திருமதி.நாகேஸ்வரி - நடராசா ஆசிரியை
பாடசாலை வகுப்புகள் தொடங்க முன்பும் பிரதான மண்டபத்தில் கூட்டு பிரார்த்தனை நடைபெறும். அதேபோல் பாடசாலை நிறைவடையும் நேரம் கூட்டு பிரார்த்தனையின் பின்பே வகுப்புகள் முடிவடையும்.
கூட்டு பிரார்த்தனையின் போது கோரஸ் கான கீதத்தில் மாணவர்கள் ஓன்று சேர்ந்து திருமுறைகள் ஓதுவார்கள்.
இவைகள் யாவும் நம்ம கிராமத்து பாடசாலையின் அன்றாட வழமையான செயல் பாடுகளாகும்.
அந்த பிரார்த்தனை நேரம் ---------- -----------
அந்த ஆசிரியர். அப்போது அவரே "தலைமை ஆசிரியர்".
தாமே எழுந்து மேடையில் நின்று, தம்முள் கண்களை மூடி மெய் மறந்து, பக்தி பரவச நிலையில் மூழ்கி திருமுறை முற்றோதல்களை மாணவர்களோடு சேர்ந்து நடாத்துவார்.
தலைமையாசிரியரே அதனை முன்னின்று பாடல்களை சொல்லி கொடுத்து நடாத்தும் போது, மாணவர்களையும் மெல்ல மெல்ல ஓர் பக்தி பரவச நிலைமைக்கு அவரது திருமுறை பாடல்கள் இழுத்துச் செல்லும்.
அதனை இன்று நினைத்துப் பார்த்தாலே மெய் சிலிர்க்கும்.
மாணவர்களுக்குரிய அன்றாட கற்பித்தல் ஒழுங்குமுறைகளுடன், அவர்களை சைவநெறி வாழ்வியல் ஒழுக்கங்களுடன் வளர்த்து எடுத்தல் என்பதில் அதிக அக்கறையுடன் செயல்படுவார்.
அந்தக் காலம்.
அகில இலங்கை விவேகானந்தா சபையினர் நாடு முழுவதும் சகல வகுப்புகளுக்கும் இந்து சமயத்தில் பரீட்சைகளை வருடம் தோறும் நடாத்தி சான்றிதழ்களை வழங்குவது வழமையாகும். இந்தப் பரீட்சைகள் நடைபெற அண்மிக்கும் காலங்களில் இந்துசமய பாடத்தினை மட்டும் முழு நேரமாகக் கற்பிக்குமாறு சகல ஆசிரியர்களுக்கும் அவர் உத்தரவு வழங்கி அதனை வெற்றிகரமாக நிறைவேற்றுவார்.
மாணவர்கள் பலர் அந்தப் பரீட்சையில் அதிஉச்ச பெறுபேறுகளை பெற்று சாதனை படைப்பார்கள்.
நவராத்திரி காலங்களில் பாடசாலை கோலாகலமாக விழாக்கோலம் கொண்டதொரு சைவப் பாடசாலையாக காட்சி தரும்.
தொகுதி ரீதியாக, மாகாண ரீதியாக பாடசாலைகளுக்குள் நடைபெறும் உடற்பயிற்சி போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் என எல்லாவற்றிலும் எம்மூர் பாடசாலை மாணவர்களை பயிற்றுவித்து அவர்களை தாமே அழைத்துச் சென்று பங்கு பற்ற வைப்பதில் என்றும் பின் நிற்கவே மாட்டார்.
1970 -1971 ஆம் ஆண்டுகளில் நம்மூர் மாணவன் ஒருவனை மாகாண ரீதியில் நடந்த பேச்சு போட்டியில் இவரே முன் நின்று பயிற்றுவித்து, தன்னுடன் அழைத்துச் சென்று, பங்குபற்றப் பண்ணி முதலிடம் பெற்று அன்றைய கால தமிழ் பத்திரிகைகளில் குப்பிழான் - விக்கினேஸ்வரா வித்தியாசாலை மாணவனின் சாதனை என படங்களுடன் பிரசுரமாகி இருந்தது.
