எம் அன்பான குப்பிழான் வாக்காளப் பெருமக்களே!


இன்று முக்கியமான வரலாற்றுப் பெருஞ்சந்தியில் நிற்கிறது தமிழினம். 2009 முள்ளிவாய்க்காலில் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்ட தமிழினத்தை அரசியல் ரீதியாகவும் தோற்கடிப்பதற்கு பகீரதப் பிரயத்தனங்கள் நடந்து வருகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்னர் இரத்தமும் சதையுமாக இனவழிப்பு நடந்து அதன் உள்காயங்களும் மனவடுக்களும் இன்னும் ஆறாத நிலையில் அந்த இனவழிப்புக்கு காரணமான  சிங்கள இராணுவத்துக்கு தென்பகுதியெங்கும் தீவிரமாக ஆட்சேர்த்து ஆயிரக்கணக்கான இளைஞர்களை  திரட்டிக் கொடுத்த கட்சியான ஜே.வி.பி இன்று தேசிய மக்கள் சக்தி என்கிற பெயரில் திசைகாட்டி சின்னத்தில் தமிழர் தாயகமெங்கும் களமிறங்கி இருக்கிறது. 

சிங்களக் கட்சிக்கு உள்ளூராட்சி தேர்தலிலும் தமிழர்களின் கதவைத் தட்ட வேண்டிய அவசியமென்ன?   

மக்களின் அன்றாட வாழ்வில் அதாவது தொட்டில் முதல் சுடுகாடு வரை அனைத்திலும் தலையிடும் அதிகாரம் கொண்டது உள்ளூராட்சியாகும்.  இந்த சபைகள் என்றுமே எங்களின் கைகளில் தான் இருக்க வேண்டும். தமிழ்மக்களுக்கு எந்த அதிகாரத்தையும் தராமல் அடிமைகள் போல் நடாத்தும் மத்தியரசுக்கு சுயாதீனமாகச் செயற்படும் உள்ளூராட்சி சபைகளையும் தங்கள் வசம் கொண்டு வந்தால் நில ஆக்கிரமிப்பு, பவுத்த மத விரிவாக்கம், இனப்பரம்பலை மாற்றியமைத்தல் உள்ளிட்டவற்றை இன்னும் இலகுவாக மேற்கொள்ள முடியும். அதற்காக தான் சிங்கள பேரினவாத கட்சியான தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்ற தீவிரமாக  முயல்கிறது. அது இன்று என்.பி.பி என பெயரை மாற்றிக் கொண்டு தமிழர்களின் படலைகளையும் தட்டத் தொடங்கி விட்டது.   இதனை தமிழ்மக்கள் தீவிரமாக எதிர்க்க வேண்டும்.     

இலங்கைத் தீவின் வரலாற்றில் காலகாலமாக தமிழரில் சிலரை வைத்தே தமிழரை ஒடுக்கும் வேலையை மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் திறம்படவே செய்து வந்திருக்கிறார்கள். அது இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இன்றுவரை தொடர்கிறது. 

ஏனைய சிங்கள கட்சிகளையும் விடவும் ஜே.வி.பி என்கிற என்.பி.பி மிகவும் ஆபத்தானது. ஏனெனில் தமிழ்மக்களை கோட்பாட்டு ரீதியாக ஒடுக்கிய பவுத்த மத பீடங்களுக்கு நிகராக தமிழினத்தை ஒடுக்குவதற்கு அன்றிருந்த சிங்கள ஆட்சியாளர்களை  தூண்டிய கட்சி இந்த ஜே.வி.பி என்கிற தேசிய மக்கள் சக்தியாகும். அன்று ஆட்சியிலுள்ளோர்  தமிழர்களுக்கு சிறிய அதிகாரங்களை கொடுக்க முன்வந்தாலும் அதற்கெதிராக தென்னிலங்கையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு போராட்டங்களை நடாத்திய கட்சி ஜே.வி.பி.  

