குப்பிழானைப் பிறப்பிடமாகவும் உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சிவகுமாரன் (ஓய்வுநிலை அதிபர்) அவர்கள் இன்று 16.11.2025 ஞாயிற்றுக்கிழமை காலை உரும்பிராயில் காலமானார்.
அதிபர் அவர்களது சில நினைவுத்துளிகள்
யுத்தகாலத்தில் பலாலி இராணுவ முன்னரங்குக்கு அடுத்துள்ள புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையை துப்பாக்கி - ஆட்டிலெறி குண்டுச் சத்தங்கள் மற்றும் பல்வேறு நெருக்கடிகளுக்கும் மத்தியில் திறம்பட நடத்தியிருந்தார். ஆசிரியர்கள் - மாணவர்களோடு கனிவான சொற்கள் பேசி கட்டுக்கோப்புடன் பாடசாலையை வழிநடாத்தும் ஒரு அதிபராக பார்த்திருக்கிறேன். என்ன விடயம் என்றாலும் நாங்கள் நேரடியாகவே அதிபருடன் பேச முடியும் என்கிற நிலையையும் ஏற்படுத்தி இருந்தார்.
விக்கினேஸ்வரா சனசமூக நிலையமே என்னை அதிபராக்கியது
பின்னாளில் ஒரு முறை சந்தித்த போது பல்வேறு விடயங்களையும், அதில் முக்கியமாக தான் அதிபராக நியமனம் பெற்ற விடயத்தையும் கூறியிருந்தார். தன்னிடம் உள்ள வாசிப்பு பழக்கத்துக்கு முதலில் தூபமிட்டது குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையமே என்று மகிழ்ச்சியுடன் கூறினார். அங்கே குறிப்பாக அன்று வந்த தினசரி பத்திரிகைகள் அதில் வரும் செய்திகள், கட்டுரைகள் என்று எல்லாவற்றையும் நாள்தோறும் படித்து விடுவதாகவும், அப்படி ஒரு நாளில் அதிபர் பரீட்சைக்கு அழைப்பு விடுத்திருந்தார்களாம். பரீட்சை எழுதிய போது அதில் வந்த பொது அறிவுக் கேள்விகளில் அனேகமானவை தான் இங்கே படித்த பத்திரிகைகளில் வெளிவந்த விடயங்களே என்றும் தான் இலகுவாக சோதனை எழுதி சித்தியடைந்தேன் எனவும், விக்கினேஸ்வரா சனசமூக நிலையமே தன்னை அதிபராக மாற்றியது என்பதனை பெருமையுடன் நினைவு கூருவார்.
செ. கிரிசாந்-
17.11.2025 திங்கட்கிழமை உதயன் பத்திரிகையில் வெளியான அதிபரின் மரண அறிவித்தல்



Post a Comment