செம்மண்ணின் ஆசிரியர்கள் 01 - திருமதி தங்கமுத்து தம்பித்துரை

கனடாவில் நடந்த குப்பிழான் "செம்மண் இரவு" கலை விழா மேடையில் உரையாற்றும் போது எடுக்கப்பட்ட படம்..


"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா

கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா

சொல்லெல்லாம் தூயதமிழ் சொல்லாகுமா 

சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா"

திருமதி.தங்கமுத்து - தம்பித்துரை ஆசிரியையினை நினைவு கூரும் போதெல்லாம் கவிஞர் கண்ணதாசனின் இந்த பாடல் வரிகள்தான் முதலில் நினைவுக்கு வரும்.

* மென்மையான உள்ளம் கொண்ட, அன்போடு மாணவர்களை அரவணைத்து செல்லும்  ஓர் பெண் ஆசிரிய பெருந்தகை. 

மனிதருள் ஓர் மாணிக்கம்.

* வகுப்பில் மாணவர்களை "பிள்ளைகளே--- பிள்ளைகளே" என அடிக்கடி அழைக்கும் அந்த பாசத்தின் குரல் இன்றும் கிராமத்து மாணவர்கள் ஒவ்வொருவரின் காதிலும் ரீங்காரமிடும்.

* அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என இவை நான்கும் என்றுமே அந்த ஆசிரியையின் சொல்லிலும் செயலிலும் வாழ்வில் எவரும் என்றுமே கண்டிருக்க மாட்டார்கள்.

மாணவர்கள் மட்டுமல்ல ஊரவர்கள், உறவினர்கள் என ஒவ்வொருவரோடும் ஓர் பாசப்பிணைப்போடு உறவுகளை எப்போதும் பேணும் பெண்ணினத்தின் பெருந்தகை அவர் என்பதனை எவருமே மறுத்து பேச மாட்டார்கள். 

இப்படியும் சுபாவங்களை தன்னகத்தே கொண்ட மனித பிறவிகள் நம்ம கிராமத்தில், அதுவும் கல்வி செல்வம் என்ற அத்திவாரத்தினை இடும் ஆசிரிய தொழிலில் இருந்தார்கள் என்பதில் நாம் எல்லோரும் பெருமிதம் கொள்ள வேண்டும்.

திருமதி.தங்கமுத்து தம்பித்துரை ஆசிரியை அவர்கள் மார்ச்/13/1938 ஆம் ஆண்டு, கிராம மண்ணில் ஓர் வறிய விவசாய குடும்பத்தில் முதல் பிள்ளையாக பிறந்தார். தொடர்ந்து இரு தங்கைகள். ஒரு தம்பி.

 தற்போது கனடாவில் வசிக்கும் "சிவா மாஸ்டர்" என அழைக்கப்படும் அவரது ஒரேயொரு தம்பி  திரு சிவபாலசுப்பிரமணியம் அவர்கள் பிரபல்யமான விஞ்ஞான ஆசிரியராக பணி புரிந்து பலருக்கும் அறிமுகமானவர் ஆவார்.

புன்னாலைக்கட்டுவன் ஆங்கில மெதடிஸ்ட் பாடசாலை, குப்பிழான்- விக்கினேஸ்வரா வித்தியாசாலை, தொடர்ந்து ஏழாலை மகா வித்தியாலயத்தில் சேர்ந்து கல்வி பயின்று கல்வி பொது தராதர பரிட்சையில் 1954 - 1955 ஆம் ஆண்டு காலங்களில் சித்தியடைந்தார் . அன்றய காலங்களில் நடத்தப்படும் "பண்டிதர்" பட்டத்தின் ஆரம்ப பரீட்சையான "பிரவேச பண்டிதர்" பரிட்சையிலும் சித்தியடைந்தார்.

1958 ஆம் ஆண்டு.

இன்றைய குப்பிழான் - விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம், என்ற எம்மூரின் கல்வி கூடம் "விக்கினேஸ்வரா வித்தியாசாலை" என்ற பெயரில் இலங்கை இந்து பரிபாலன சபையின் (Hindu Board)  கீழ் இயங்கி வந்தது.

அந்த 1958 ஆம் ஆண்டு, தமது 20 வது வயதில் எம்மூர் பாடசாலையில் தற்காலிக நியமனம் என்ற அடிப்படையில் முதன் முதலில் தமது ஆசிரிய பணியினை ஆரம்பித்தார். 

1969 ஆம் ஆண்டில் கோப்பாய் - ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் சேர்ந்து இரு வருடங்கள் விசேட ஆசிரியருக்குரிய பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது.

ஆசிரியர் பயிற்சி கலாசாலை கற்கை நெறி கல்விகள் முடித்த பின்பு எங்கள் அயல் கிராமங்களின் பாடசாலைகளான ஏழாலை - சைவ மகாஜன வித்தியாலயம், குரும்பசிட்டி பொன்- பரமானந்தர் வித்தியாலயம், ஈவினை பாடசாலை உட்பட கிளிநொச்சியில் உள்ள பாடசாலை என பல இடங்களில் கல்வி கற்பித்து பின்பு மீண்டும்  எம்மூர் பாடசாலையில் பணி நியமனம் செய்யப்பட்டு 1989 ஆம் ஆண்டு தமது ஓய்வு பெறும் காலம் வரை பல வருடங்கள் கல்வி கற்பித்தார். 

தமது ஐந்து வயதில் ஆரம்ப கல்வி, முதல் முதலாக தமது 20 வயதில் தற்காலிக ஆசிரிய நியமனம், இறுதியாக ஆசிரிய தொழிலை முடித்து கொண்டது எல்லாம்  எமது ஊர் பாடசாலையில் என்பது அவரது வாழ்வின் பொற்கால நிகழ்வுகளாகும்.

அவரது கணவர் இலங்கை அரசினர் வைத்தியசாலைகளில் நுண்பரிசோதனை கூட உத்தியோகத்தராக, மருத்துவ தாதியாக பணி புரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகள். இரு பெண் பிள்ளைகள்.

தற்போது தமது முதுமை காலங்களில், கனடாவில் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளோடு இனிமையான பொழுதில்  இறை சிந்தனைகளோடு அவரின் வாழ்வு ஓடி கொண்டிருக்கின்றது.

மாணவர்கள் ஒவ்வொருவரையும் தமது பிள்ளைகள் போல் நேசித்து தமது மாணவர்கள் மனதில் என்றும் ஓர் பாச பறவையாக சிறகடித்து கொண்டிருக்கும் ஆசிரியர்களில் முதன்மையானவர் என்பதால் அவரை முதன்மை படுத்தி எங்கள் கிராமத்து பாடசாலையின் அன்றய கால அசிரியர்களை வரிசை கிராமத்தில் நினைவு கூர்வோம்.

(உலகமெல்லாம் பரவி வாழும் தமது மாணவ செல்வங்களோடு கனடாவிலிருந்து அவர் உரையாட  விரும்புவதால்,  001 416-398- 3319 என்ற பின்வரும் அவரது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.)

 - சுவிஸிலிருந்து தர்மலிங்கம் - பிரபாகரன் 


Post a Comment

Previous Post Next Post