செம்மண்ணின் ஆசிரியர்கள் 11 - திரு சின்னத்துரை சிவகுமார்

 


அன்றொரு காலம்----------" 2002 ஆம் ஆண்டு".

அன்று பணியிலிருந்த நமது பாடசாலை அதிபர் ஒருவர் தமது கைப்பட எழுதிய மனதினை தொடும் அந்த ஓர் கடிதம். (Open letter) --------------------?

"பாடசாலையின் பிரதான மண்டபம் இடிந்து, சிதைவுபட்டு காணப்படுகின்றது.

உடைந்து, பழுதாகிய பழைய தளபாடங்களை வைத்தே வகுப்புகள் நடக்கின்றன.

கொடிய யுத்தத்தின் பாதிப்பில் மின்சாரமில்லை'.

"சிதைவுண்ட மண்டபத்தினை சீரமைத்து, எங்கள் எல்லோரின் கல்விக்கும் அஸ்திவாரமிட்ட இவ் அறிவாலயத்தினை புனரமைக்க ஏதாவது நிதி உதவி செய்யுங்கள்".

பாடசாலையின் நிலையைக் கண்டு வருந்திய , அந்த அதிபரின் கடிதத்தில் சில வரிகள். 

அந்த கடிதத்தின் மூலம் உலகமெங்கும் வாழும் செம்மண்ணின் மைந்தர்களை இரந்து வேண்டுகின்றார்.

யுத்த நிறுத்த காலங்களினை பயன்படுத்தி, அந்த வருட ஆரம்பத்தில் செம்மண்ணுக்கு விஜயம் செய்த கிராமத்து மைந்தன் ஒருவரால் அவரது கடிதம் கனடாவுக்கு எடுத்து வரப்படுகின்றது.

கனடாவிலிருந்து கிராமத்து மக்களை ஓன்று சேர்த்து இயங்குவது "குப்பிழான் - விக்கினேஸ்வரா மக்கள் மன்றம்"

அந்த வருடமே முதன் முதலில் மன்றத்தினை ஆரம்பித்து கோடை கால ஓன்று கூடல்கள் & விளையாட்டு போட்டிகளை நடாத்த தொடங்கினார்கள்.

"செம்மண் இரவு" என்னும் பெயரில் மிக சிறந்த கலைவிழா அந்த வருடமே முதன் முதலில் கனடாவில் நடாத்தப்படுகின்றது. அன்று தொட்டு இன்று வரை கனடாவில் அவர்களின் "செம்மண் இரவு" கலை விழா ஒவ்வொரு வருடமும் மிக சிறப்பாக நடாத்தப்பட்டு வருகின்றது. 

அந்த "செம்மண் இரவு" கலை விழாவில் வெளியிடப்பட்ட சஞ்சிகையில் அதிபர் அவர்கள் கைப்பட எழுதிய கடிதத்தினையும் தட்டெழுத்துகளில் பதிக்காது, பிரதிகள் எடுத்து அப்படியே இணைத்து வெளியிட்டிருந்தனர். சஞ்சிகை பல பிரதிகளாக எடுக்கப்பட்டு சர்வதேசம் எங்கும் வாழும் எங்கள்  கிராமத்தவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

(இயற்கையாய் அமைந்த அதிபரின் அந்த அழகான கையெழுத்துக்கள், உணர்வுபூர்வமான தமிழ் வசனங்கள், அந்த கடிதத்தினை மேலும் மெருகூட்டியது என்பதும் இன்னொரு விடயம்.)

அந்த காலகட்டத்தில், ஈழ விடுதலை போராட்டத்தின் தொடர்ச்சியில் சிதைவுண்ட யாழ் குடாநாடு இலங்கை ராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் வந்து விட்டது.

பல வீடுகள், ஆலயங்கள், வீதிகள் எல்லாம் சிதைவுண்ட நிலைமையில் கொடிய அழிப்பின் சிதைவுகளை குடாநாடெங்கும் அடையாளபடுத்தி கொண்டே உள்ளது.

சுமார் நூற்றாண்டு காலமாக கிராமத்து மக்களின் கல்விக்கு அஸ்திவாரம் இட்ட எம் செம்மண்ணின் பாடசாலையின் பிரதான மண்டபம் இடிந்து சிதைவுண்டு காணப்படுகின்றது.

மீதமிருக்கும் கட்டிடத்தில், இருக்கும் உடைந்த தளபாடங்களை வைத்து, மின்சாரமும் இல்லாத நிலைமையில் அந்த அதிபர் பல சிரமங்களுக்கு மத்தியில் பாடசாலையினை நடாத்தி கொண்டிருக்கின்றார்.

அவர்தான் அதிபர் திரு.சின்னத்துரை - சிவகுமார்.

கனடாவில் நடந்த குப்பிழான் மக்களின் செம்மண் விழாவில் வெளியிடப்பட்ட சஞ்சிகை சிங்கப்பூரில் வசிக்கும் எம்மூர் முதியவர் திரு.கிருஷ்ணர் ஐயா அவர்களின் கைகளில் கிடைக்கின்றது.

