இளமைக் காலங்களில் அவர் மிக அழகும் கம்பீரமும் நிறைந்தொரு இளைஞன்.
(இங்கு இணைக்கப்பட்டதும் அவரது இளமைக் கால படம்)
குப்பிழான் கிராமத்து மண்ணின் தலைசிறந்த உதைபந்தாட்ட வீரன். அது மட்டுமல்ல கரபந்தாட்டத்திலும் (Volley ball game) தலை சிறந்த வீரன்.
குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழகம் பங்குபற்றும் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டிகளில், இவரது கால்களுக்குள் பந்து அகப்பட்டால் அது முன்னேறிப் பாயுமே தவிர பின்னோக்கி என்றுமே நகராது என அன்றைய கால கிராமத்தின் உதைபந்தாட்ட விளையாட்டுகளின் ரசிகர்கள் அடிக்கடி சொல்லுவார்கள்.
வயதுகள் போகத் தொடங்க, பந்தோடு மைதானத்தில் நின்று துரத்தி விளையாடும் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டிகளில் எல்லோரையும் போல் அவரால் தொடர்ந்து விளையாட முடியாமல் போனது இயற்கையானது.
ஆனால் கரபந்தாட்ட விளையாட்டுகளிலும், சுற்றுப் போட்டிகளிலும் பங்குபற்றுவதனை அவர் நிறுத்தவேயில்லை. கரப்பந்தாட்ட விளையாட்டுகள் என்றால் அவர் தமது வாழ்வில் வேறு எல்லா சிந்தனைகளையும் மறந்திடுவார்.
முன்னொரு காலம் குப்பிழான் - விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்துக்கு முன்பு ஓர் கரபந்தாட்ட மைதானம். மாலை நேரங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டேயிருக்கும்.
தினமும் மாலை நேரங்களில் பல தந்தைமார்கள் அங்கு துள்ளித் துள்ளி கரபந்தாட்டம் விளையாடுவது பார்ப்பதற்கே புத்துணர்வாக இருக்கும்.
அந்த மைதானத்தில் இவர் இல்லாத நாள் என்று ஒருபோதும் இருக்காது.
கிராம மண்ணில், கிராமத்து நண்பர்களுடன் ஆரம்பித்த அவரது ஆர்வம் மிக்க விளையாட்டுத் துறையே அவர் வாழ்வின் நிரந்தர தொழிலாகவும் அமைந்து விட்டது.
அவர் பலாலி - ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பயிற்றப்பட்ட, இலங்கை அரச பாடசாலைகளில் ஓர் "விளையாட்டுத் துறை ஆசிரியர்" (Trained School sports teacher).
தமது விளையாட்டுத் துறை ஆசிரியத் தொழில் மூலம் விளையாட்டுத் துறைகளில் பல மாணவர்களின் வெற்றிக்கு வழி காட்டியவர். தமது பாடசாலை அணிகளை போட்டிகளில் வெற்றி பெற வைத்தவர்.
அவர் தான் திரு.கந்தையா - சுப்பிரமணியம் ஆசிரியர்.
("குழாயற்றை சுப்பு வாத்தியார்" என்பது அவரை இலகுவாக எல்லோரும் அடையாளப்படுத்தும் அன்றைய கால கிராமத்தின் குறியீட்டு சொல். "குழாயர்" என்பது அவரது தந்தையருக்குரிய செல்லப் பெயர்.)
12 ஆம் திகதி சித்திரை மாதம் 1932 ஆம் ஆண்டு கிராம மண்ணில் பிறந்தார்.
கிராமத்தின் வீதிகள், சந்திகள், விளையாட்டு மைதானங்கள் என எங்கு அவர் நின்றாலும் கலகலப்பாகவும் நட்புடனும் கிராமத்தவர்களுடன் பழகுவது அவரின் இனிய சுபாவங்களில் ஒன்றாகும்.
தமது விளையாட்டுத் துறை ஆசிரியர் தொழிலை மலையகம், மன்னார் போன்ற இடங்களில் உள்ள பாடசாலைகளில் பணிபுரிந்து, தொடர்ந்து வயாவிளான் மத்திய கல்லூரியில் விளையாட்டுத்துறை ஆசிரியராகவும், தமிழ், சமூகவியல், சமயம் போன்ற பாடங்களையும் கற்பித்துள்ளார். பின்னர் வடக்குப் புன்னாலைக்கட்டுவன் அமெரிக்கன் தமிழ்க்கலவன் பாடசாலையில் வகுப்பாசிரியராகவும் தமிழ், சமூகவியல், சமய பாட ஆசிரியராகவும் கடமையாற்றி இருந்தார். அதன் பின்னர் கல்வியங்காடு செங்குந்தா பாடசாலையிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
தொடர்ந்து மாற்றலாகி, நம்மூர் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் தமது பணியினை ஆரம்பித்து சில காலங்களில் ஓர் நாள் ------------------------
10 ஆம் திகதி ஐப்பசி மாதம் 1987 ஆம் ஆண்டு.
அன்றைய நாளே அவரது இறுதி மூச்சு. அப்போது அவருக்கு 55 வயது.
எவரும் எதிர்பாராத நிலமையில் இருதய நோயால் திடீர் என நிகழ்ந்த காலம் தப்பிய அவரது அமரத்துவம், எவரும் எதிர்பாராத ஒன்றாகும்.
எல்லாம் இயற்கையின் நியதி.
அவரது பிள்ளைகள் யாவரும் இப்போது ஐரோப்பிய நாடுகளில் வசித்து வருகின்றனர்.
சுவிஸிலிருந்து தர்மலிங்கம் பிரபாகரன்-

Post a Comment