அர்ப்பணிப்போடும், கடமையுணர்வுகளோடும் சின்னம்சிறு மாணவச் செல்வங்களுக்கு கல்விச் செல்வம் வழங்கும் அந்த "ஆசிரியை".
கிராம மண்ணில் வாழ்ந்து, கிராமத்து பாடசாலையில் கல்வி கற்றவர்கள் எவரும் இலகுவாக அந்த ஆசிரியையினை மறந்துவிட மாட்டார்கள்.
ஏனெனில் குப்பிழான் கிராமத்தில் உள்ள இரு தலைமுறையினர், கல்வியில் முக்கியமான அஸ்திவாரம் என்று சொல்லும் ஆரம்பக் கல்வியினை அந்த ஆசிரியையிடமிருந்து கற்றுக் கொள்ளாமல் எவரும் மேலே கடந்து வரவில்லை என்பது நூற்றுக்கு நூறு வீதம் உண்மையாகும்.
ஆரம்ப வகுப்பு, முதலாம் வகுப்புகளில் அழித்து அழித்து எழுதும் ஓர் சிலேற்றில் எழுத்தாணி ஒன்றினால் ஒவ்வொரு மாணவனினதும் கையைப் பிடித்து எவ்வளவு சிரமபட்டேனும் தமிழ் எழுத்துக்களை எழுத பழக்கி எடுக்காமல் விடமாட்டார்.
அந்த காலத்தில் பென்சிலை எழுத்தாணியாக உபயோகித்து கடதாசி கொப்பிகளில் எழுதும் வழமைகள் இரண்டாம் வகுப்பில் பாடசாலைகளில் ஆரம்பிக்கப்படும்.
கொப்பியில் ஒவ்வொரு சொற்களும் வசனங்களாக, கோடுகள் இடப்பட்ட இடத்தில் வரி பிசகாமல் நல்ல உறுப்பாக எழுதப் பழக வேண்டும். கொஞ்சம் வரிகள் தவறி, நல்ல உறுப்பு எழுத்தாக எழுதவில்லையானால் விழுகின்ற ஏச்சு கொஞ்ச நஞ்சமாக இருக்காது. சில நேரங்களில் ஒரு சிறு தடி வைச்சு இரண்டு தட்டும் நடக்கும். அங்கு ஒரு மாணவரும் தப்ப முடியாது.
அந்த ஆசிரியையிடம் கிராமத்து பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்ற அனைவரும் நன்றாக தமிழ் எழுதும் திறமைகள், பத்திரிகைகள், நூல்களை படித்து விளங்கிக் கொள்ளும் திறமையுள்ளவர்களாக அநேகமாக இருப்பார்கள்.
அதுதான் ஓர் ஆசிரியையின் அர்பணிப்போடும் கடமையுணர்வோடும் சேர்ந்த, வலிமையானதொரு அஸ்திவாரம்.
வகுப்பில் சின்னம் சிறு மாணவர்களுடன் கோரஸ்தான கீதத்தில் தாமும் சேர்ந்து பாடல்கள் பாடி கற்பிப்பது, சிறு சிறு கதைகள் சொல்லி அவர்களை உற்சாகப்படுத்துவது, போன்றவை அந்த ஆசிரியைக்கு கை வந்த கலையாகும். அந்த கலையினூடாக மாணவர்களை வகுப்பில் என்றும் தன்வசம் அரவணைப்பில் வைத்திருப்பார்.
இத்தகைய பாணிகளில், அற்பணிப்புகள் நிறைந்த கடமை உணர்வுகளுடன் சிறு பிள்ளைகளின் பாடங்களை அன்றொரு காலம் கிராமத்து பாடசாலையில் நடாத்திய, ஆரம்ப வகுப்புகளின் மாணவ, மாணவிகளின் ஏடு தொடக்கும் குரு.
திருமதி கனகம்மா வைத்திலிங்கம் ஆசிரியை.
20 ஆம் திகதி ஆவணி மாதம் 1919 ஆம் ஆண்டு ஓர் கிராமத்து ஆசிரியரின் மகளாக பிறந்தார்.
("இராமு வாத்தியார்" என அழைக்கப்படும் அவரது தந்தை திரு.இராமநாதன் ஆசிரியர் அவர்களே குப்பிழான் கிராமத்திலிருந்து வந்த முதல் ஆசிரியர் என சொல்லப்படுவதுண்டு.)
திருமதி கனகம்மா வைத்திலிங்கம் ஆசிரியை அவர்கள், 15 ஆம் திகதி வைகாசி மாதம் 1992 ஆம் ஆண்டு, தமது 73 ஆவது அகவையில் கிராம மண்ணில் அமரத்துவம் அடைந்திருந்தார்.
அவரது பிள்ளைகள் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர்.
தமது ஆசிரிய தொழிலின் ஆரம்ப காலங்களில் திருக்கேதீஸ்வரம், தொல்புரம், பண்ணாகம் போன்ற இடங்களில் உள்ள பாடசாலைகளில் முதலில் பணி புரிந்த பின்பு, தொடர்ந்து பல வருட காலங்கள் குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் பணி செய்து ஆவணி மாதம் 1977 ஆம் ஆண்டில் தமது ஆசிரிய பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
சகல மாணவர்களையும் ஓன்று சேர்த்து பிரதான மண்டபத்தில் அடிக்கடி நடைபெறும் நாயன்மார் குருபூஜைகளில் கதைகள் சொல்வது போல், சிறு வயது மாணவர்களை கவரும் விதத்தில் நாயன்மார்களின் வரலாறுகளை குறிப்பிட்டு சைவ பேருரை நடத்துவார்.
நாயன்மார்கள், சமயகுரவர்களின் வரலாறுகளை கதையாக தமது பேருரையில் அவர் மணிக்கணக்காக சொல்லிக் கொண்டு போகும் போது, மண்டபத்தில் இருக்கும் சிறு மாணவர்கள் யாவரும் அமைதியான நிசப்தம் என்ற நிலைமையில் (Pin drop silence) இருந்து கதைகள் கேட்பது மிக அழகாக இருக்கும்.
மாணவர்களுக்கு சைவ அனுஷ்டானங்கள், பக்தி வழிபாடுகள் பற்றியெல்லாம் அறிவுரைகளை கதைகள் பாணியில் போதனைகள் செய்வார்.
அதனை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என கண்டிப்போடு அறிவுறுத்துவார்.
குப்பிழான் பாடசாலை ஆசிரியர்களின் வரலாற்று ஆவணத்தில் அழிக்க முடியாது என்றும் பதிவு செய்யப்படவேண்டிய ஓர் ஆசிரியை.
அந்த ஆசிரியை என்றோ ஒரு காலங்கள் கிராமத்து பாடசாலையில் வைத்து அர்ப்பணிப்புடன் போட்ட பலமான அஸ்திவாரம் தான் இன்றும் உலகமெங்கும் எம்மூரவர்கள் பலரை தலைநிமிர்ந்து வாழ வைத்துக் கொண்டுள்ளது.
- கனடாவிலிருந்து சண்முகம் - கணேசலிங்கம் (Banker)

Post a Comment