செம்மண்ணின் ஆசிரியர்கள் 13 - திருமதி சிவபாக்கியம் கனகரத்தினம் (சிவம் ரீச்சர்)

 


*  இந்து சமயம் மற்றும் தமிழ் மொழி துறைகளில் அறிவியல் சார்ந்த புலமைகள்,

 *   பரந்துபட்ட ஆற்றல்கள், 

*   உறுதியான மன வைராக்கியங்கள்,

*   சில விடயங்களில் அபாரமான துணிச்சல்கள் 

என பல ஆளுமைகளை தன்னகத்தே கொண்டதொரு கிராமத்து பாடசாலையின் ஆசிரியை.

"சிவம் ரீச்சர்" என அழைக்கப்படும் திருமதி.சிவபாக்கியம் - கனகரத்தினம் ஆசிரியை.

1950 ஆம் ஆண்டு காலங்களில், குறிப்பாக தமது இளமை காலங்களில் நம்மூர் குப்பிழான் - விக்கினேஸ்வரா வித்தியாசாலையில் (இப்போது குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம் ) கல்வி கற்பித்தவர் ஆவார். அதே பாடசாலையில் கல்வியும் கற்றவர்.

 "எனது சின்னக்கா சிறு வயதில், படிக்கும் காலங்களில் பாடங்களை துரிதமாக புரிந்து கொள்ளக்கூடிய மிக திறமையான, ஆற்றல்கள் நிறைந்தவர் (Brilliant & Studious Academic)".

 "ஆனால் அன்றைய கால பாரம்பரிய சமூக எண்ணக் கோட்பாடுகளுடன் வாழ்ந்த எமது பெற்றோர், இளம்வயது பெண் என்பதால் அந்தக் காலத்தில் அவருடைய கல்வியின் ஆற்றலை தொடர்ந்து உச்ச நிலைமைக்கு கொண்டு வர, வழி காட்ட, அனுமதிக்க, தவறி விட்டனர்". 

இவ்வாறு நாசா விண்வெளி ஆய்வு நிலையத்தில் பணிபுரிந்த, அந்த ஆசிரியையின் ஒரேயொரு தம்பி  "கலாநிதி" வைத்திலிங்கம் - துரைசாமி அவர்கள் தமது இறுதிக் காலங்களில் சகோதரி பற்றி அடிக்கடி சற்று துயரங்களுடன் குறிப்பிடும் வார்த்தைகளாகும். 

எப்படியோ நம்மூர் பாடசாலைக்கு சென்று படித்தார். வீட்டிலிருந்தபடியே தமது சுய முயற்சியால் கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையில் (G.C.E - Ordinary level) சித்தியடைந்தவுடன் நல்லூரில் இருந்த ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் சேரும் சந்தர்ப்பம் கிடைத்து, தொடர்ந்து ஆசிரிய தொழில் கிராமத்து பாடசாலையில் மேற்கொள்ளும் சந்தர்ப்பமும் கிடைத்து விட்டது. 

திருமதி சிவபாக்கியம் - கனகரத்தினம் ஆசிரியை கிராமத்து மண்ணில் ஜூலை /25/1925 ஆம் ஆண்டு பிறந்தார்.

டிசம்பர்/20/2008 ஆம் ஆண்டு, தமது 83 ஆவது வயதில் அமரத்துவமாகி கொழும்பில் அவரது மரண சடங்குகள் நடைபெற்றது.

இவரது தந்தையார் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் மலேசியாவில் புகையிரத பிரிவில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

இவரது கணவர், திரு.சுப்பையா - கனகரத்தினம் அவர்கள் கிராம மண்ணில் பிறந்து, மருத்துவராக (R.M.P  - Registered Medical Practitioner) நாவலபிட்டியில் பணி புரிந்த காலத்தில், அங்குள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக இவரும் பணி புரிந்தார்.

இவரது கணவர் ஏற்கனவே ஆரம்பித்த வர்த்தகங்களுடன், தனியார் மருத்துவ கிளினிக் தொடங்கலாம் என்றதொரு நம்பிக்கையில் ஓய்வு காலம் முடிவதற்கு முன்பே அரச பணியிலிருந்து ஓய்வு பெற்று கொண்டார்.

