"எங்கடை தில்லையம்பலம் சேர் "
என்ற வார்த்தைகள் முன்னொரு காலம் கிராமத்தின் சிறு குழந்தைகள் ஒவ்வொவருவர் வாயிலும் அடிக்கடி வந்து கொண்டிருக்கும்.
கிராமத்து மண்ணில் வசிக்கும் அவர் அநேகமாக தினமும் பாடசாலைக்கு நடந்து வருவார்.
பாடசாலைக்கு செல்லும் சிறு பிள்ளைகளின் பெற்றோர் சிலர் தங்களின் வீட்டு படலையடியில் பிள்ளையோடு நிற்பார்கள். தில்லையம்பலம் ஆசிரியர் அவர்களை எதிர்கொள்ளும் போது, பாடசாலைக்கு அழைத்து செல்லும் பொறுப்பினை அவரே மனமுவந்து அந்த கணத்தில் ஏற்றுக்கொள்வார். அந்த பிள்ளைகளின் கையை பிடித்து கவனமாக பாடசாலைக்கு அழைத்து சென்று, திரும்பி வரும் போதும் கவனமாக கூட்டி வருவார்.
இவரது இத்தகைய மனிதநேயம் மிக்க சுபாவங்களைப் பற்றி இப்போது வளர்ந்து பெரிய நிலைமைக்கு வந்த பின்பு அதே மாணவர்கள் நன்றி உணர்வோடு பல இடங்களில் தெரிவித்துள்ளார்கள்.
முதலாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை மட்டும் கல்வி கற்பிக்கும் அந்த ஆசிரியர் சிறு பிள்ளைகள் தம்மை அளவு கடந்து நேசிக்கும் அளவுக்கு தமது மாணவ செல்வங்களின் மனதில் கொள்ளை கொண்டிருந்தார் என்பது ஆசிரியர் குழுவினருக்கே ஓர் எடுத்துக்காட்டாக (Role model) இருக்குமளவுக்குரிய சிறப்பானதொரு அம்சமாகும்.
திரு.செல்லப்பா - தில்லையம்பலம் ஆசிரியர் அவர்கள் 29 ஆம் திகதி புரட்டாதி மாதம் 1944 ஆம் ஆண்டு செம்மண்ணில் பிறந்திருந்தார்.
24 ஆம் திகதி ஆடி மாதம் 1995 ஆம் ஆண்டு தாயக மண்ணில் தமது 51 ஆவது வயதில், எங்கள் கிராமத்து பாடசாலையில் பணியில் இருந்த காலத்திலேயே சுமார் 29 வருட ஆசிரிய பணிகளின் பின்பு அமரத்துவம் அடைந்து விட்டார்.
அவர் அமரத்துவமடைந்த போது, எங்கள் குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தின் உப - அதிபராக அந்த நேரம் இருந்த திரு.மா.சின்னத்துரை ஆசிரியர் அவர்கள் "நீங்கா நினைவுகள்" என்னும் தலைப்பில், அவரது நினைவு மலரில் திரு .தில்லையம்பலம் ஆசிரியர் பற்றி பின்வருமாறு தெரிவித்திருந்தார்.
"நெற்றி நிறைய நீறு. அதன் மேல் நாமப் பொட்டு. அகன்ற முகம். உதட்டிலே சிரிப்பு. இதுதான் அமரர் செல்லப்பா தில்லையம்பலம் ஆசிரியர் அவர்களின் தோற்றம்.
அமரர் அவர்கள் பத்து ஆண்டுகளாக என்னுடன் சக ஆசிரியராக சேவை ஆற்றியவர். மாணவர்களை அன்புள்ளத்துடன் ஆற்றுப்படுத்துவதில் வல்லவர். முகத்தில் கோபமே வராத குணசீலர். பாடசாலையில் எப்பணியாயினும் முழு மனத்துடன் செய்து முடிப்பவர். எவ் ஆசிரியரிடமும் குறைகேளாத ஆசிரியப் பெருந்தகை. அவரது பிரிவு எம் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்துக்கு பெரும் பேரிழப்பே ஆகும்."
திரு.தில்லையம்பலம் ஆசிரியர் அவர்கள் 14 ஆம் திகதி பங்குனி மாதம் 1966 ஆம் ஆண்டில், தமது 22 ஆவது வயதில் முதன் முதலாக ஆசிரிய பணியினை மலையகத்தில் ஆரம்பித்தார்.
தொடர்ந்து 1976 -1977 ஆம் ஆண்டு காலங்களில் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி பெறும் சந்தர்ப்பம் கிடைத்தது.
ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பயிற்சி முடிவடைந்தவுடன் கண்டியில் உள்ள அரசினர் பாடசாலையில் 1978 - 1985 ஆம் ஆண்டு வரை கற்பித்தார்.
29.03.1985 இல் முதன் முதலாக எம்மூர் குப்பிழான்- விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்துக்கு மாற்றலாகி, பதவி நியமனம் செய்யப்பட்டு, 1995 ஆம் ஆண்டு அமரத்துவம் அடையும் நாள் வரை ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு ஓர் நல்லாசிரியராக பணி புரிந்தார்.
அவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள். இரு பெண் பிள்ளைகள். ஓர் ஆண் மகன் 2023 ஆம் ஆண்டில் புலம்பெயர் நாடு ஒன்றில் அமரத்துவம் அடைந்து விட்டார். திரு.தில்லையம்பலம் சசிதரன் என்னும் இன்னொரு மகன் இன்று பாடசாலை ஆசிரியராக தாயக மண்ணில் பணி புரிந்து வருகின்றார். ஏனைய மூன்று பிள்ளைகளும் தற்போது தத்தமது குடும்பத்தினருடன் கனடாவில் வசித்து வருகின்றனர்.
சுவிஸிலிருந்து தர்மலிங்கம் பிரபாகரன்-

Post a Comment