"இளமையில் கல்வி சிலையில் எழுத்து" இதன் பொருளை அறிந்த போது ஆசிரியையின் வகுப்பை விட்டு நாம் பலர் நீங்கி இருப்போம். அறிவதற்கு ஏற்ற இலகுவான வார்த்தை இது அல்ல. அனுபவமே இதனைத் தத்ரூபமாக வெளிக்காட்டும். ஆனால் அவரிடம் கற்ற ஒவ்வோர் நாட்களும் மறக்கக் கூடிய சிறிய விடயங்களாக இருக்கமாட்டாது எனத் துணிந்து கூறலாம். கூடவே அவரால் இடப்பட்ட அத்திவாரம் முறையாக இடப்பட்டதால் அன்று மாணவர்களாக அவரிடம் இருந்த நாம் பலர் இன்று உடல், உள நலத்துடன் இலகுவாகச் சமூகத்துடன் ஒத்து வாழ முடிகின்றது. அதற்கேற்றவாறு அவரது ஆரம்பக்கல்வி போதனைகள் அமைந்ததை யாரும் மறுக்க முடியாது.
ஆறு வயதுகளில் நாம் இருக்கும் போது வீட்டில் கதைப்பவர்கள் யாராக இருந்தாலும் ஆசிரியர்கள் பலரின் பிரம்பு, அவர்களின் தண்டனைகள், பிழைகள் விட்டால் ஆசிரியர்கள் கோபமாக கடிந்து கொள்வார்கள் என்ற சம்பாசணைகள் அனைத்தும் பாடசாலையில் காலடி வைப்பதற்கு முதலேயே சிறு பராயத்தில் பயத்தை ஏற்படுத்தும்.
ஆனால் நடந்தது என்னவோ எமது ஆசிரியையின் மாணவர்களுடனான அணுகு முறைகள் யாவும் நினைத்ததற்கு மாறாகவே நன்றாகவே அன்று அமைந்து இருந்தன.
தரம் ஒன்று அல்லது வகுப்பு ஒன்று என்று கூறப்பட்ட வகுப்பறை ஓலைகளால் வேயப்பட்ட சீமெந்துச் சுவரினால் அமைக்கப்பட்டிருக்கும். அன்றைய வகுப்பறையின் வெளியே பதுமையான சிலை போன்று நின்று வரவேற்று இடாப்பில் உள்ள பெயருடன் மாணவர்களின் வரவுகளை சரி பார்த்து தன் பணிகளை இனிதே தொடங்கினார். அடுத்த 365 நாட்களும், லீவு நாட்கள் தவிர தினமும் அண்ணளவாக நான்கு மணித்தியாலக் கற்றல் அங்கே மிக உயர்ந்த குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதற்குப் பின்னால் ஓர் மென்மையும் இருக்கும். அவரே எமது ஆசிரியை திருமதி மதிப்பிற்குரிய பரமேஸ்வரி ஆவார்.
வளர்முக நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி உயர் கல்வி , இடைநிலைக் கல்விகளின் விளைவு வீதம் 15-17 வீதமாகவே இருக்கும் நிலையில், ஆரம்பக்கல்வி விளைவு வீதம் 27 வீதம் ஆகவும் இருப்பதால் பிற கல்வி நிலைகளை விட ஆரம்பக்கல்விக்கே முக்கியத்துவம் எங்கும் கொடுக்கப்படுகின்றது.
விளைவு என்னும் போது கல்வி அறிவால் கிடைக்கும் உயரிய பண்புகள், வேலை வாய்ப்பு, முடிவெடுக்கும் திறன் போன்ற இன்னோரன்ன பல விடயங்களை நாம் அனுமானிக்கலாம்.
தாரமும் குருவும் தலை விதிப்படி என்பார்கள் பெரியோர்கள். ஏடு தொடக்குவதில் கூட சுப முகூர்த்தம் பார்த்து மிகவும் அறிவாளர்களால் மதிக்கப்படும் ஓர் மனிதராலேயே ஏடு தொடக்கி வைக்கப்படும்.