குப்பிழானில் காலகாலமாக தமிழ்த் தேசியக் கட்சிகள் வென்றதே வரலாறு 

அன்று எங்கள் கிராமமான குப்பிழானும் ஒன்றாக  உள்ளடங்கிய உடுவில் தேர்தல் தொகுதியின் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கம் (சித்தார்த்தன் அவர்களின் தந்தையார்) அவர்களுக்கு தேர்தல் கட்டுப்பணம் செலுத்துவது யார் தெரியுமா? எங்கள் ஊரின் உழைப்பால் உயர்ந்த சுருட்டுத் தொழிலாளர்கள் தான். 

தமிழரசுக் கட்சியின் உடுவில் தொகுதியின் முதலாவது தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் இடமும் குப்பிழான் தான்.

அதேபோல் 1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழ் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்ட சிவநேசனுடன்   தமிழரசின் தர்மலிங்கம் அவர்களுக்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியாக குப்பிழான் வாக்காளர்களின் 95 வீதமான வாக்குகளினால் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றது. 

குப்பிழான் சந்தியில் இருந்த அரச மரத்தின் உச்சியில் ஏறி தமிழரசின் கொடியை உயரப் பறக்கவிட்ட கங்காணி ராசன் ஐயாவும் இன்றும் எம் மண்ணில் தான் வாழ்ந்து வருகிறார். 

எம்மண்ணில் தமிழரசின் தூண்களாகவும், பக்தர்களாகவும் இருந்தோர் பலர். இவர்களை மீறி எந்த சிங்களக் கட்சியும் வென்று விட முடியாது. 

பரமானந்தா வாத்தியாரின் மகன் சோமசேகரன்,  தம்பு தர்மலிங்கம் ஐயா, துரைசிங்கம் ஐயா, கார்கார வல்லிபுரம் ஐயா, பீதாம்பரம் ஐயா உள்ளிட்ட  பலரும் அன்று தமிழ் உணர்வுடன் தமிழரசுக் கட்சியையும் வளர்த்தார்கள். தமிழ்த் தேசியத்திலும் உறுதியாக நின்றார்கள். ஊரையும் முன்னேற்றினார்கள். 

காலகாலமாக தமிழரசுக் கட்சியின் கோட்டையாக விளங்கும் குப்பிழான் மண்ணில் சிங்களக் கட்சிகள் வென்ற வரலாறு இதுவரை இல்லை. 

ஆனால், கடந்தகால ஜே.வி.பியின் இரத்தம் தோய்ந்த வரலாறுகளை மறந்த இளையோர் சிலர்  இப்போது என்.பி.பி அலையில் அள்ளுப்பட்டு செல்வது கவலைக்குரியது. 


தமிழ்த் தேசியக் கட்சிகளை சாடும் அவர்கள் அதனால் தான் சிங்களக் கட்சி பக்கம் தாவினோம் என்பது எவ்வளவு அயோக்கியத்தனமானது. உள்ளூராட்சி என்பது சுயாதீனமானது. உள்ளூர் பிரதேச மக்களின் சோலை வரி, காணி விற்பனை வரி, வியாபார உரிமம், விளம்பரங்களுக்கான வரி, தண்ட அறவீடுகள் என  பல்வேறு வருமான வழிவகைகள் மூலம் சுயாதீனமாக இயங்கும் தன்மையுள்ள உள்ளூராட்சியில் சிங்கள கட்சியில் நின்று வாக்குக் கேட்க வேண்டிய அவசியமில்லை. சிங்கள கட்சியில் நின்று தான் பற்றைகளை துப்பரவாக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. 

எங்கள் ஊரில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதானால் மூன்று தெரிவுகள் உண்டு. 

முதலாவது தமிழ்த் தேசியக் கட்சிகள் ஊடாக வேட்பாளராக களமிறங்குவது   

இரண்டாவது மேற்படி கட்சிகளில் நம்பிக்கையில்லாவிடில் ஊரில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களுடன் ஆலோசித்து சுயேட்சையாக களமிறங்குவது. 

