தமிழ்த் தேசியக் கட்சிகளின் கைகளிலேயே உள்ளூராட்சி சபைகள் எப்போதும் இருக்க வேண்டும்

 

தமிழ் மக்கள் உள்ளூராட்சி சபை தேர்தல்களில் தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும்.  சிங்களக் கட்சிகளுக்கு வாக்களித்து எங்களது உள்ளூர் அதிகாரங்களையும் சிங்களக் கட்சிகளிடம் அடகு வைத்துவிட்டு பின் கொழும்பிலிருந்து வரும் உத்தரவுகளுக்காக காத்திருக்க முடியாது. தமிழின அழிப்புக்கு துணை போன ஜே.வி.பி இன்று என்.பி.பி என்கிற பெயரில் கிராமங்களுக்குள்ளும்  புகுந்துள்ளது. அவற்றை தமிழ்மக்கள் நிராகரிக்க வேண்டும். 

உள்ளூராட்சி சபைகள் தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் இருக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், யோதிலிங்கம் ஆகியோர் எழுதிய கட்டுரைகளில் இருந்து முக்கிய பகுதிகள் வருமாறு,  

“வெற்றி நமதே ஊர் எமதே” என்பது தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தமிழ்க் கோஷமாகக காணப்படுகிறது. உள்ளூராட்சி மன்றத்  தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு அது எதிர்பார்க்கும் வெற்றிகள் கிடைக்குமாக இருந்தால் தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாகக் கருதவில்லை; தங்களை ஒரு தேசிய இனமாகக்  கருதவில்லை என்று அரசாங்கம் வெளி உலகத்துக்குக் கூறப்போகிறது. தமிழ் மக்கள் இன அழிப்புக்கு எதிராக நீதியைக் கேட்கவில்லை; ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு தீர்வைக் கேட்கவில்லை என்றும் கூறப்போகிறது. 

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த்  தேசியக்  கட்சிகள் மீது கொண்ட வெறுப்பினால் தமிழ் மக்கள் ‘தெள்ளும் வேண்டாம் நாயும் வேண்டாம்’ என்று தீர்மானித்து  வாக்களித்தார்கள். ஆனால் தேசமும் வேண்டாம் என்று தீர்மானித்து வாக்களிக்கவில்லை என்பதை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நிரூபிக்க வேண்டும். 

“அசமத்துவங்கள் கிராமங்களில் தான் அதிகமாக உள்ளன. மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதற்கு அசமத்துவங்கள் தடையானதாகும். அசமத்துவங்களைக் கடந்து தேசமாகத் திரட்டும் பணி கிராமங்களிலிருந்தே ஆரம்பமாக வேண்டும். 

அதாவது தமிழ்த் தேசியவாத அரசியல் கிராமங்களிலிருந்து தான் தொடங்க வேண்டும். உள்ளூராட்சி சபைத் தேர்தல் அதற்குரியவைதான். உள்ளூர் உணர்வை பிரதிபலிப்பது தமிழ்த் தேசிய உணர்வுக்கு எதிராக இருக்க முடியாது. அது தமிழ்த் தேசியக் கூட்டுணர்வின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். உள்ளூர் அபிவிருத்தி தொடர்பாக பொருத்தமான தரிசனங்களைக் கொண்டவர்களும் உள்ளனர் அசமத்துவங்களை நீக்கி ஊர் மட்டத்தில் தேசிய ஐக்கியத்தை, தேசியக் கூட்டுணர்வைக் கட்டியெழுப்பக் கூடியவர்களும் தான் தேர்தலில் நிற்க வேண்டும். அங்கிருந்து தொடங்கி மாவட்ட, மாகாண மட்டத்திலும் தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களது ஒவ்வொரு அசைவும் தம்மைத் தேசமாக்கி திரட்டும் நோக்கத்தைக் கொண்டதாக அமைய வேண்டும். உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தேசியம் பேசக்கூடாது என்பது தமிழ் அரசியலை தமிழ்த் தேசிய நீக்கம் செய்யும் நோக்கத்தைக் கொண்டதே! தேச நிர்மாணம், தேசத்தை கட்டி எழுப்புதல் என்பது தமிழ்த் தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது தான். 

உள்ளூராட்சி சபைகளில் இனப் பிரச்சினையை பேசக்கூடாது என்பது தையிட்டி விகாரையில் இருந்து இன அரசியலை அகற்றுவோம் என்ற ஜனாதிபதி அனுராவின் கோரிக்கைக்கு நிகரானது.”

