யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் தெற்கு கிராமத்தின் மத்தாளோடை குறிச்சியை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி பாலேந்திரம் பரிமளம் (ராணி) 12.11.2025 புதன்கிழமை அன்று காலமானார்.
மத்தாளோடையில் 1983 ஆம் ஆண்டில் கிராமிய உழைப்பாளர் சங்கம் நடத்திய விவசாய கூலிப்பெண்களின் கூலியுயர்வு போராட்டத்தில் பங்குபற்றியவர்.
அன்று விவசாய பெண்களின் நாள் கூலி 10 ரூபாவாக இருந்த நிலையில் அதனை உயர்த்துவதற்கும், குறித்த பெண்களை தோட்ட எஜமானர்கள் ஏற்றத் தாழ்வுடன் நடாத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துமே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முப்பத்துநான்கு நாள்கள் தொடர்ச்சியாக நடந்த தீரமிகு போராட்டத்தில் முன்னின்று உழைத்த பெண்களில் ஒருவராக இவர் இருந்துள்ளார்.
இவரின் பிரிவால் துயருறும் கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள், கிராமத்தவர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
1983 ஆம் ஆண்டு இனக்கலவரங்களை தொடர்ந்து தமிழ் - சிங்கள இன அடக்குமுறை தீவிரம் பெற்ற அதே காலப்பகுதியில் எமது கிராமங்களில் சாதி தீண்டாமையும் உச்சத்தை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மத்தாளோடை விவசாய கூலிப்பெண்களின் கூலியுயர்வு போராட்டம் தொடர்பிலான விரிவான பதிவு விரைவில் எமது இணையத்தளத்தில் வெளியாகும்.

Post a Comment