மூன்றாவது தேர்தலில் நின்று தான் சமூக சேவை செய்ய வேண்டும் என்கிற எந்த அவசியமும் கிடையாது. தேர்தலில் ஈடுபடாமல் எமது ஊரின் பல்வேறு அமைப்புகளில் இணைத்துக் கொண்டு மனமுண்டானால் தாராளமாக எம் மக்களுக்கு பல்வேறு சமூக சேவைகளையும் செய்ய முடியும்.  

ஆகவே இவற்றையெல்லாம் விட்டு விட்டு கடந்த கால வரலாற்றை மறந்து செல்வது தொடர்பில் அனுரவின் திடீர் தோழர்கள் சிந்திக்க வேண்டும். 

அனுரவின் திடீர் தோழர்களே ஒன்றை மறந்துவிடாதீர்கள் -  விடுதலைக்காக போராடி மறைந்த ஆத்மாக்கள் உங்களை ஒரு போதும் மன்னிக்காது 

சுதந்திரத்துக்கு முன்பிருந்து வெள்ளைக்காரர்களை அண்டிப் பிழைத்த அடிவருடும் பலர் எம்மினத்தில் இருந்தார்கள். அந்தக் கூட்டம் தான் கூர்ப்படைந்து இன்று  சில பதவியுயர்வுகள், இடமாற்றங்கள் இன்னபிற சலுகைக்காகவும் எம் இளையோரின் வீரம் செறிந்த தியாக வரலாறுகளை மறந்து என்.பி.பி என்கிற சிங்கள பெருந்தேசியவாத கட்சி பின்னால் போகிறது. இது மிகவும் கவலைக்குரியது. 


உங்கள் பேரப்பிள்ளைகள் முன்பாகவாவது கூனிக் குறுகி நிற்பீர்கள் 

இன்று உங்கள் பிள்ளைகள் கேட்காவிட்டாலும் நாளை உங்கள் பேரப்பிள்ளைகள் கேட்பார்கள்.  ஐம்பது - நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழர் தாயகத்தில் தியாகம் செறிந்த விடுதலைப் போராட்டத்தில் இணைந்து பலர் தங்கள் உயிர்களை ஆகுதியாக்கினார்களே. நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டால் அப்போது அவர்கள் முன் நீங்கள் நிச்சயம் கூனிக் குறுகி நிற்பீர்கள். அந்த நேரம் எங்கள் ஊரில் அந்த பிள்ளைகளை அழிக்க துணைபோன சிங்கள கட்சியில் வேட்பாளராக நின்றேன். அதற்கு கண்ணை மூடி வாக்களித்து ஆதரவளித்தேன் என்று எப்படி உங்களால் கூற முடியும்?

எங்களுக்கு இன்று இரண்டு விடயங்கள் முதன்மையானது. 

முதலாவது - இனப்பிரச்சினை சமஷ்டி அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும். கடந்த நூறாண்டு கால வரலாற்றில் சிங்களம் எந்த தீர்வையும் இதய சுத்தியோடு முன்வைக்கவில்லை. ஒரு கையால் தந்து இன்னொரு கையால் பறித்ததே வரலாறு. முக்கியமாக ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் எந்த தீர்வையும் காண முடியாது. கட்சி பேதங்களையும் தாண்டி தமிழ்மக்கள் ஒன்றாக இணைந்து தான் சர்வதேசத்தின் துணையுடன் நிரந்தர தீர்வை நோக்கி முன்னேற வேண்டும். 

