செம்மண்ணின் ஆசிரியர்கள் 14 - திரு.ஆறுமுகம் உருத்திரலிங்கம்


1984 ஆம் ஆண்டு நாம் ஆறாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்த காலம்...

எம் தேசமெங்கும் எங்கும் யுத்த தாண்டவம் தலை விரித்தாடிய அக்காலப்பகுதியாகவும், பாடசாலைகள் நடப்பதும் இடைநிறுத்தப்படுவதும், இடம்பெயர்வதும் என்று ஒரு சீரான பாடசாலை நாட்கள் இல்லாமலும்... அவலமுற்ற பல்லாயிரம் மாணவர்களில் நாமும் விதிவிலக்கானவர்கள் இல்லை. பல நாள்கள் மாதங்களாகியும் பாடசாலைகள் இயங்க முடியாது.  

போர் மேகங்கள் சூழ்ந்து மிகவும் இறுக்கமாக இருந்த அந்நாட்களில், மாணவர்களோடு ஆசிரியர்களும் வெளியூர்ப் பாடசாலைகளில்  சேவை புரிய முடியாமலும் உள்ளூர்ப் பாடசாலைகளும்   கதவடைத்த நிலையிலும் இருந்த காலத்திலே, எம் ஊரில் போரின் தாண்டவம் சிறிது ஓயும் வேளைகளில் உற்சாகமாக விவசாயத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்கள். 

அத்தியாவசிய பொருள்கள் கூட தட்டுப்பாடான அன்றைய பேரவலத்தின் மத்தியில் அறிவியல் தேடும் இளைய வயதில் அல்லாடி நின்ற எங்களை ஊரோடு இருந்த ஆசிரியர்கள் சிலரின் அரவணைப்பால் அறிவொளி ஏற்றல் செல்லடி ஓசையிலும் இடைவிடாது இடம்பெற்றுக் கொண்டிருந்தது. 

அவ்வாறு அந்நாட்களில் எம் அறிவியலின் மேன்மைக்காக, இடரிலும் தளராது எம்மோடு இருந்த சில ஆசான்களின் திருவுருவம்  இன்றும் எம் நினைவதனை விட்டு அகலாது, எம் மனக்கண்களில் வந்து நிற்கும். 

அவர்களுள் திரு சிவபாதசுப்பிரமணியம் ஆசிரியர், திருமதி. ஞானதீபம் (கண்ணா) ஆசிரியை, திரு ஏரம்பமூர்த்தி ஆசிரியர்,  திரு . சிவகுமார் ஆசிரியர் அவர்களோடு திரு .ஆ. உருத்திரலிங்கம் ஆசானும், இன்னும் சில ஆசிரியர்களும்  என்றென்றும் எம் இதயத்தில் நீக்கமற நிறைந்தவர்கள்.

அன்றைய காலத்தில் திரு ஆ. உருத்திரலிங்கம் ஆசான் தம் வீட்டின்  கூடத்தை அறிவாலயம் ஆக்கி விஞ்ஞானமும், கணிதமும் கற்றுத் தந்தார்.

எந்த இன்னல் மிகுந்த வேளையிலும்  புன்முறுவலுடன், அன்பாகவும், அமைதியாகவும் எம் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களைக் தெளிவுபடுத்தும் சாமர்த்தியம் வாய்ந்தவர். 

கடிதலோ, எரிதலோ, தண்டித்தலோ எதுவுமின்றி அன்பாக அரவணைத்து அறியாமை இருள் அகற்றிய ஆசான்களில் அவரும் போற்றுதற்குரியவர்.


அவர்  எங்கள் செம்மண்ணில் 14 ஆம் திகதி மாசி 1953 ஆம் ஆண்டு பிறந்தார்.

அவரின் ஆரம்பக் கல்வி குப்பிழான் மத்திய மகா வித்தியாலயத்தில் 1959 தொடக்கம் 1963 வரையும் அதன் பின்னர் உயர்கல்வி ஸ்கந்தவரோதயக் கல்லூரியில்  1963 -1971 வரையும்  கற்றுக் கொள்ளும் பேற்றினையும் பெற்றிருந்தார். 

ஆசிரிய  சேவையின் ஆரம்பமாக 1978 ஆம் ஆண்டு தொடக்கம் 1980 ஆம் ஆண்டு வரையும் கட்டுவன் ஞானோதயாக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியிருந்தார். 

தொடர்ந்து பரந்தன் இந்துத் தமிழ் வித்தியாலயத்தில் 1981 ஆம் ஆண்டு தொடக்கம் 1982 ஆம் ஆண்டு வரை விஞ்ஞான, கணித ஆசிரியராகக்  சேவையாற்றியிருந்தார். 

அதன் தொடர்ச்சியாக பலாலி ஆசிரியர்  பயிற்சி  கல்லூரியில்  1983 ஆம் ஆண்டு தொடக்கம் 1986 ஆம் ஆண்டு வரை  ஆசிரியர் பயிற்சியில்  ஈடுபட்டிருந்த பின்னர் கனகாம்பிகைக்குளம் தமிழ் வித்தியாலயத்தில் 1986 ஆம் ஆண்டு தொடக்கம் 1988 ஆம் ஆண்டு வரை எட்டாம் வகுப்பிற்கான வகுப்பாசிரியராக இருந்ததுடன்  அந்த வகுப்பு மாணவர்களுக்கு  விஞ்ஞான, கணித  ஆசிரியராகவும் சேவையாற்றியிருந்தார்.  

அதனைத் தொடர்ந்து  எம் செம்மண்ணின் குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தில்  1989 ஆம் ஆண்டு தொடக்கம் 1991 ஆம் ஆண்டு வரை எட்டாம் வகுப்பாசிரியராகவும் அத்துடன் அங்கும் விஞ்ஞானம், கணித ஆசிரியராகவும் சேவை ஆற்றியிருந்தார். 



அன்றைய தீவிர போர்க் காலச்சூழ்நிலை மிகவும் மோசமாகத் தொடர்ந்து கொண்டிருந்தமையால் வேறு வழியின்றி தாய்மண்ணை விட்டு அகன்று கனடாவுக்கு குடிபெயர்ந்தார். 

திரு .உருத்திரலிங்கம் ஆசான்.  அவர் இன்று குடும்பத்தாருடன் அங்கு அமைதியாக வாழ்ந்து  வருகின்றார்.

அல்ப்ஸ் மலைச்சாரலில்  இருந்து  த.பி.கரன்-

Post a Comment

Previous Post Next Post