யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் (உடுவில்) புதிய தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று வியாழக்கிழமை (19.06.2025) பிற்பகல்-02.30 மணியளவில் சுன்னாகத்தில் அமைந்துள்ள வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் தலைமை அலுவலக மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பாபு தேவந்தினி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் தவிசாளராக மீண்டும் தியாகராசா பிரகாஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2025 உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் வலிகாமம் தெற்குப் பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் 13 உறுப்பினர்களும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சார்பில் 6 உறுப்பினர்களும், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் 6 உறுப்பினர்களும், தேசியமக்கள் சக்தி சார்பில் 5 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் ஒரு உறுப்பினருமாக மொத்தமாக 31 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் புதிய தவிசாளர் பதவிக்காக தியாகராசா பிரகாஷின் பெயர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பாக முன்மொழியப்பட்டதுடன் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி, தமிழ்த்தேசியப் பேரவை இணைந்த கூட்டணி சார்பில் கருணைநாதன் அபராசுதனின் பெயரும் முன்மொழியப்பட்டது. இந் நிலையில் தவிசாளர் தெரிவு தொடர்பில் பகிரங்க வாக்கெடுப்பு நடாத்துவதா? அல்லது இரகசிய வாக்கெடுப்பு நடாத்துவதா? என்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதன்போது பகிரங்க வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 14 உறுப்பினர்களும், இரகசிய வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 12 உறுப்பினர்களும் ஆதரவு வழங்கினர். தேசியமக்கள் சக்தியின் 5 உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்கவுள்ளதாகத் தெரிவித்தனர்.
பகிரங்க வாக்கெடுப்பில் தியாகராசா பிரகாஷிற்கு ஆதரவாக 14 வாக்குகளும், கருணைநாதன் அபாரசுதனுக்கு ஆதரவாக 12 வாக்குகளும் கிடைத்தன. இதன்போது இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் தவிசாளராக மீண்டும் யாழ்.ஏழாலையைச் சேர்ந்த தியாகராஜா பிரகாஷ் தெரிவு செய்யப்பட்டார். இதன்பின்னர் நடைபெற்ற உபதவிசாளர் தெரிவில் தமிழ்த்தேசியப் பேரவை சார்பாக நிறுத்தப்பட்ட உறுப்பினர் கு.டெனிஸ் கமல்ராஜ் 12 வாக்குகள் பெற்ற நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட உறுப்பினர் செ.உதயகுமாரன் 14 வாக்குகள் பெற்று உபதவிசாளராகத் தெரிவானார்.
செ. ரவிசாந்-
Post a Comment