சுமார் 200 வருடங்களுக்கு மேல் பழமைவாய்ந்த அந்தக் "கேணி"?அதன் பூர்வீக வரலாறு என்ன?
இக்கேணி பற்றிய வரலாற்றுத் தகவல்களையும், அதனைச் சுற்றியுள்ள மக்களின் அன்றைய கால வாழ்க்கை முறைகள் பற்றியும் தொடர் தலைமுறைகளுக்கு பரிமாறப்பட்ட எம் மூதாதையர்களின் புராதனக் கதைகள் மூலம், அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
கிராமத்து மக்களின் நீர் தேவைகளுக்காக, 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் "உடையார்" என அழைக்கப்படும் புண்ணியவான் ஒருவரினால் நிர்மாணிக்கப்பட்டதே இந்தக் கேணியாகும்.
.jpg)
"உடையார்" என்பவர் 1928 ஆம் ஆண்டு கிராமத்தில் நம்மூர் பாடசாலையினை ஸ்தாபித்த சட்டத்தரணி திரு.தம்பிராசா அவர்களின் பேரனார் ஆவார்.
அதாவது அவரின் தந்தையின் தந்தை. அந்தக்காலங்களில் கிராம மண்ணில் கொஞ்சம் வசதியாக வாழ்ந்தவர்.
சட்டதரணி திரு.தம்பிராசா அவர்கள் 1959 ஆம் ஆண்டு அமரத்துவமடைந்து விட்டார். அவரின் அடுத்தடுத்த நான்கு தொடர் வம்சாவழியினர் இப்போதும் தாயக மண்ணிலும் கனடாவிலும் வசித்து வருகின்றனர்.
நிலத்தின் மேல் தளத்திலிருந்து ஆழமாக உள்ள நிலத்தடி நீர் சுனையின் கீழ் தளத்துக்கு சாய்வாக மெல்ல மெல்ல நடந்து போய் தாராளமாக நீரைப் பெற்று மேலே வரக்கூடிய அளவுக்கு வசதியாக உருவாக்கப்பட்ட அந்த கேணியின் நிர்மாண கட்டமைப்பு முறை மிக அற்புதமானதாகும்.
ஆனால் கிராமத்தின் பழைய நூற்றாண்டு கால வரலாறுகளை பறை சாற்றும், புராதன கிராமிய வாழ்வின் மிகவும் பழைய அடையாளச் சின்னம் ஒன்றினை தூர்ந்து போகும் அளவுக்கு கிராமத்தவர்கள் ஆகிய நாம் அனைவரும் கைவிடலாமா?
இந்தக் கேள்வி இன்று பல கிராமத்தவர்கள் மனதில் எழுந்து கொண்டே உள்ளது.
அன்றொரு காலம்? அந்தக் கேணியினால் கிராமியம் நீர் பிரச்சனைகள் இன்றி உயிர் வாழ்ந்தது.
15 வருடங்களுக்கு முன் சுற்றுக் கட்டுகள் கட்டப்பட்டு புனரமைக்கப்பட்டது
குறித்த கேணியானது கலாசார அமைச்சின் வலிகாமம் தெற்கு பிரதேச செயலகப் பிரிவின் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டு வலிகாமம் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.சு. சுந்தரசிவம் அவர்களால் 10.03.2011 அன்று திறந்து வைக்கப்பட்டது.
சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்பு கிராமிய கூட்டுறவு வாழ்வியலூடாக, இக்கேணியினை உபயோகித்த எங்கள் கிராமமும், அங்கு ஆங்காங்கே சிதறி வாழ்ந்த மக்களின் வாழ்வுகளும் பண்டைய காலத்தில் எப்படியிருந்திருக்கும்?
அந்தக் கதைகளும் மரபு ரீதியாக, தலைமுறை தலைமுறையாக வந்த செய்தி பரிமாற்றங்கள் மூலம் அறிந்து கொண்ட பூர்வீக பதிவுகள் ஆகும்.
* வெட்டவெளி நிலப் பரப்புகள். வீதிகள் என எவையுமில்லை. மின்சாரம் என்றால் என்ன? என்பது கிராமத்து மக்களுக்கு அறவே தெரியாது.
* பாலைவனங்களிலும், காடுகளிலும் வாழ்வது போல் செறிவற்ற நிலையில் ஆங்காங்கே குடிமனையாக இருக்கும். ஒரு சில ஓலை குடிசைகள். ஒருவரிடமும் தமக்கு தனியே என சொந்தமான கிணறுகள் இல்லை.
* வெளி உலகத் தொடர்புகள் என ஒன்றுமே இல்லாததொரு வாழ்வு முறைகள்.
இத்தகைய வாழ்வு முறைகளுக்கு உட்பட்டிருந்த கிராமியத்தினை வாழ வைத்தது இந்த புண்ணிய நீர்த் தளம் என்பது ஆன்றோர் சொல்லும் செய்தியாகும்.
இரு நூற்றாண்டுக்கு முற்பட்ட அந்தக் காலங்களில் எந்த நேரமும் அந்த இடத்தில் கிராமத்தவர்களின் நடமாட்டங்கள் இருந்து கொண்டேயிருக்கும் என்பதும் மரபு வழி செய்தியாகும்.