உள்ளூராட்சி சபைத் தேர்தல் களம் தொடர்பாக ஒரு கோட்பாட்டு விடயம் சுட்டிக்காட்டப்படுகிறது. உள்ளூராட்சி சபைகள் உள்ளூருக்கானவை;உள்ளூர் உணர்வுகளைப் பிரதிபலிப்பை உள்ளூர் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கான பயில் களங்கள். எனவே அந்த சபைகளுக்கான தேர்தல் களங்களிலும் தமிழ்த்தேசிய அரசியலைப் பேசக்கூடாது என்று ஒரு விளக்கம்.

அப்படிச் சொல்பவர்கள் தமிழ்த் தேசிய அரசியலை விளங்கிக் கொள்ளவில்லை. 

தேசியவாத அரசியல் என்றால் என்ன? ஒரு மக்கள் கூட்டத்தை ஆகப்பெரிய திரளாகக் கூட்டிக்கட்டுவது. அதை எங்கிருந்து தொடங்க வேண்டும்? கீழிருந்து மேல் நோக்கித்தான் அதைத் தொடங்க வேண்டும்.மேலிருந்து கீழ்நோக்கி அல்ல. அதாவது ஊர்களில் இருந்து தொடங்க வேண்டும். எனவே கீழிருந்து மேல் நோக்கி அதாவது ஊர்களில் இருந்துதான் தேசியவாதக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் காணப்படும் அசமத்துவங்கள் அதிகமாக கிராமங்களில்தான் நிலவும். பால்,சாதி,சமய,பிரதேச அசமத்துவங்கள், முரண்பாடுகள் கிராமங்களில் ஆழமாக இருக்கும். எனவே அங்கேயே அவற்றைத் தீர்க்க வேண்டும். அதற்கு தேசியவாத தரிசனமும் அணுகுமுறையும் வேண்டும்.ஒரு மக்கள் கூட்டத்தை பெரிய திரளாகக் கூட்டிக் கட்டுவது என்றால் எந்த அடிப்படையில் கூட்டிக்கட்டுவது? ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிப்படையில்தான் அதைச் செய்யவேண்டும். ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிப்படையில் ஜனநாயக அடிச்சட்டத்தின் மீதுதான் தேசியவாத அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும். எனவே தேசிய உணர்வைக் கட்டியெழுப்புவது என்ற விடயத்தை ஊர்களில் இருந்தே, ஊராட்சி அரசியல் களத்தில் இருந்தே தொடங்க வேண்டும்.

ஊரில் சாதிமானாக இருப்பவர், சமய வெறியராக இருப்பவர்,பால் அசமத்துவத்தை ஆதரிப்பவர் போன்றவர்களை தேர்தலில் நிறுத்தி உள்ளூராட்சி சபைகளை உருவாக்க முடியாது. ஊருக்கு நல்லவர்; அல்லது சாதிக்கு நல்லவர்; அல்லது சமயத்துக்கு நல்லவர்; தேசியவாதியாக இருப்பார் என்று இல்லை. உள்ளூராட்சி சபைகள் உள்ளூர்த் தன்மை மிக்கவை என்றாலும் உள்ளூரில் இருக்கக்கூடிய அசமத்துவங்களை தேசியவாத நோக்கு நிலையில் கடக்கின்ற, நீக்குகின்ற ஒருவர்தான் உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினராக இருக்க வேண்டும்.எனவே வேட்பாளர்களைத் தெரியும்போது தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்தே அதைச் செய்ய வேண்டும். இப்படிப் பார்த்தால் தேசியவாத அரசியலை கிராமங்களில் இருந்துதான் கட்டியெழுப்ப வேண்டும்.எனவே உள்ளூராட்சி சபை தேர்தல்கள் அதற்குரியவைதான். உள்ளூர் உணர்வுகளை பிரதிபலிப்பது என்பது தமிழ்த்தேசிய உணர்வுக்கு எதிராக இருக்க முடியாது. அது தமிழ்த் தேசிய கூட்டுணர்வின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்

உள்ளூர் அபிவிருத்தி தொடர்பான பொருத்தமான தரிசனங்களை கொண்டவர்களும், அதேசமயம் உள்ளூர் அசமத்துவங்களை நீக்கி ஊர் மட்டத்தில் தேசிய ஐக்கியத்தை, தேசியக் கூட்டுணர்வைக் கட்டியெழுப்பக் கூடியவர்களுந்தான் தேர்தலில் நிற்க வேண்டும். அங்கிருந்து தொடங்கி மாவட்ட மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் தாயகம் அளவிலும் தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

கிராம மட்டத்தில் பலமான கட்டமைப்புகளை அல்லது வலைப்பின்னலையோ கொண்டிராத கட்சி மாகாண மட்டத்திலோ அல்லது தாயக அளவிலோ வெற்றி பெற முடியாது. தமிழரசுக் கட்சியின் பலமே அதற்கு கிராம மட்டங்களில் இருந்த அடிமட்ட வலைபின்னல்தான். அக்கட்சி வடக்கு கிழக்கு தழுவியதாக எழுச்சி பெறவும் அதுதான் காரணம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளராகிய சிறீதரனுக்கு கிளிநொச்சியில் உள்ள பலமும் அதுதான்.

