
அந்தக் காலங்களில் "ஆசிரியர்'" என்ற சொற்பதத்தினை விட பெயருக்கு பின்னால் "வாத்தியார்" என்ற பெயர் அடிக்கடி ஒவ்வொருவரின் வார்த்தையிலும் வந்து கொண்டிருக்கும்.
இங்கும் "மார்க்கண்டு வாத்தியார்" என்ற வார்த்தையே ஒவ்வொருவரின் நினைவிலும் வரும்.
04 ஆம் திகதி தை மாதம் 1917 ஆம் ஆண்டு கிராம மண்ணில் பிறந்தவர் "மார்க்கண்டு வாத்தியார்". ஏனைய பல ஊர்களில் உள்ள பாடசாலைகளில் பணி புரிந்துவிட்டு இறுதியாக மாற்றலாகி வந்து,1965 - 1974 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் குப்பிழான் விக்கினேஸ்வரா வித்தியாசாலையில் ஓய்வு பெறும் காலம் வரை கல்வி கற்பித்தவர்.
அவர் ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு அனேகமாக வகுப்புகள் நடத்துவார். அவரது குரல் எப்போதும் வழமையினை விட கொஞ்சம் சத்தமாகவே இருக்கும். வகுப்புகளில் குழப்படிகள் செய்யும் மாணவர்களை தமது வன்மையான குரலால் சற்று மிரட்டி அடக்கிக் கொள்ளும் அவரது பாணிகள் அவரிடம் கல்வி பயின்றவர்களுக்கு இன்று நினைத்தாலே இனிக்கும் பசுமையான நினைவாக இருக்கும்.
மிகத் திறமையான மாணவர்களை பார்த்து மகிழ்ச்சி கொள்வார். ஊரில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் ஆற்றல்கள், திறமைகளைப் பற்றி ஏனையோருடன் அடிக்கடி கதைப்பதில் பெருமிதம் கொள்வார்.
முன்னைய காலங்களில் சில வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் ஆரம்ப காலக் கல்வியினை இடைநிறுத்தம் செய்து, கிராமத்தில் இயங்கும் சிறு கைத்தொழிலான புகையிலை சுருட்டும் வேலைக்கு அனுப்பி விடுவார்கள்.
கோபக்கனல் பறக்க சத்தம் போட்டு ஏசி புத்திமதி வழங்குவார். அவர் ஏசும் அந்த சத்தம் கிராமத்தில் ஓர் நீண்ட எல்லை வரை கேட்கும். அது அவரின் தனித்துவமான குரல் வளம்.
அந்தக் காலங்களில் ஓர் ஆசிரியரின் அறிவுரை ஏச்சுக்கு எல்லோரும் எதிர்த்து எந்தவொரு வார்த்தையும் பேசாது மடங்கிப் போவார்கள். பண்பான மனிதர்களுக்கு முன்னால் அவர் பணிந்திடுவார். இவை அவரது சுபாவங்கள்.
அவருக்கு இரு பிள்ளைகள். அவரது மகன் விக்கினேஸ்வரன் இராசயனத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்று பல்கலைக்கழக பேராசிரியராக, மருந்துகள் தயாரிக்கும் கம்பனியில் இரசாயன ஆய்வாளராக பணிபுரிந்து தற்போது கனடாவில் வசித்து வருகின்றார். அவரது மகள் ஓர் விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியராக தாயக மண்ணில் பணி புரிந்து வருகின்றார்.
சுவிஸிலிருந்து தர்மலிங்கம் - பிரபாகரன்

Post a Comment