அந்தச் சிறு சாதனை தமது தலைமையில் பாடசாலைக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என மகிழ்ச்சியடைந்தார் என இப்போது கனடாவில் வசிக்கும் நண்பர் ஒருவர் தமது தலைமையாசிரியர் பற்றி நன்றியோடு நினைவு கொள்வார்.
பிரதான மண்டபத்தில் உயரமானதொரு மேடை இருக்கும். அந்த மேடைதான் அந்தக் காலங்களில் "தலைமை ஆசிரியரின் அலுவலகம்". அந்த மேடையிலிருந்து சகல வகுப்புகளையும் நோட்டமிடக்கூடியதாக இருக்கும்.
சில நேரங்களில் சில வகுப்புகளில் ஆசிரியர்கள் இல்லையாயின் உடனடியாக அந்தப் பாடத்தினை தாமே களமிறங்கி கற்பிக்க தொடங்கி விடுவார்.
தமிழ், இந்து சமயம், புவியியல், சரித்திரம், கணிதம் என எந்தப் பாடமாக இருந்தாலும் வகுப்புகளில் மிக திறம்பட கற்பிப்பார். வீடு சென்றதும் மாணவர்கள் செய்ய வேண்டிய பாடங்களின் தொடர் பயிற்சி திட்டங்கள் (Home works) என ஏராளமாக வழங்குவார்.
அவர்தான் இந்து சமய ஆத்மீக நெறிகளுடன் ஆசிரியப் பணி புரிந்த எங்கள் கிராமத்தவர், தலைமையாசிரியர் "நடராசா வாத்தியார்".
01 ஆம் திகதி வைகாசி மாதம் 1925 ஆம் ஆண்டில் எங்கள் கிராம மண்ணில் பிறந்தார்.
ஆசிரிய பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு தமது துணைவியாருடன் சில காலங்கள் கனடாவிலும் வசித்து வந்து, இறுதியாக 25 ஆம் திகதி ஆவணி மாதம் 2018 ஆம் ஆண்டில், தமது 93 ஆவது அகவையில் தாயக மண்ணில் அமர்த்துவமடைந்தார்.
1945 ஆம் ஆண்டு கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ஆசிரியர் பயிற்சி பெற்று,1948 ஆம் ஆண்டு முதன் முதலில் கம்பளை சகாரா கல்லூரியில் தமது ஆசிரியப் பணியினை ஆரம்பித்தார்.
1956 ஆம் ஆண்டு உருத்திரபுரத்தில் உள்ள பாடசாலையில் பணி புரிந்து தொடர்ந்து, 1958 ஆம் ஆண்டு தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்று பரந்தன் - குமரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பணி புரிந்தார்.
இந்தக் காலங்களில் வீரகேசரி பத்திரிகையில் நிருபராக பணி புரியும் வாய்ப்பு கிடைத்தது.
1964 -1968 ஆம் ஆண்டு காலங்களில், பலாலியில் உள்ள பாடசாலை, தொடர்ந்து புன்னாலைக்கட்டுவன் அமெரிக்கன் மிஷன் பாடசாலை போன்றவற்றில் தலைமையாசிரியராக பணி புரிந்தார்.
1970 ஆம் ஆண்டில் எம்மூர் குப்பிழான் விக்கினேஸ்வரா வித்தியாசாலைக்கு (இன்று விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்) நியமனம் பெற்று வந்தார்.
எம்மூர் பாடசாலையில் சில வருடங்கள் பணி புரிந்த பின்பு கோண்டாவில், தொடர்ந்து புன்னாலைக்கட்டுவனில் உள்ள பாடசாலைகளில் பணி புரிந்து 1982 ஆம் ஆண்டு தாம் பல ஆண்டுகளாக புரிந்து வந்த ஆசிரிய பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
அவர் எந்த பாடசாலையில் தலைமையாசிரியராக பணி புரிந்தாலும், அவரின் பணிக் காலங்களில் அந்த பாடசாலையின் வளர்ச்சி பாதையில் விதம் விதமான மாற்றங்கள் நடந்தேறுவது என்பது சர்வசாதாரணமான விடயமாகும்.