சுமார் 200 வருடங்களுக்கு முன்பு, பண்டைய காலங்களில் தொடர் தலைமுறைகள் கூட்டாக பயன்படுத்திய இந்த நீர்ச்சுனை இன்றைய நவீன காலங்களில் தேவையில்லாமல் இருக்கலாம்.
அது நவீன கால ஓட்டங்களின் முன்னேற்றகரமான மாற்றங்கள் மற்றும் பரிணாம வளர்ச்சியில் தவிர்க்க முடியாததொன்று.
ஆனால் கிராமிய வரலாற்று புராதன சின்னமான அந்தக் கேணியினை தூய்மையாக்கி, பேணிப்பாதுகாக்க வேண்டியது கிராமத்தின் தொடர் தலைமுறையினரின் கடமையல்லவா?
குப்பிழான் சந்தியிலிருந்து புன்னாலைக்கட்டுவன் வடக்குச் சந்தி நோக்கிய பிரதான பாதையில் சுமார் 500 மீற்றர் தொலைவில் குறித்த கேணியும், ஆலயமும் அமைந்துள்ளது.
இதனை கேணியடி ஞான வைரவர் ஆலய நிர்வாகசபையும், ஆலயத்தோடு சேர்ந்த அடியார்களும் கருத்தில் கொள்ள வேண்டும். அதனை முறையே புனரமைப்பதற்கும், பராமரிப்பதற்கும் எவ்வளவு செலவாகும் என்ற மதிப்பீட்டினை தெரியப்படுத்தல் வேண்டும்.
இன்றும் கேணியின் உள்பக்க சுவர்களை பார்த்தாலே பழைய யாழ்ப்பாணத்தின் அடையாளமான முருங்கை கற்பாறைகளின் சுவடுகள் வெளித்தெரியும். அவற்றை வைத்தும் கேணியின் தொன்மையை அறிந்து கொள்ளமுடியும்.
* கேணியைத் தூர்வார்ந்து, சேறுகள், பாசிகள் அகற்றப்பட்டு புனரமைக்கப்பட்டு தூய்மையாக்கப்பட வேண்டும்.
* கேணியின் உள்பக்க சுவர்களில் வெடிப்புகள் காணப்பட்டால் அதற்கு சீமெந்து பூசப்பட வேண்டும்.
* மழை வெள்ளப்பெருக்கு காலங்களில் சேற்று வெள்ளங்கள் கேணிக்குள் இறங்காத அளவுக்கு சுற்றுப்புற கட்டுகள் பலப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.
* தொடர்ந்து, அதன் தூய்மை கெடாது குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிக்கப்படல் வேண்டும்.
கால ஓட்டங்களில் அந்த இடத்தில் நிழல் தரும் அரச மரத்தின் கீழ் வைரவர் சூலம் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட அந்த ஆலயம், இன்று வீதியால் செல்வோர் அனைவருக்கும் அருள் பாலிக்கும் ஓர் அற்புதமான தெய்வத்தின் சந்நிதானமாக மிளிர்கின்றது.
அந்த சிறு ஆலயத்தின் சந்நிதியில் நிற்கும்போது ஏதோ ஓர் இனம் புரியாத ஆத்மீக அலை வீசும் உணர்வுகள் தென்படுவது வழமை என புலம்பெயர் நாடுகளிலிருந்து கிராம மண்ணுக்கு செல்வோர் பலர் சொல்லும் வார்த்தைகளாகும்.
"கேணியடி வைரவ பெருமானுக்கு நேர்த்தி வைத்து, பிரார்த்தனை செய்து எங்கள் பிரச்சனை தீர அருள் பெற்றோம்"
என்ற வாசகங்கள் கூட சில கிராமத்தவர்களின் நாவிலிருந்து வந்துள்ளன.
கேணி புனிதமான கேணியாக பேணப்படும் போது அது அமைந்துள்ள ஆலயத்தின் மகிமையும், அற்புதமும் அதிகரிக்கும் என்பது மகா யோகிகள், ஞானிகள், சித்தர்கள் சொல்லும் தத்துவமாகும்.
எனவே குப்பிழான் கிராமத்தின் வரலாற்றுச் சின்னமான அந்தக் கேணியினை புனிதமானதொரு கேணியாக மாற்றி, வைரவர் ஆலயத்துக்கும் மகிமை சேர்க்கும் முயற்சியினை தாயகம் - புலத்தில் வாழும் எம் மக்கள் இணைந்து முன் எடுக்க முடியாதா?
அனைவரும் சிந்திப்போம்.
ஆக்கம்- சிவ பஞ்சலிங்கம்
படங்கள் - செ. கிரிசாந் -
குறித்த கேணியின் மூலப் படங்களை பார்க்க, தரவிறக்க இங்கே அழுத்தவும்.
ஆலயத்தின் தெற்குத் திசையில் வீதிப் பக்கமாக இரண்டு பெரிய அரச மரங்களும், ஒரு ஆலமரமும் காணப்படுகிறது. புராதன ஆலமரத்துக்கு கீழுள்ள வைரவரசூலமும். சிறிய கட்டிடமும்.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
Post a Comment