"சஞ்சிகையில் இணைக்கப்பட்ட அதிபர் கைப்பட எழுதிய அந்த கடிதத்தின் மனதினை தொடும் வரிகள் கிராமத்து பாடசாலையினை நோக்கி என் சிந்தனைகள், தொடர்ந்து செயல்பாடுகள் என இயக்க வைத்தது" என ஓர் நேரடி செவ்வியில் கிருஷ்ணர் ஐயா அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

அவர் முயற்சியால், அவரது நிதி பலத்தால் உருவானதே பாடசாலையின் "கிருஷ்ணர் மண்டபம்" என குறிப்பிடப்படும் இன்றய பிரதான மாடி கட்டிடம். 

உணர்வுகள் தொடுக்கப்பட்டால் அது சில நேரங்கள், சந்தர்ப்பங்களில் தட்டி திறக்கப்படும் என்பதற்கு அதிபரது இவ் உணர்வு பூர்வமான கடிதம் ஓர் உதாரணமாகும்.

திரு.சின்னத்துரை - சிவகுமார் ஆசிரியர் அவர்கள் டிசம்பர்/01/1948ம் ஆண்டு கிராம மண்ணில் அவர்களின் பெற்றோருக்கு ஒரேயொரு மகனாக பிறந்தார். நவம்பர்/16/2025ம் ஆண்டு தாயக மணியில், தமது 77 வது வயதில் அமரத்துவமடைந்துள்ளார்.

நம்மூர் பாடசாலை, யாழ் - மத்திய கல்லூரி, கொழும்பு - அலெக்ஸாண்ரா கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று, 1972ம் ஆண்டு முதன் முதலாக தமது 24வது வயதில் ஹட்டன் ஹயிலன்ட்ஸ் கல்லூரியில் (Highlands College, Hatton) கணித, விஞ்ஞான ஆசிரியராக பதவி நியமனம் செய்யப்பட்டார். தொடர்ந்து இலங்கையின் பல பாடசாலைகளில் ஆசிரியராக தமது சேவை காலத்தில் பணி புரிந்தார்.

எமதூர் பாடசாலையில் பெப்ரவரி/1977 - ஜனவரி/1978 அதன் பின்பு மே/1986 - நவம்பர்/1991 காலங்களிலும் உதவி ஆசிரியராக பணி புரிந்தார்.

ஆகஸ்ட்/2001 - நவம்பர்/2008ம் ஆண்டு காலங்களில் அதிபராக பணிபுரிந்து, டிசம்பர்/01/2008ம் ஆண்டு தமது அதிபர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 

நல்லதொரு கிராம அபிமானி. தமது பதவி காலங்களில் கிராமத்து பாடசாலையில் நிறைய சீரமைப்புகள், முன்னேற்றங்களை எப்படியோ எடுத்து சென்று அவற்றினை நிறைவேற்றி முடிக்கவேண்டும் என்பதில் தணியாத தாகத்துடன் செயல்பட்ட ஓர் அதிபர்.

கணித/விஞ்ஞான துறையில் பயிற்றப்பட்ட ஆசிரியராக (Special Trained Teacher in Mathematics & Science) தமது பணியினை ஆரம்பித்து, இறுதியில் எம்மூர் குப்பிழான்- விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் அதிபராக பதவி உயர்வுகள் பெற்று பணி புரிந்த காலங்களில் பாடசாலையின் சீரமைப்புகள், மாணவர்களின் தொகைகள் அதிகரிப்பு, கல்வியில் வளர்ச்சிகள் என அவரின் சாதனைகள் அளப்பரியதாகும்.

அவரது ஒரேயொரு மகன் திரு.சிவகுமார் - சிவானந்தன்.

வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் செயலாளராக விளங்கும் அவர் உரும்பிராயில் தமது குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.

அதிபர் சின்னத்துரை சிவகுமார் அவர்கள் அமரத்துவம் அடைவதற்கு முன்பு, தம்மை பற்றிய சுருக்கமான தகவல்கள் பாடசாலை தொடர்பான தமது சேவை காலத்தில் தமது பணிகள், சில வரலாற்று நிகழ்வுகள் என ஓர் பதிவினை உருவாக்கிருந்தார்.

இந்த இணைப்பினை கிளிக் பண்ணி அவரால் எழுதப்பட்ட பதிவுகளையும் படியுங்கள்.

சுவிஸிலிருந்து தர்மலிங்கம் - பிரபாகரன்

16.11.2025 அன்று காலமான சின்னத்துரை சிவகுமாரன் அவர்களது அந்தியேட்டி நிகழ்வும், மதிய போசன நிகழ்வும் எதிர்வரும்  17.12.2025 அன்று உரும்பிராய் கற்பகப் பிள்ளையார் கோவில் ஆலய மண்டபத்தில் (வடக்கு வீதி) இடம்பெறவுள்ளது. 





                       


      


Post a Comment

Previous Post Next Post