ஏடு தொடக்கிய அடுத்த அல்லது அதற்கடுத்த வருடங்களில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் ஏழு வயது ஆகும் போது அரச பள்ளிகளிற்கோ அல்லது வசதி படைத்தவர்கள் தனியார் பள்ளிகளிற்கோ தரம் ஒன்று கற்க அனுப்பி விடுவார்கள்.
அதிர்ஷ்டவசமாக நாம் பலர் முதல் தரத்தில் கற்ற முதல் பாடசாலை வகுப்பு ஆசிரியை திருமதி பரமேஸ்வரி அவர்களின் வகுப்பிலாகும். மிகவும் பொறுமைசாலியான அந்த ஆசிரியை தன் பணியைத் தெய்வமாக மதித்து பலன் எதனையும் கருதாது செவ்வனே செய்தார். எந்தவித தண்டனைகளும் அளிக்காது சிறு பிள்ளைகள் போன்று வார்த்தைகளாலேயே தம் சொந்தப் பிள்ளைகள் போன்றே அனைத்து மாணவச் செல்வங்களையும் நேசித்தார்.
1936 இல் ஏழாலை வடக்கு பதியில் பிறந்த அவர் செல்வரத்தினம் என்பவரைத் திருமணம் செய்து ஐந்து பிள்ளைகளிற்குத் தாயாகவும் பத்திற்கு மேற்பட்ட பேரப்பிள்ளைகளிற்குப் பாட்டியாகவும் வாழ்ந்தார். அவர் பிறப்பால் சைவசமயத்தவராக இருந்தாலும் திருமணத்தின் பின் கத்தோலிக்க மதத்திற்கு மாறினாலும் பல சைவ சமயத் திருமுறைகளையும் எமக்கு வகுப்பினில் கற்பித்தார்.
முதன் முதலில் நாம் அறிந்த அனைத்துத் தமிழ் எழுத்துகளையும் அனைத்து இலக்கங்களையும் பொறுமையாகக் கற்பித்து பலரை உயர்த்தினார்.
ஆரம்பக் கல்வியில் கணிப்பீடு
மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்தை மதிப்பிட்டு அவர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு சரியான கற்பித்தல் முறைகளை தேர்ந்தெடுத்து அடுத்த கட்ட வளர்ச்சிக்கு திட்டமிட்டு உருவாக்கினார். அந்தக் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் கல்வித் தர மேம்பாடுகளிற்கும் உறுதுணையாக இருந்தார்.
பொருத்தமான முறைகளைக் தேர்ந்தெடுத்து மாணவர்களின் தேவைக்கேற்றவாறு பல்வேறு கற்பித்தல் கருவிகள் (களிமண், பனை ஓலைகள், பிளாஸ்டிக் பொருட்கள், விதைகள், கற்கள்) நுட்பங்களைக் கொண்டு கணிப்பீட்டு முறைகளைப் பயன்படுத்தி மாணவர்களை மேலும் முன்னேற்ற முயன்றார். மேலும் தானாக எழுதிய பல இரசிக்கத்தக்க பாடல்களை பாடுவித்து அபிநயங்கள் செய்வித்து வகுப்பிற்கு வெளியிலும் அதிகம் எம்முடன் உலாவி சுதந்திரமாக வாழவும் கற்றுத் தந்தார்.
அன்றைய எமது வயதுகளில் ஆளுமை என்பது யாதென நாம் அறியாவிட்டாலும் பின்னாளில் மாணவர்களின் ஆளுமைகளை பரந்தளவில் வளர்த்த எம் ஆசிரியை முயற்சித்த பல செயற்பாடுகளை பட்டியல் போடலாம்.
பெற்றோர்கள் பிள்ளைகளின் இயற்கையான செயற்பாடுகளிற்கு இடமளித்து இயல்பாகவே அவர்களை வளர்வதற்கு இடமளிக்க வேண்டும் என்ற கொள்கை ஆசிரியையில் இருந்ததை பின்னர் நான் அனுமானித்தேன்.
