18 பவுண் தங்க நகைகளும், 40 ஆயிரம் ரூபா பணமும் திருட்டு

 


குப்பிழான் தெற்கில் சிவபூமி ஞான ஆச்சிரமத்திற்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ள ஆசிரியரொருவரின் வீடொன்றிற்குள் நுழைந்த திருடர்கள் தாலிக் கொடி உள்ளிட்ட 18 பவுண் தங்க நகைகளையும், 40 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வீட்டின் இளம் குடும்பத் தலைவரான ஆசிரியர் மல்லாவி மத்திய கல்லூரியில் உயர்தர ஆசிரியராகக் கடமையாற்றி வரும் நிலையில் அவரது மனைவி நல்லூர் பிரதேச சபையின் உத்தியோகத்தராகவும் கடமையாற்றுகின்றார். இந் நிலையில் குடும்பத் தலைவரான கணவர் தனது தந்தை சுகவீனமுற்றிப்பதால் தோட்டத்திற்கு நீர்பாய்ச்சுவதற்காக நேற்று முன்தினம் இரவு தனது சொந்த ஊரான நீர்வேலியில் அமைந்துள்ள வீட்டில் நின்றுள்ளார்.              

இந்தச் சந்தர்ப்பத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி நேற்று வெள்ளிக்கிழமை (24.06.2023) அதிகாலை மேற்படி பகுதியில் அமைந்துள்ள வீட்டின் பின் மதிலேறிக் குதித்த திருடர்கள் பூட்டப்பட்டிருந்த வீட்டின் சமையலறை யன்னலை ஒருவாறு திறந்து யன்னலூடாக சமயலறைக் கதவைத் உள்பக்கமாகத் திறந்து வீட்டினுள்ளே சென்றுள்ளனர்.

அங்கு ஆசிரியரின் மனைவி, அவரது இரு பிள்ளைகள், மாமி ஆகியோர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நிலையில் வீட்டின் அறைக் கதவைத் திறந்து அங்கு சல்லடையிட்டுத் தேடிய திருடர்கள் அறைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தாலிக் கொடி உள்ளிட்ட 18 பவுண் தங்க நகைகளையும், 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டுப் பணத்தையும், ஏ.ரி.எம் அட்டையையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.


நேற்று அதிகாலை-02.32 மணியளவில் ஏதோ சத்தம் கேட்டுத் திடீரென விழித்தெழுந்த குடும்பப் பெண்மணி சமயலறைக் கதவு திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றதுடன் இதன்பின்னரே வீட்டில் திருட்டுப் போன விடயம் தெரிய வந்தது.

இளம் குடும்பப் பெண்மணி தனக்கு அருகில் கைத்தொலைபேசியை வைத்துவிட்டு உறங்கிய நிலையில் அந்தக் கைத்தொலைபேசி திருடர்களால் எடுக்கப்பட்டு வீட்டின் வேறோரிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் திருடர்கள் வந்து போனதற்கான கால்த் தடங்கள் வீட்டின் பின்புறமாகவும், பின் மதிலிலும் காணப்படுகின்றன.

வங்கியொன்றின் பாதுகாப்புப் பெட்டகத்திற்குள் வைக்கப்பட்டிருந்த நிலையில் சுப நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக மீள எடுக்கப்பட்ட தங்கநகைகளே இவ்வாறு திருட்டுப் போயுள்ளது.            

இதேவேளை, குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் நேற்று அதிகாலை-05 மணியளவில் வீட்டின் உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.                 

செ.ரவிசாந்-


Post a Comment

Previous Post Next Post