எங்கள் குப்பிழான் கிராமத்து ஏழை விவசாய குடும்பத்தில் பல சகோதரர்களுடன் சேர்ந்து பிறந்து, இதே கிராமத்தில் வளர்ந்து, இதே கிராம பாடசாலையில் தன் வாழ்நாள் காலம் முழுவதுமாக, சுமார் 30 வருடங்கள் பணியாற்றி 05 ஆம் திகதி ஆனி மாதம் 1982 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர்.
திருமதி. அழகம்மா - தில்லைநாதன் ஆசிரியை அவர்கள் ஆவார்.
பிறப்பு : ஆனி/05/1928
மறைவு : ஐப்பசி/18/2008
1952 ஆம் ஆண்டு,
குப்பிழான் கிராமத்து மக்களால் ஓர் ஓலை கொட்டகையில் "விக்கினேஸ்வரா வித்தியாசாலை" என்னும் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட எமது கிராமத்தின் பாடசாலை கால ஓட்டத்தில், இந்து பரிபாலன சபையிடம் (Hindu Board) கையளிக்கப்பட்டிருந்தது.
எமது பாடசாலையின் ஸ்தாபகர் சட்டதரணி திரு.தம்பிராசா அவர்களின் சிபாரிசில் பல கிராமத்தவர்கள் அந்த காலங்களில் ஆசிரிய தொழிலில் சேரும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்களுள் ஒருவராக அழகம்மா டீச்சரும் மார்ச்/09/1952 ஆம் ஆண்டு எமது கிராமத்து பாடசாலையில் இந்து பரிபாலனசபை நிர்வாகத்தின் கீழ் பதவி நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
(அன்றைய காலங்களில் பாடசாலைகளில் "பன்ன வேலை", "தையல் வேலை" போன்ற கைத்தொழில் பயிற்சி கற்கை நெறிகள் பாடத் திட்டங்களில் உள்ளடக்கப்பட்டிருந்ததால் அந்த தொழில்துறை சார்ந்த ஆசிரியர் பணி நியமனம் இவருக்கு கிடைத்தது.)
அத்துடன் ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு இந்துசமய பாடம், தமிழ் போன்றவற்றினை கற்பித்தார். எப்போதுமே நெற்றியிலே என்றும் விபூதி அணிந்து வரும் இவர் ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு தேவாரங்கள், திருவாசகங்களை சொல்லிக் கொடுக்கும் வகுப்புகள் மிகப் பிரமாதமாக இருக்கும்.
சிறு தடி ஒன்றினை கையில் வைத்திருந்து, வகுப்பில் இருக்கும் சகல மாணவர்களையும் குழப்படிகள் என எவையும் செய்ய விடாது (Pin drop silence class atmosphere) தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அவரது ஆற்றல் பார்ப்பதற்கு மிக அலாதியாக இருக்கும்.
இவரது கணவர் அரசினர் வைத்தியசாலையில் நுண் பரிசோதனை கூட உத்தியோகத்தராக பணி புரிந்து வந்தவர் ஆவார். இவர்களின் ஒரேயொரு மகன் திரு.ரவீந்திரநாதன் ஆசிரியராக, அதிபராக ஈழ மண்ணில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். அவரது மருமகளும் ஆசிரியை ஆவார்.
சுவிஸிலிருந்து தர்மலிங்கம் - பிரபாகரன்

Post a Comment