அவர் நம்ம கிராமத்தவர்.
கொடிய யுத்த காலங்களிலும் தன்னுடைய கிராம மண்ணில் வாழ்ந்து, கிராமத்தின் சமூக நிறுவனங்களுடன் தன்னால் இயன்றவரை தன்னை இணைத்து செயற்பட்ட நம்மவர்களில் ஒருவர் என சொல்லும் போது அது மிக போற்றப்பட வேண்டியதொரு விடயமாகும்.
குப்பிழான் - சொக்கர்வளவு சோதிவிநாயகர் ஆலயம் அவரின் குல தெய்வம்.
அந்த ஆலயத்தோடு அவரும், அவரின் சந்ததியினர், அயலவர்கள் யாவரும் பக்தி பரவசங்களின் பிணைப்போடு பின்னிப் பிணைக்கப்பட்டவர்கள்.
அந்த ஆலய பரிபாலனசபையில் அவர் செயலாளராக பணி புரிந்த காலம்.
அந்தக் காலகட்டங்களில் கொடிய யுத்தமும் தொடர்கின்றது.
ஆனால் என்றும் ஒலிக்கும் அந்த ஆலய மணியின் அற்புதமான ஓசையில், முற்றான இடப்பெயர்வு காலம் தவிர ஏனைய காலங்களில் தடங்கல் என எவையுமில்லாது தொடர்ந்து ஒலித்த வண்ணமே இருந்தது.
அதுவே அவரது "செயலாளர்" என்னும் பதவியின் செயல் திறமைக்கு ஓர் எடுத்து காட்டாகும்.
அவர்தான் திரு.நாகையா - இராமலிங்கம் ஆசிரியர்.
மார்ச்/23/2014 ஆம் ஆண்டு தமது 70 ஆவது வயதில் கிராம மண்ணில் அமரத்துவமடைந்தார்.
அவருக்கு எந்த இடங்களிலும் எவரோடும் சச்சரவுகள், பிரச்சனைகள் என எந்த சந்தர்ப்பத்திலும் உருவாகமாட்டாது. ஏனெனில் மனிதர்களை அவரவர் சுபாவங்களுக்கு ஏற்ற மாதிரி கவனமாக கையாள்வது எப்படி என்பது அவரிடமிருந்து ஏனையோர் படித்துக் கொள்ள வேண்டியதொரு பாடமாகும்.
அது அவரின் ஓர் மிகச் சிறந்த ஆளுமையாகும்.
அவர் தனது ஆரம்பக் கல்வியினை குப்பிழான் - விக்கினேஸ்வரா வித்தியாசாலையிலும், பின்பு உயர் வகுப்பினை மல்லாகம் மகா வித்தியாலயத்திலும் தொடர்ந்தார்.
தமது இளமைக் காலங்களில் மலையகப் பகுதியில் உள்ள பாடசாலையில் தமது ஆசிரிய பணியினை முதன் முதலாக ஆரம்பித்தார். பல வருட கால அனுபவமுள்ள எஸ்ரேற் பாடசாலை ஆசிரியர்கள் யாவரும் அரச நியமன ஆசிரியர்களாக அங்கீகரிக்கப்பட்டதனைத் தொடர்ந்து பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் இரு வருடங்கள் பயிற்சி முடித்து, பயிற்றப்பட்ட ஆசிரியர் (Trained Teacher) என்ற தகைமைகளோடு அவரின் ஆசிரியப் பணி தொடர்ந்தது.
ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் தமது கற்கை நெறிகளை முடித்துக் கொண்டு, கேகாலை மாவட்டத்தில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் பணிபுரிந்தார்.
தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு இடம் மாற்றலாகி வசாவிளான் - ரோமன் கத்தோலிக்க பாடசாலை, புன்னாலைக்கட்டுவன் அமெரிக்கன் மிஷன் பாடசாலை என்பவற்றில் பணிகள் செய்து , நம்மூர் குப்பிழான் - விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில், எங்கள் கிராமத்து மாணவர்களுக்கு 1986 -1990 ஆம் ஆண்டு காலங்களில் கல்வி கற்பிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்து சமயம், சமூகவியல் போன்ற பாடங்கள் அவர் அநேகமாக கற்பிக்கும் பாடங்களாகும்.
செம்மண்ணில் இயங்கும் பிறைன் கல்வி நிலையம் என்னும் தனியார் கல்வி நிலையத்திலும் சில காலங்கள் கல்வி கற்பித்தார்.
இறுதியாக இணுவில் - இந்து கல்லூரியில் (1991- 1999) பணி புரிந்து, 1999 ஆம் ஆண்டு,சுகயீனம் காரணமாக சேவை நீடிப்பினை தொடராது தமது 55 ஆவது வயதில் ஆசிரிய பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
முன்னொரு காலம்.
குப்பிழான் - விக்கினேஸ்வரா விளையாட்டு கழகத்தின் வருடாந்த விளையாட்டு போட்டிகள் கேணியடி வைரவர் கோயில் மைதானத்தில் மிக கோலாகலமாக நடைபெறும்.
கிராமத்தின் வரலாற்று பதிவில் பசுமரத்தாணியாக மனதில் நின்று உலாவும் அற்புதமான ஓர் நிகழ்வே அந்த விளையாட்டுப் போட்டியாகும்.
அந்த விளையாட்டுப் போட்டி தினத்தில் அமரர் இராமலிங்கம் ஆசிரியர் அவர்கள் மிகவும் சுறுசுறுப்பான ஓர் நடுவராக, உதவியாளராக செயல்படுவதில் என்றும் பின் வாங்குவதில்லை.
அவருக்கு இரு பெண் பிள்ளைகள். ஒருவர் பிரான்சில் வாழ்ந்து வருகின்றார். மற்றவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வணிகத் துறை விரிவுரையாளராகவும் பணி புரிந்து வருகின்றார்.
- சுவிஸிலிருந்து தர்மலிங்கம் - பிரபாகரன் -


Post a Comment