எனவே கிராம மட்டத்தில் பலமான கட்டமைப்பு இல்லையென்றால் மாவட்ட, மாகாண, தாயக மட்டத்தில் கட்சியைப் பலப்படுத்த முடியாது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களுடைய ஒவ்வொரு அரசியல் அசைவும் தம்மைத் தேசமாகத் திரட்டும் நோக்கத்தைக் கொண்டதாகவே இருக்க வேண்டும். அதை குடும்பத்தில் இருந்தே தொடங்க வேண்டும். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு குடும்பத்திலேயே வாக்குகள் சிதறி விழுந்தன. தமிழ் மக்கள் ஒரு சமூகமாகச் சிதறுகிறார்கள். எனவே ஊர்களில் இருந்தே தேசத்தைக் கட்டியெழுப்பத் தொடங்க வேண்டும்.

கடந்த காலங்களில் தேசியக் கூட்டுணர்வைக் கட்டியெழுப்பியவர்களும் அதேவேளை அபிவிருத்தி தொடர்பான பொருத்தமான தரிசனங்களைக் கொண்டவர்களும் உள்ளூராட்சிச் சபைகளில் செயலாற்றியிருக்கின்றனர். 

தேசிய மக்கள் சக்தியின் நோக்கம் பாராளுமன்றத் தேர்தல் வெற்றியை உள்ளூராட்சி சபைத் தேர்தல் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது தான். இந்த அடுத்த கட்டம் என்பது தமிழ்த் தேசிய அரசியலை பெருந்தேசிய வாதத்திற்குள் கரைப்பது தான். பாராளுமன்ற தேர்தல் வெற்றி தமிழ்த் தேசியத்தை தோற்கடிக்கலாம் என்ற நம்பிக்கையை தேசிய மக்கள் சக்திக்கு கொடுத்துள்ளது. தமிழ்த் தரப்பு என்பது தமிழ்த் தேசியத் தரப்பு மட்டுமல்ல என்பதை டில்லியிலும், ஜெனிவாவிலும, ஐ.நா.விலும் கூறத் தொடங்கிவிட்டனர். “வெற்றி நமதே ஊரும் நமதே” என்ற அவர்களது கோசப்படி ஊரும் அவர்களிடம் சென்று விட்டால்; தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசிய இனமாகத் கருதவில்லை எனக் கூறத் தொடங்கி விடுவர்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த வாக்குகளை விட ஒரு வாக்கு குறைந்தாலும் தேசிய மக்கள் சக்திக்கு தோல்விதான்; இதனால் ஒரு வாக்காவது கூடப் பெற்று விட வேண்டும் என்ற நோக்கில் கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் கூடாரமடிக்கத் தொடங்கி விட்டனர்; பிரதமர் ஹரிணி கிளிநொச்சியில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்கிறார். தமிழ் அரசியலின் தலைமையிடமாக யாழ்ப்பாணம் இருப்பதாலேயே தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அதி கூடிய கவனத்தை செலுத்துகின்றது. முக்கியமாக மாநகர சபை வெற்றியை அது பெரிதும் குறி வைத்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி இனவாதமில்லாத கட்சி என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகின்றது. அது தவறான வாதமாகும். சிங்களக் கட்சிகள் எதுவும் இனவாதமில்லாமல் அங்கு பிழைக்க முடியாது. சிங்கள சமூக உருவாக்கம் பேரினவாத கருத்து நிலையினாலேயே கட்டியெழுப்பப்பட்டது. அதிலிருந்து சிங்கள அரசுருவாக்கம் இடம்பெற்றது. இதனால் அரச அதிகாரத்தை வேண்டி நிற்கும் எந்த சிங்கள கட்சியும் பேரினவாத கருத்து நிலைகளிலிருந்து விடுபட முடியாது. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் தீர்வு என்ற அடிப்படை பிரச்சனை, இன அழிப்புக்கு பொறுப்பு கூறும் பிரச்சினை, ஆக்கிரமிப்புப் பிரச்சனை, காணிப்பறிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம் போன்ற எந்த ஒரு விடயத்திலும் சிறிய முன்னேற்றத்தைக் கூட தேசிய மக்கள் சக்தி காட்டவில்லை. தையிட்டியில் புதிய கட்டிடம் முளைத்ததும் தேசிய மக்கள் சக்திக்கு தெரியாது எனக் கூற முடியாது. தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எந்த சுயாதீனமும் இல்லை. வெறும் பொம்மைகளாகவே உள்ளனர்; அனுரகுமார திசநாயக்கா மீதுள்ள கவர்ச்சி மட்டும் தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்க்க மாட்டாது.

