திரு.மூத்ததம்பி - கதிரவேலு ஆசிரியர்
திருமதி- தவமணி - கதிரவேலு ஆசிரியை
அன்றைய காலங்களில் இலங்கையில் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆண் ஆசிரியர்கள் பொதுவாக அணியும் ஓர் தேசிய உடையானது (National Teacher's Dress code) மரபு ரீதியாக இருந்து வந்தது.
வெள்ளை வேட்டி மற்றும் வெள்ளை நஷனல் மேலங்கி, என அணிந்து பாடசாலைக்கு வருவார்கள். அந்த உடை என்பது அவர்களின் தொழிலை எப்போதும் சமூகத்தில் உயர்வானவராக அடையாளப்படுத்திக் கொண்டே இருக்கும். பார்ப்பதற்கும் ஓர் கவர்ச்சி இருக்கும். சிங்கள பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் பலரும் அந்த மரபு முறையினையே பின்பற்றி வந்தார்கள்.
கால ஓட்டங்களில் ஆங்கில காலனித்துவ ஆதிக்கங்கள் காரணமாக இம்மரபு முறைகளில் மெல்ல மெல்ல மாற்றங்கள் உருவாகின. அவர்கள் அணியும் உடை என்பது அவர்களின் வசதிக்கு ஏற்ற மாதிரி நீளக்கால்சட்டை & சேர்ட் (Trousers & Shirts ) என படிப்படியாக மாறிவிட்டது.
ஆனால் அந்த ஆசிரியர் மட்டும் அதில் முற்றிலும் மாறுபடாதவராகவே என்றும் இருப்பார்.
வெள்ளை கதர் வேட்டி, அரைக்கை சேர்ட் (Half sleeve Shirt) மட்டும் எப்போதும் அணிந்து வருவார்.
அவரது இளமைக் காலங்களில் அந்த நடை உடையே அவரை சிறப்பாக கம்பீரப்படுத்தும்.
கிராமத்து நடை உடைகள். கிராமத்து மண் வாசனைகளோடு கலந்த பாணிகளில் எப்போதும் பேச்சுகள், கதைகள். கிராமத்தில் எவரையும் மகிழ்ச்சியாக தாமாகவே தட்டிக் கதைக்கும் சுபாவங்கள்.
சில இடங்களில் தேவையேற்படும் போது ஆணித்தரமான கதைகள், பேச்சுக்கள்.
ஆசிரியர் = ஆசு + இரியர், என தெளிவு படுத்தலாம். "ஆசு" என்றால் "தவறு" என்பதும் "இரியர்" என்றால் "திருத்துபவர்" எனவும் தமிழ் இலக்கணத்தில் அர்த்தப்படுத்தப்படும். அதாவது "ஆசிரியர்" என்றால் "தவறுகளை திருத்துபவர்" என வரைவிலக்கணப்படுத்தலாம்.
இவ்வரைவிலக்கணத்தினுள் வரும் முழுமையான சுபாவங்களுடன் சேர்ந்த ஓர் ஆசிரியராக அமைந்தவர்.
அவர் தான் திரு.மூத்ததம்பி - கதிரவேலு ஆசிரியர்.
குப்பிழான் மண்ணில் ஜனவரி/26/1933 ஆம் ஆண்டு ஓர் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.
ஆகஸ்ட்/02/1974 ஆம் ஆண்டு. அவருக்கு அப்போது 41 வயது.
எங்கள் செம்மண்ணின் பாடசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராக (Trained Teacher) அவர் ஆசிரியராக பணி புரிந்து கொண்டிருந்த காலம்.
எழுதப்பட்ட கர்மாவின் தலை விதியோ என்னவோ? எதிர்பாராத உடல் நோய், காலம் தப்பிய நிலையில் அவரின் வாழ்வினை இடைநடுவே பறித்து விட்டது. அன்றைய காலம் பாடசாலை வட்டாரம் உட்பட கிராமமே மீள முடியாத சோகத்தில் மூழ்கியிருந்தது.
மலையக பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் பல வருடங்களாக பணிபுரிந்து, இறுதியில் 1970 ஆம் ஆண்டு எம்மூர் குப்பிழான்- விக்கினேஸ்வரா வித்தியாசாலைக்கு (இப்போது விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்) மாற்றலாகி வந்து ஆசிரிய பணி புரிந்தார். இறுதியாக 1974 ஆம் ஆண்டு அமரத்துவம் அடைந்த காலம் வரை அவரது பணி எம்மூர் பாடசாலையிலேயே தொடர்ந்தது.
இவரது வாழ்க்கை துணைவியார் திருமதி.தவமணி -கதிரவேலு ஆசிரியை.
எங்கள் கிராம மண்ணில் மே/27/1937 ஆம் ஆண்டு பிறந்தவர்.
கடந்த ஜூலை/17/2025 ஆம் ஆண்டு, தமது 88வது வயதில் கனடாவில் அமரத்துவமடைந்தார்.
பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராக (Trained teacher), பதுளை, ரத்மலானை, தீவுப் பகுதி, புன்னாலைக்கட்டுவன் போன்ற இடங்களில் உள்ள பாடசாலைகளில் கற்பித்து இறுதியில் தமது ஓய்வு பெறுவதற்கு அண்மித்த காலங்களில் எம்மூர் குப்பிழான் - விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்பித்தார்.
இன்சொல்லன்றி வேறு எதுவும் பேசாதவர். என்றும் இனிய வசீகர முக மலர்ச்சிகளுடன் (Smiling Charismatic Faces ), மாணவர்களை அன்போடு அரவணைத்து செல்லும் சுபாவம் உடையவர். பாடசாலை சமூகத்துடனும் என்றும் இணைந்து செல்பவர்.
வெவ்வேறு காலங்களில் கிராமத்து பாடசாலையில் கற்பித்த இவ் கருத்தொருமித்த ஆசிரிய தம்பதிகள் இருவரும் கலைத்துறை சம்பந்தப்பட்ட பாடங்களை (Arts subjects) சிறு வகுப்புகள் தொடக்கம் மேல் வகுப்புகள் வரை கற்பிப்பது வழமையாகும்.
(சுவிஸிலிருந்து தர்மலிங்கம் - பிரபாகரன் )



Post a Comment