இரண்டாவது - நடந்த இனப்படுகொலைக்கு பொறுப்புக் கூறல் முக்கியமானது. இதில் தமிழினம் மிகவும் உறுதியாக நிற்கவேண்டும். ஏனெனில் இனியொரு இனக்கலவரம், இனவழிப்பு நடக்காமல் இருக்க பொறுப்புக் கூறல் முக்கியமானது. இன்றும் ஜெனீவாவில் சிங்கள இராணுவத்தை பாதுகாக்கிறது ஜே.வி.பி. அதன் செயற்பாட்டில் துளியளவும் மாற்றமில்லை. 

ஜே.வி.பி என்கிற இனவாதக் கட்சி என்.பி.பி என்கிற லேபிளோடு வருகிறதே ஒழிய அங்கே எந்தப் பண்பு மாற்றமும் நிகழவில்லை. மே தினத்தின் போதும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட ஜே.வி.பி யின் தலைவர்கள் பிக்குகளின் முன்னால் மண்டியிட்டு குனிந்து வளைந்தே செல்கிறார்கள். இவர்கள் தான் எமக்கு கௌரவமான தீர்வை வழங்கப் போகின்றார்கள்? 

தமிழ்த் தேசியக் கட்சிகளில் ஒன்றுக்கே வாக்களியுங்கள் - வீடு, சைக்கிள், சங்கு மூன்றில் ஒன்றுக்கு உங்கள் வாக்கை அளியுங்கள் 

ஆகவே குப்பிழான் வாழ் மக்களாகிய நீங்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளில் மூன்றில் ஒன்றைத் தெரிவு செய்து வாக்களியுங்கள். வீடு, சைக்கிள், சங்கு இந்த மூன்றில் உங்களுக்கு பிடித்தமான சமூக பற்றாளருக்கு உங்கள் பொன்னான வாக்கை அளியுங்கள். சிங்கள கட்சிகளுக்கு வாக்களித்து வரலாற்றுத் தவறை இழைத்து விடாதீர்கள். 


இலங்கை தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்தில் வலிகாமம் தெற்கு பிரதேசசபைக்கு குப்பிழான் 4 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வயிரவநாதன் தமிழ்செல்வனுக்கு உங்கள் வாக்கை அளிக்கலாம். இவர் இனவிடுதலைக்காக எம்மண்ணிலிருந்து போராடி சிறையிலும் பல ஆண்டுகள் வாழ்வை கழித்தவர். ஊரில் மக்களுக்கு சேவை செய்ய முன்னிற்கும் சிறந்த சமூக சேவையாளர். 

அல்லது 



அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் வலிகாமம் தெற்கு பிரதேசசபைக்கு குப்பிழான் 4 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் செ. கிரிதரனுக்கு உங்கள் வாக்கை  அளிக்கலாம். இவரும் ஒரு சமூக சேவையாளர். இவர் போட்டியிடும் கட்சியின் தலைவர்கள் தமிழ்த் தேசியத்தில் மிகவும் உறுதியானவர்கள். 

அல்லது

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சங்குச் சின்னத்துக்கும் வாக்களிக்கலாம்.   

தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடுபவர் நல்லவராக இருக்கலாம். சமூக சேவையில் ஆர்வமுள்ளவராக இருக்கலாம். ஆனால் உறவு, நண்பர், தெரிந்தவர் என்பதை தாண்டி அவர் சிங்கள கட்சியில் போட்டியிடுவதே ஆபத்தானது.  அடுத்தமுறை தமிழ்த் தேசியக் கட்சிகளில் ஒன்றில் போட்டியிட்டால் அந்த நல்லவரையும்  பிரதேச சபைக்கு அனுப்புங்கள். 


உள்ளூராட்சி மன்றங்களும் அடிப்படையில் அரசியல் பகிர்விற்கான அதிகாரசபைகள் ஆதலால் தமிழ்மக்கள் தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும். 

மண்ணின் வளத்தையும் தோள்களின் பலத்தையும் நம்பிய எம் மக்களுக்கு யாரும் திசைகாட்டத் தேவையில்லை. அவர்களின் செல்திசையை அவர்களே தீர்மானிப்பார்கள். 


Post a Comment

Previous Post Next Post