சிவம் ரீச்சர் அவர்கள் தொடர்ந்து தமது ஆசிரிய தொழிலில் உரும்பிராய் மற்றும்  புன்னாலைக்கட்டுவனில் உள்ள பாடசாலைகளுக்கு மாற்றலாகி வந்து அங்கு தமது பணியினை தொடர்ந்தார்.

1965 ஆம் ஆண்டு அவரது கணவன் 45 ஆவது வயதில் திடீர் இருதய நோயால் இறைபதம் அடைந்ததை தொடர்ந்து 1972 ஆம் ஆண்டு தமது ஆசிரிய சேவை காலம் முடிய முன்பே ஓய்வு பெற்றார்.

ஓய்வுபெற்ற பின்பு தமது கணவர் ஆரம்பித்த தனியார் வர்த்தகங்களை தமது ஆளுமையின் திறன் கொண்டு திறம்பட நடத்தினார்.

  தமது மகன் மனோகரன் வளர்ந்து, வர்த்தகங்களை பொறுப்பேற்றதும் "இறை பக்தி கொண்ட ஆத்மீக வாழ்வே என் ஆசை" என்ற வார்த்தைகளுடன் எப்போதும் இறை சிந்தனைகளுடனும், ஆலய தரிசனங்களுடனும் வாழும் வாழ்வுக்கு தம்மை மாற்றி கொண்டார். 

சமூக பார்வை கொண்டதொரு பெண்மணி. 

பல இடங்களிலும் எவருக்கும் அதிகம் பகிரங்கப்படுத்தாது, தன்னுடைய மனதுக்கு சரியென தெரியும் தேவையான இடங்களில், தேவையான மனிதர்கள் மற்றும் அமைப்புகள், நிறுவனங்களுக்கு தமது நிதி வசதிகளை பயன்படுத்தி, உதவிகளை வழங்கி விட்டு அமைதி காப்பவர்.

அவரது வீட்டு அயலவர்கள், உறவினர்கள் மற்றும் அவரது பயிர் விளையும் காணிகளை குத்தகைக்கு எடுத்து செய்யும் கமக்காரர்கள் என யாவரினதும் அன்புக்கும் பாசத்துக்கும் உள்ளானவர்.

ஆணித்தரமான கதைகளும், செயல்பாடுகளும் என பல இடங்களில் வெளிக்கொணர்ந்திருந்தாலும் அந்த ஆசிரியையிடம் மனிதாபிமானமும், மனித நேயமும் என்றும் ஓடிக்கொண்டே இருக்கும் என்பது நெருங்கி பழகியவர்களுக்கு தெரிந்திருக்கும். 

கிராமத்து பெண்களை ஓன்று சேர்த்து, "மாதர் சங்கம்" என்னும் பெயரில் கிராமத்தில் ஏதாவது சமூக பணிகள் செய்யவேண்டும் என்பது அவரின் நன்னோக்கு எண்ணங்களில் ஒன்றாக பல வருடங்களாக இருந்து வந்தது.

இவ் நன்னோக்கின் முயற்சியாக,1970 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதி காலங்களில் 

"குப்பிழான் - ஞானதீப மகளிர் மன்றம்"

என்னும் பெயரில் ஓர் அமைப்பினை பதிவு செய்து, கிராமத்து பெண்களை இணைத்து, அதன் தலைவராக இருந்து பல சமூக பணிகளை ஆர்வத்தோடும், பல இடங்களில் தம்மிடமுள்ள நிதி வசதிகளையும் உபயோகித்து மேற்கொண்டு வந்த காலம் --------------?

உருவாக்கப்பட்ட அமைப்பில் சேர்ந்தியங்கியவர்களிடையே உருவான குழப்பம், சங்கத்தில் சேர்ந்த பெண்களின் ஒத்துழைப்புகள் பூரணமாக இல்லாத சூழல்கள் காரணமாக இறுதியில் அந்த அமைப்பு இல்லாமல் போய் விட்டது.

செம்மண்ணிலிருந்து செல்வநாயகம் ரவிசாந்- 

1983 ஆம் ஆண்டு காலங்களில் அமெரிக்காவிலிருந்து குப்பிழானுக்கு வருகை தந்த மகன் மருமகளுக்கு தமது வீட்டில் இந்து சமய முறைப்படி நடாத்தி வைத்த திருமணத்தில் அமெரிக்கா நாட்டு மருமகளுடன் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படம்.

Post a Comment

Previous Post Next Post