"சிவஞான வாத்தியார்" என்ற அந்தப் பெயருக்கே ஊரில் உயர் மதிப்பளிக்கும் வகையில் தமது சுபாவங்களை தமக்கென உரியவராக்கி கொண்டவர் - "அந்த ஆசிரியர்".
குப்பிழான் கிராம மண்ணில் 11 ஆம் திகதி ஆவணி மாதம் 1926 ஆம் ஆண்டு அவதரித்தார். 01 ஆம் திகதி ஐப்பசி மாதம் 1999 ஆம் ஆண்டு கனடாவில் அமர்த்துவமடைந்தார்.
கிராம மண்ணிலிருந்து படிக்கும் காலங்களிலேயே கல்வியில் மிக விவேகமானவர் என்றதொரு பெயர் அவருக்கு இருந்ததாக அவரோடு ஒன்றாகப் படித்தவர்கள் அடிக்கடி சொல்லிக் கொள்வார்கள்.
மிகவும் கூர்மையானவர். அமைதியானவர். அவர் வாய் திறந்து பேசினால் அந்த ஒவ்வொரு வார்த்தையிலும் ஓர் பெறுமதி இருக்கும். அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் நேர்மை, தர்மம், நியாயங்களை மீறாத வார்த்தைகளாகவே என்றும் இருக்கும். அவரது மனிதாபிமான உணர்வுகளைப் பற்றி சொல்ல வேண்டுமானால் ஊரில் பல கதைகள் சொல்லலாம்.
அவரது மெல்லிய கருமை நிறத் தோற்றம் அவருக்குரியதோர் கம்பீரமானதொரு தோற்றமாகும்.
பாடசாலைக்கு செல்லும் போது ஆசிரியருக்குரிய வேட்டி - சட்டை அணிந்து கம்பீரமாக வருவார்.
பாடசாலை பணிகள் முடிவடைந்த பின்பு, சாரத்தினை மடித்து கட்டி கொண்டு, தோளில் ஒரு துவாய் துண்டினை மட்டும் சேட்டுக்கு பதிலாக அணிந்து கொண்டு தமது விவசாய பணிகளுக்காக சைக்கிளில் கிராமத்து வீதியால் அமைதியாக வலம் வரும் அவரது காட்சி அற்புதம். அதிலும் ஓர் கம்பீரம் இருக்கும்.
1952 ஆம் ஆண்டில் புன்னாலைக்கட்டுவன் ஆங்கில வித்தியாலயத்தில் தமிழ் மொழி கற்பிக்கும் ஓர் ஆசிரியராக முதன் முதலில் நியமனம் செய்யப்பட்டார். அந்த நேரம் எம்மூரில் உள்ள பல சிறுவர் சிறுமிகளை தம்மோடு அழைத்துச் சென்று அங்கு சேர்ப்பித்து கல்வியினை அவர்கள் தொடர்வதில் ஊக்குவிப்பார்.
தொடர்ந்து , 1962 ஆம் ஆண்டு பேராதனை -அரசினர் பாடசாலையிலும், 1965 ஆம் ஆண்டில் மன்னாரில் உள்ள பாடசாலையிலும் கல்வி கற்பித்தார்.
1973 ஆம் ஆண்டு எம்மூர் பாடசாலையான குப்பிழான் - விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்துக்கு மாற்றலாகி வந்து, மேல் வகுப்புகளுக்கு கணிதவியல், தமிழ் போன்ற பாடங்களை கற்பித்தார். தொடர்ந்து இதே நம்மூர் பாடசாலையில் உப - அதிபராக நியமனம் செய்யப்பட்டு 1986 ஆம் ஆண்டு, சுமார் 13 ஆண்டுகள் தொடர்ச்சியாக கிராமத்தின் கல்விக் கூடத்தில் பணி புரிந்து விட்டு ஓய்வு பெற்றார்.
அவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள். ஒரு பெண் பிள்ளையும் இருக்கிறார். அவர்களில் ஆண் பிள்ளை ஒருவர் அமரத்துவம் அடைந்து விட்டார். ஏனையோர் கனடாவிலும், டென்மார்க்கில் இப்போது வாழ்ந்து வருகின்றனர்.
சுவிஸிலிருந்து தர்மலிங்கம் - பிரபாகரன்

Post a Comment