தமது ஆசிரிய பணிகளில் சந்தித்த, ஆளுமை மிக்க ஆசிரியை மீது காதல் கொண்டு 1950 ஆம் ஆண்டில் இருவரும் இல்லறத்தில் இணைந்து கொண்டனர்.
அவரது இல்லத்தரசி "திருமதி நாகேஸ்வரி நடராசா ஆசிரியை".
அழகானவர். அமைதியானவர். பாடசாலை தொழில்களில் ஏதாவது பிரச்சனைகள், சிக்கல்கள் வரும் போது நியாயமாக பேசி அதனை தீர்த்து வைப்பார். தலைமையாசிரியர் தொழில் செய்யும் தமது கணவரின் அலுவலக விடயங்களில் என்றும் வலதுகரமாக செயல்படுபவர்.
யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியினை பூர்வீகமாக கொண்டவர். திருமணத்தின் பின்பு முற்று முழுதாக நம்ம கிராமத்தின் பிரஜையாக மாறி விட்டார்.
02 ஆம் திகதி ஆனி மாதம் 1930 ஆம் ஆண்டில் பிறந்த திருமதி நாகேஸ்வரி நடராசா ஆசிரியை 22 ஆம் திகதி பங்குனி மாதம் 2014 ஆம் ஆண்டு தமது 84 ஆவது அகவையில் தாயக மண்ணில் அமரத்துவமடைந்திருந்தார்.
திருமதி நாகேஸ்வரி நடராசா ஆசிரியை அவர்கள்,1948 ஆம் ஆண்டு, திருநெல்வேலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் ஆசிரிய பயிற்சி பெற்று முதன் முதலில் 1950 ஆம் ஆண்டு ஆசிரிய பணியில் சேர்ந்தார். அநேகமாக தமது கணவர் தலைமையாசிரியராக பணி புரியும் பாடசாலைகளில் உதவி ஆசிரியராக பணி புரிந்தார்.
1970 ஆம் ஆண்டு தமது கணவர் நடராசா வாத்தியார் நம்மூர் பாடசாலைக்கு தலைமையாசிரியராக பொறுப்பேற்ற போது இவருக்கும் எம்மூர் பாடசாலையில் பதவி நியமனம் கிடைத்தது.
1970 -1990 ஆண்டு காலங்களில் சுமார் 20 வருடங்கள் ஓய்வு பெறும் காலம் வரை எம்மூர் பாடசாலையில் பணி புரிந்தார்.
தலைமையாசிரியராக பணி செய்யும் தமது கணவருக்கு என்றும் பக்க துணையாக நிற்கும் திருமதி நாகேஸ்வரி நடராசா ஆசிரியை அவர்கள் வகுப்பில் தமிழ், இந்து சமய பாடங்கள் கற்பிக்கும் போதெல்லாம் புராண கதைகள், இதிகாச கதைகள் பல சொல்லி மாணவர்களை கவர்ந்து இழுத்து தம்முள் வைத்திருந்து பாடங்கள் புகட்டுவதில் தலை சிறந்ததொரு ஆசிரியை ஆவார்.
பதினொரு புத்திரச் செல்வங்களை பிரசவித்து, அவர்களையும் கண்காணித்து, இனிதே வளர்த்தெடுத்து, அதே நேரம் தமது ஆசிரிய பணிகள், தலைமையாசிரியர் தொழிலில் கணவனுக்கு உறுதுணையாக நின்றவை யாவும் ஓர் பெண்ணினத்தின் அதி உச்ச சாதனை. அவர்களின் வம்சம் ஆல் போல் தழைத்து, அறுகு போல் பரந்து கொண்டு செல்கின்றமை என்பதும் மிகப்பெரிய பேறு ஆகும்.
சுவிஸிலிருந்து தர்மலிங்கம் - பிரபாகரன்

Post a Comment