குப்பிழான் வடக்குச் சமாதி கோவிலடியைச் சேர்ந்த சமூக சேவகர் நவரத்தினம் வயிரவநாதன் (வயிரவி அண்ணை) திங்கட்கிழமை (17.11.2025) அன்று காலமானார்.
எம்மூர் ஆலயங்கள், சனசமூக நிலையங்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்ததோடு மட்டுமல்லாமல், தன்னையும் ஒரு தொண்டனாக தன்னலம் கருதாது ஈடுபடுத்துபவர். சமாதான நீதவானாகவும் விளங்கிய அவர் எமது பிரதேச அபிவிருத்திப் பணிகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்.
தனது வீட்டுக்கு அருகே லெனின் சனசமூக நிலையத்தை உருவாக்கி அதன் ஸ்தாபராகவும், தலைவராகவும் விளங்கினார். குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தின் முன்னாள் தலைவராகவும், கற்கரை கற்பக விநாயகர் ஆலயம், சமாதி அம்மன் ஆலயங்களின் நிர்வாக சபை உறுப்பினராகவும் விளங்கினார்.
குறிப்பாக கற்கரைப் பிள்ளையார், சொக்கவளவுப் பிள்ளையார், கன்னிமார் அம்பாள் ஆலயம் ஆகியவற்றின் அன்னதான சபைகளில் ஆரம்பம் முதலே இளைஞர்களையும் ஒருங்கிணைத்து சிறப்பாக முன்னின்று நடத்துவார்.
ஊர்மக்களின் வீடுகளில் இடம்பெறும் நன்மை, தீமை காரியங்களுக்கு முன்னின்று சேவையாற்றுபவராவார். குறிப்பாக மரணச் சடங்குகளில் கிரியைகள் தொடக்கம் - தகனம் வரை முன்னின்று வழிகாட்டுவார்.
குப்பிழானில் இயக்க இளைஞர்களால் சாதி ஒழிப்புப் போராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட போது பலரின் எதிர்ப்புகளையும் மீறி முதலாவதாக ஆதரவு வழங்கியவராவார்.
சிறந்ததொரு தொழில் முயற்சியாளனாகவும், விவசாயியாகவும் விளங்கியவர், ஊரவர்களால் அன்பாக வயிரவி அண்ணை என அழைக்கப்பட்டார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை வியாழக்கிழமை (20.11.2025) காலை 9.30 மணிக்கு குப்பிழான் வடக்கு சமாதிகோவிலடியில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று தகனக் கிரியைக்காக குப்பிழான் தெற்கு காடகடம்பை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
ஆழ்ந்த அஞ்சலிகள் ஐயா...
செ.கிரிசாந்-
கண்ணீர் அஞ்சலி
நம்ப முடியவில்லை
காந்தீய வழியில் நின்று
கண்ணிய வாழ்வு வாழ்ந்து
பிரதேச அபிவிருத்தி வேண்டி
புரட்சிகள் பலவும் செய்து...
புதுமைகள் அதற்குள் புகுத்தி
லெனின் பெயரில் நல்ல
சனசமூக நிலையம் தந்து
விவசாயியாய் தொழிலாளியாய் முதலாளியாய்
சுயபொருளாதார பலம் வேண்டி
உண்மையாய் உழைத்த உத்தமர்
நேர்மையாய் உழைத்த உழைப்பாளி
இன்று
உறங்கிய செய்தி கேட்டு
நம்ப முடியவில்லை என்னால்
நம்ப முடியவில்லை -
ஆயினும்
“பிறப்பு உண்டேல் இறப்பு உண்டு என
அமைதி கொள்வோமாக”
அன்னாரின் ஆத்மா சாந்தி வேண்டிக்
கற்கரையான்
பாதம் பணிந்து வேண்டுகின்றேன்”
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தி்ல்லையம்பலம் சசீதரன் (குப்பிழான்)
நாளை காலை இறுதியாத்திரை நேரடி ஒளிபரப்பு


Post a Comment