குப்பிழானில் வெங்காயம் நாட்டிய முன்னாள் ஜனாதிபதி


யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன சனிக்கிழமை (01.07.2023) காலை குப்பிழான் பகுதியில் விவசாயிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

சிறியரக உழவு இயந்திரத்துடன் (லாண்ட்மாஸ்ரர்) பொருத்தப்பட்ட விசேட கருவி மூலம் மேற்கொள்ளப்பட்ட வெங்காயம் நடுகையையும் பார்வையிட்டு அதன்மூலம் தான் நேரடியாக தோட்டத்தில் வெங்காயத்தையும் நாட்டினார். அத்தோடு மிளகாய் செய்கையை மேற்கொள்ளும் விவசாய தோட்டங்களையும் பார்வையிட்டார்.

இதன்போது வெங்காய நடுகை இயந்திரம், அறுவடை இயந்திரங்களை வடிவமைத்த யாழ்.மாவட்டப் புத்தாக்குநர்களைச் சந்தித்த அவர் அவர்களைப் பாராட்டியும் கௌரவித்தார்.

இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் சஜின் டி வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பேராசிரியர். சமில லியனகே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாரதி துஷ்மந்த மித்ரபால, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலனறுவை மேற்கு அமைப்பாளர் தஹாம் சிறிசேன மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

விவசாயப் பொருளாதாரத்தால் தம்மைக் கட்டமைத்த யாழ்.விவசாயிகளை ஒரு சக விவசாயியாகச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தனது சிறுவயதுகால விவசாய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

வடக்கின் விவசாயத்துறைக்குப் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே இரணைமடுக் குளத்தைப் புனரமைத்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

செ.ரவிசாந்- 


Post a Comment

Previous Post Next Post