கிராமிய மட்டங்களிருந்து பெண்கள் பல்கலைக்கழகம் சென்று கல்வி கற்பது என்பது சமூகத்தில் பொதுவாக அவர்கள் வாழ்வில் ஓர் எட்டாத ஒரு கனியாகும். அத்தகைய பிற்போக்குத் தனமும், பெண் அடிமைத்தனமும் சமூகத்தில் மாறாமல் தொடர்ந்த வண்ணமே இருந்து வந்தது.
அவர்களின் உயர்தரக் கல்வி ஓர் வயதில் எப்படியோ நிறுத்தப்படும் மரபு நிலைமைகள் என்பது மாற்றியமைக்க முடியாததொரு தலைவிதியாகவே எங்கள் சமூகக் கட்டமைப்பில் காலம் காலமாக இருந்து வந்தது.
அந்த மாற்ற முடியாத மரபு முறைகளைத் தகர்த்து எறியலாம் என்பதற்கு வரலாற்றில் செயல் வடிவம் வழங்கிய ஒரு சிலரை உதாரணமாக எடுத்து காட்டலாம்.
தமிழ்நாட்டில் முதல் பெண் மருத்துவர், முதல் பெண் சட்டசபை உறுப்பினர்.
டாக்டர் முத்துலக்ஸ்மி ரெட்டி
(தோற்றம் : ஜூலை/30/1886 - மறைவு : ஜூலை/22/1968)
இதே போல் வீதிகளே இல்லாது இருக்கும் இந்த "குப்பிழான்" என்னும் கிராமம் எங்கே இருக்கின்றது? என்பது வெளியுலகத்துக்கு தெரியாத கால கட்டங்களில், இதே குக்கிராமத்திலிருந்து எமதூர் பாடசாலை மற்றும் சுன்னாகம் - இராமநாதன் கல்லூரி போன்ற இடங்களில் கல்வி பயின்று தொடர்ந்து பேராதனை பல்கலைக்கழகம் சென்று ஆங்கில மொழி மூலம் கற்று பட்டம் பெற்ற கிராமத்தின் முதல் பெண்மணி.
பல்கலைக்கழகப் பட்டப் படிப்பில் சம்ஸ்கிருத மொழியினையும் ஓர் பாடமாக படித்து அதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.
அவர்தான் எங்கள் மூவரையும் பெற்றெடுத்த அன்னை, கண்கண்ட தெய்வம்
திருமதி.சிவக்கொழுந்து பொன்னம்பலம் B. A (Ceylon ) ஆசிரியை.
18 ஆம் திகதி ஐப்பசி மாதம் 1935 ஆம் ஆண்டு கிராம மண்ணில் பிறந்தவர். 08 ஆம் திகதி ஆடி மாதம் 1996 ஆம் ஆண்டு, தமது 61 ஆவது வயதில் தாயக மண்ணில் அமரத்துவமடைந்திருந்தார்.
தமிழ்நாட்டு மண்ணில் பிறந்து வளர்ந்து பல சமூக அடக்குமுறைகளின் மத்தியில் படித்து சாதனைகள் புரிந்த டாக்டர் முத்துலக்ஸ்மி ரெட்டி போன்று உருவத்தில் முற்று முழுதாக பிரதி எடுக்கப்பட்ட மாதிரியானதொரு தோற்றம். உயரம். முகபாவனைகள்.
பட்டதாரியாகி, கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியும் பெற்று, ஆசிரிய தொழில் நியமனமும் கிடைத்து,1963 ஆம் ஆண்டு தமது இனிய இல்லற வாழ்விலும் இணைந்த பின்பு, சுமார் மூன்று மாதங்களின் பின்பு, பிறவி பயனின் விதியோ என்னவோ? எம் அன்னையின் வாழ்வில் நிரந்தரமாக மிக பெரும் துயரம் உருவாகி விட்டது.
"பாரிசவாதம்" (Stroke) என்னும் கொடிய நோய், வாழ்வில் வலுவளர் சவால்களுடன் வாழ்வினை தொடர்ந்தேயாக வேண்டும் என்ற கர்மாவின் நியதியினை உருவாக்கி விட்டது.
வலுவளர் சவால்களுடன் தமது ஆசிரியத் தொழில், குடும்ப நிர்வாகங்கள், பிள்ளைகளின் பிரசவங்கள், அவர்களை வளர்த்தெடுத்தல் என்பவற்றினை எல்லாம் தளராது முன்னெடுத்துச் சென்றவை யாவும் எமது அன்னையின் மனோ வலிமையின் உறுதியினை எங்கள் யாவருக்கும் ஓர் பாடமாக புகட்டியது.
குரும்பசிட்டி பொன் பரமானந்தர் வித்தியாலயம், ஏழாலை மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் ஆசிரிய பணி புரிந்து தொடர்ந்து, 1971 ஆம் ஆண்டு, முதன் முதலாக எம்மூர் பாடசாலைக்கு ஆசிரிய நியமனம் பெற்று தமது பணியினை ஆரம்பித்தார். தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு வரை எங்கள் கிராமத்து பாடசாலையில் பணியாற்றினார்.
குப்பிழான் விக்கினேஸ்வரா வித்தியாசாலையில் (தற்போது குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்) பதவி நியமனம் செய்யப்பட்ட முதல் பட்டதாரி ஆசிரியர் நமது அன்னை என்றதொரு வரலாற்று பதிவும் உண்டு.
பின்னைய காலங்களில் "சமூகக் கல்வி" என மாற்றப்பட்ட பாடங்களான சரித்திரம் (History), குடியியல் (civics subject), புவியியல் (Geography) உட்பட மற்றும் தமிழ் ஆங்கிலம் போன்ற பாடங்களை வகுப்பில் கற்பித்து வந்தார்.
வாழ்வில் வலுவளர் சவால்களின் துயரங்கள் தம்மை வந்து துன்பபடுத்தினாலும் மிகுந்த ஆர்வத்துடன், சிரமப்பட்டேனும் பாடங்களின் போதனைகளை மாணவர்கள் மனதில் விதைத்து அவர்களை கல்வியில் சிறந்தவர்களாக உருவாக்குவதில் எம் அன்னை எப்போதும் பின் நிற்பதில்லை. அதேபோல் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து அவர்களின் பிள்ளைகளின் கல்வியின் நிலைமைகள் பற்றி கலந்துரையாடுவதிலும் தவறுவதில்லை.
எங்கள் தந்தையார் வர்த்தகத் தொழிலில் வெற்றி கண்டவர் (Successful Business Entrepreneur). எமது பெற்றோரின் நன்கொடைகள் ஊடாக பாடசாலைக்கு முதன் முதலாக மின்சார வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது என்பது எங்கள் யாவருக்கும் என்றும் மன நிறைவானதொரு பணியாகும்.
எம் பெற்றோருக்கு மூன்று புத்திர செல்வங்கள். இரு பெண்கள். ஒரு ஆண். சகலரின் வாழ்வும் புலம்பெயர் நாடுகளில் இன்று இனிதே தொடர்கின்றது.
லண்டனிலிருந்து பொன்னம்பலம் - கணேசலிங்கம்-

Post a Comment