தேசிய மக்கள் சக்திக்கு தெற்கில் பெரிய சவால்கள் கிடையாது. அங்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளன. சஜித் பிறேமதாசா தன்னை ஒரு ஆளுமை உள்ள தலைவராக இன்னமும் காட்டவில்லை. ஏனைய கட்சிகள் வழக்கு நடவடிக்கைகளினால் தள்ளாடுகின்றன. தேசிய மக்கள் சக்திக்கு சவாலாக இருக்கப் போவது வடக்குத்தான். அதுவும் யாழ்ப்பாணம் தான். கிழக்கின் தமிழ்ப் பிரதேசங்களில் தமிழரசுக் கட்சி தன்னை தக்க வைத்துக் கொள்ளும். அங்கு எந்த ஒரு தமிழ் உள்ளூராட்சி சபையிலும் தேசிய மக்கள் சக்தி போட்டியாளராக இல்லை. வன்னியும் பெரிய நெருக்கடியைக் கொடுக்க மாட்டாது. எல்லை மாவட்டங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு பிரச்சனையை எதிர்நோக்கி இருப்பதால் அங்கு விழிப்பு நிலை சற்று அதிகமாக இருக்கின்றது எனக் கூறலாம்.

தேசிய மக்கள் சக்தி தமிழர் தாயகத்தில் மேல்நிலை பெறுவதற்கு தமிழ்த் தேசிய கட்சிகள் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. இது விடயத்தில் மக்களின் கோபம் நியாயமானது. 

குடும்பத்திற்குள் பிரச்சினை என்பதற்காக பக்கத்து வீட்டுக்காரன் வீட்டை ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது. தமிழ் மக்கள் அகப்பிரச்சனைக்கும் , புறப்பிரச்சனைக்கும் இடையிலான வேறுபாட்டை புரிந்து கொள்ளல் அவசியம். தமிழ்த் தேசியக் கட்சிகளின் மீதான அதிருப்தி உயர் நிலையில் இருந்தாலும் அது அகப்பிரச்சினையே! தேசிய மக்கள் சக்தியின் ஆக்கிரமிப்பு என்பது புறப்பிரச்சினை அது தமிழ் மக்களின் இருப்பை அடியோடு அழித்து விடும்.

தேசிய மக்களின் சக்தி ஒரு இடதுசாரிக் கட்சி என்ற வாதம் முன்வைக்கப்படுகின்றது. அது உண்மையில் இடதுசாரிக் கட்சியல்ல. இடதுசாரி முலாம் பூசப்பட்ட பேரினவாதக் கட்சி. புலம்பெயர் தரப்பில் சிலரும் இந்த முலாம் பூசலைப் பார்த்து மயங்கியுள்ளனர்; அது இடதுசாரிக் கட்சியாக இருந்தால் எப்பவோ தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரித்திருக்கும். தேசிய இனத்தின் இறைமையை அங்கீகரித்திருக்கும். சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்திருக்கும். வடக்கு – கிழக்கு இணைப்பை அகற்றுவதற்கு துணை போயிருக்காது. சுனாமி பொதுக்கட்டமைப்பை குழப்பியிருக்காது. படைக்கு 25000 சிங்கள இளைஞர்கள் சேர்த்து கொடுத்திருக்காது நோர்வேயின் சமாதான முயற்சிகளைக் குழப்பியிருக்காது. மற்றைய சிங்களக் கட்சிகளும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு முயலவில்லை. தேசிய மக்கள் சக்தியை ஏனைய சிங்களக் கட்சிகளை விட மோசமான இனவாத கட்சி என்றே கூறலாம்.

மொத்தத்தில் இந்தத் தேர்தல் தமிழ் மக்கள் மிகவும் விழிப்புடன் செயற்படவேண்டிய தேர்தல். இதில் கொஞ்சம் சறுக்கினாலும் தமிழ் மக்களின் எதிர்காலம் இருண்டதாகி விடும்.

வரலாறு முன்நோக்கிச் செல்லும் என் நம்புவோமாக!

Post a Comment

Previous Post Next Post