கல்வியியலாளரான அம்மையார் மேரி மொண்டீசறியின் கருத்துப்படி பிள்ளைகளின் சூழலுடன் பொருந்தி வாழக்கூடிய தனி ஆற்றல்களை வளர்க்கும் விளையாட்டு மூலமான தொடர் செயற்பாட்டிற்கு கல்வி அவசியம் எனவும் இடமாற்றத்திற்காக பாலபாட அறிஞர் மற்றும் ஆசிரியர் ஜோன்ரூஷோ பிள்ளைகளை இயற்கையுடன் சங்கமிக்க அதனூடாக கற்பிக்க முயல வேண்டுமெனவும், மேலும் மகாத்மா காந்தி முழுவதுமான கல்விக்கும் முதல் உணர்வையும், உயர்ந்த படிகளை அடைந்து குழந்தைகள் பிற்காலப் பெரியோர்களாவதும் ஆரம்பக்கல்வியில் இருந்தே ஆரம்பிக்கின்றது எனவும் குறிப்பிடுகின்றார்.
மேலே கூறிய அத்தனை அறிஞர்களதும் எண்ணங்களை எந்த வித பிசகலும் இன்றி ஆசிரியை தன் வீடு மற்றும் தனது அன்பிற்குரிய மாணவர்களினதும் கற்பித்தலில் ஊக்குவித்தார். தன் வீடு என்று இங்கு குறிப்பிடுவது யாதெனில் அவரது
பிள்ளைகளின் துடுப்பாட்டப் போட்டிகளிலான அபாரமான திறமைகள் அத்துடன் அவற்றைப் பதிந்து வைக்கும் பதிவுப் புத்தகம் (cricket - score book) அதன் பெறுமதியான விலை ஆகியவற்றைக் கூறலாம். அத்துடன் பதிவுப் புத்தகங்களில் விலாவாரியாக விளையாட்டு வீரர்களின் சாதனைகளை ஒழுங்காக பதிவு பண்ணி வைத்ததை என் உயரிய வயதுகளில் விளையாட்டு மைதானத்தில் கண்ணுற்றதால் அவை மீண்டும் இங்கு நினைவில் வருவதால் விஷேடமான பதிவாக இடுகின்றேன். மேலும் அவரது பேரனார் வைத்தியராக இலண்டனில் இன்று பணிபுரிவதிலும் அவரது பங்கு நிச்சயமாகவே இருந்திருக்கும்.
இவ்வாறான பல அரிய பணிகளை ஆற்றிய ஆசிரியை அவர் தம் கல்விப் பணியை 1964 இல் இரத்மலானையில் ஆரம்பித்து 1968 இல் நடேஸ்வராக் கல்லூரியில் தொடர்ந்து பின்னர் 1970-1984 களில் எமது பாடசாலையான குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கற்பித்து, 1985-1995 இல் ஏழாலை மகா வித்தியாலயத்திலும் இறுதியாக கற்பித்து 1995 இல் இளைப்பாறினார்.
இறுதியாக " ஞாபகம் வருதே ஞாபகம் வருதே" என்ற பாடலில் வரும் முதல் வகுப்பெடுத்த 'மல்லிகா ரீச்சர்' என்பது சக மாணவர்களால் 'பரமேசுவரி ரீச்சர்' என்று மாற்றிப் பாடவே மனம் என்றும் எண்ணும்.
இவ்வாறான பெருமதிப்பிற்குரிய ஆசிரியை பிள்ளைகளுடன் இங்கிலாந்தில் வசித்து வரும்போது 11/12/2019 இறுதி மாதத்தில் இவ்வுலகை இட்டு இயற்கை எய்தினார் என்ற சோகச் செய்தியும் எம்மை அடைந்தபோது அவர் சொர்க்கத்திற்குச் சென்றிருப்பார் எனவும் எம்மால் என்றுமே எண்ணத் தோன்றுகின்றது.
எழுதியவர் - தேவசேகரம் கந்தையா (திருமால்)
(ஆசிரியரிடம் கற்ற ஆண்டு 1975)


Post a Comment