக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது அன்பையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து, அடுத்த வருடம் சந்திப்போம் என்ற உறுதிமொழியுடன் விடைபெறுகிறேன்.


கவிஞர் வட்டக்கச்சி வினோத் "நீ கொன்ற எதிரி நான் தான் தோழா" கவிதை நூலுக்கு எழுதிய சிறு விமர்சனக் குறிப்பு

"நீ கொன்ற எதிரி நான் தான் தோழா" கவிஞர் தியா எழுதிய அழகிய எளிதான தமிழ் நடையில் எல்லோரும் புரிந்து இரசிக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கும் இந்த கவிதை தொகுப்பு தேசத்தின் பாடுகளை தமிழ் தேசிய உணர்வோடு பாடியிருக்கிறது.

"என் சுதந்திரம் சிறைப்பட்ட போது 

யதார்த்தம் செத்துப்போனது"

ஆற்ற முடியாத கோபமும் வலியும் மனதில் பதிந்து கிடக்கும் மனவடுவும் சேர்ந்து கவிதையாக உருப்பெற்றிருக்கிறது.

"தேன் தடவிய பொய்கள் மூலம் 

நான் நன்றாக இருக்கிறேன் 

என்று சொல்கிறேன்"

சாதாரண வாழ்வியலில் நாம் சந்தித்த சவால்கள் அசாதாரண நேரத்தில் நாம் அதை ஏற்றுக்கொண்டு மீண்டெழ பாவித்த மனவலிமை என்பவற்றை எடுத்துரைக்கும் கவிதைகள் நிறைந்த தொகுப்பு ஒவ்வொரு வரியும்... இல்லை ஒவ்வொரு சொல்லும் ஏதோ ஒன்றை சொல்கிறது.

"ஒரு தாயின் கண்ணீர்" இல் தொடங்கி புலி நடந்த ஊரில் சுண்டெலிகள் விளையாட்டை சுட்டி காட்டி; 

"இலக்கு ஒன்றை குறியெனக் கொண்டு நில் 

இல்லையேல் செத்து மடி" 

என்னும் காட்டமான எடுத்துரைப்புடன் தேசம் மீது கொண்டுள்ள காதலின் வெளிப்பாட்டில் வந்த கவிதையின் கோபம். மிகச் சிறந்த தமிழ் உணர்வோடு காலத்தின் தேவைக்கு ஏற்ப மலர்ந்த தமிழ்த் தேசிய கவிதை தொகுப்பாக உணர்கிறேன். வாழ்த்துகள், மகிழ்ச்சி.

2021 இல் வெளியான எறிகணை நாவல் குறித்து எழுத்தாளர் தீபச்செல்வன் பதிவு செய்த கருத்து வருமாறு, 



கொண்டாட்டமும் பண்பாடும் என வாழ்ந்த ஓர் ஈழக் குடும்பத்தைத் துரத்துகிறது ‘எறிகணை’! வழிநெடுகிலும் சிந்தப்படுகிற குருதியும், தொலைக்கப்படுகிற உயிர்களும் அதிர்வை உண்டு பண்ணுகின்றன. ஈழப் போர் தொடங்கி முடியும் காலம் முழுவதும் பரவிச் செல்கிற இந்தக் கதை, போரின் நெடுக்குவெட்டு முகத்தையும் காண்பிக்கிறது. எளிய மொழியில், எளிய கதையாக உருப்பெற்றுள்ள இந்த நாவல் ஏற்படுத்துகிற தாக்கமோ உக்கிரமானது. ஈழ நிலத்தில் இனஅழிப்புப் போரினால் ‘சனம் பட்ட கதை’யைச் சொல்வதில், ‘எறிகணை’ முக்கியத்துவம் வாய்ந்த நாவலாக நிலைத்திருக்கும்.

நூலாசிரியரைப் பற்றிய சிறு அறிமுகம் 

இராசையா காண்டீபன் 1978 ஆவது வருடம்  யாழ்ப்பாணத்தில் உள்ள வீரமனை - குப்பிழான் கிராமத்தில் இராசையா - இந்திராதேவிக்கு மகனாகப் பிறந்தார். யா/குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும். பின்னர் சாதாரண தர O/L கல்வியை யா/மட்டுவில் அ.மி.த.க பாடசாலையிலும் படித்தார். உயர்தரக் A/L கல்வியை யா/வயாவிளான் மத்திய கல்லூரியில் தொடங்கி பின்னர் வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் நிறைவு செய்தார்.

தனது பல்கலைக்கழக படிப்பின் முதலாம் ஆண்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் தொடங்கிய இவர் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கலை முடித்து இளமாணிப் பட்டம் பெற்று 2005 ஆம் வருடம் வெளியேறினார். 

பின்னர் இந்தியா சென்று தமிழ்நாட்டிலும் பல படிப்புக்களை முடித்துள்ளார்.  தஞ்சாவூர் PRIST University பொன்னையா ராமயெயம் அறிவியல் தொழிநுட்பப் பல்கலைக் கழகத்தில் “புலம்பெயர்ந்தோர் கவிதைகள்” தொடர்பாக ஆய்வுசெய்து ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டம் பெற்றுள்ளார்.

பின் அமெரிக்கா சென்று ரோபோக்கள் மற்றும் திரவ சக்தி ஆட்டோமேஷன் (robots and fluid power automation) பொறியியல் பட்டம் பெற்று பின் அமெரிக்காவின் புகழ் பெற்ற செயிண்ட் தோமஸ் பல்கலைக்கழகத்தில் (University of St. Thomas)  பொறியியல் முதுநிலைப் பட்டத்தை நிறைவு செய்துள்ளார். 

மேலும் 2001 - 2005 வரை குப்பிழான் தெற்கு குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலைய தலைவராகவும், விளையாட்டுக் கழக தலைவராகவும், 2005 - 2006 இல் கன்னிமார் கௌரி அம்பாள் ஆலய பரிபாலன சபைத் தலைவராகவும்,  2003 - 2004 இல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தமிழ் மன்றத்தின் எழுத்தாளராகவும் (Editor) இருந்து சமூகப்பணி ஆற்றியுள்ளார். 

1999 - 2006 வரை தனியார் கல்வி நிறுவன ஆசிரியராகவும், 2006 இல் வவுனியா விபுலானந்தக் கல்லூரியின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். பின் தமிழ்நாட்டின் சென்னையில் Web Designer & Graphic Designer ஆகவும் பணிபுரிந்துள்ளார். 

2006 இல் ஈழத்தில் தமிழ் இலக்கியம் தோற்றமும் தொடர்ச்சியும் என்ற புத்தகத்தையும், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், தொடர் கதைகள் எனப் பல ஆக்கங்களை     ஆர்.கே – குப்பிளான், தியா என்ற புனைபெயர்களில் எழுதியுள்ளார். இவை ஈழத்தின் பல முன்னோடி நாளிதழ்கள், வாரமலர்கள் மற்றும் சஞ்சிகைகளில் வெளிவந்தன.

2021 இல் "எறிகணை" என்கிற நாவலும், 2023 இல் "நீ கொன்ற எதிரி நான் தான் தோழா" கவிதை நூலும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தியாவின் பேனா பேசுகிறது… www.theyaa.com என்ற வலைத்தளத்தையும் நடத்தி வருகிறார்.

நூலாசிரியர் தொடர்புகளுக்கு,

மின்னஞ்சல் - akshpoems@gmail.com 


தொகுப்பு - செ. கிரிசாந்

Post a Comment

Previous Post Next Post