கன்னிமார் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் "ஆன்மீகத்தைத் தேடு" சிறுவர் நாடகம்



இந்து கலாசாரத் திணைக்களத்தால் யாழ். மாவட்ட ரீதியாக நடத்தப்பட்ட நாடக இறுதிப் போட்டி அண்மையில்  யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற போது  குப்பிழான் கன்னிமார் கெளரி அம்பாள் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் "ஆன்மீகத்தைத் தேடு "  எனும் சிறுவர் நாடகம்  மூன்றாம்  இடத்தைப்  பெற்றதுடன் பணப் பரிசையும் தட்டிக் கொண்டது.

இந்த நாடகம் குப்பிழானைச் சேர்ந்த  ஓய்வு நிலைக் கிராம உத்தியோகத்தரும், கன்னிமார் கெளரி அம்பாள் அறநெறிப் பாடசாலை அதிபரும், சமாதான நீதவானுமான  சோ-பரமநாதனின் எழுத்துருவில் உருவாக்கப்பட்டுள்ளது.


இந் நாடகத்தில் குருவாக செ -சசிகாந்,சிஷ்யனாக ஆ.சங்கீதன்,தகப்பனாக கே.கரன்,வெளிநாட்டு முகவராக சி.யதுசன், நண்பர்களாக ம.மதுசன், வேலை தேடும் இளைஞனாக உ.அருண், மரங்களாக மு.பிரியங்கன், தா.தனரஞ்சன் ஆகியோர் பாத்திரமேற்று நடித்திருந்தனர்.

குறித்த நாடகத்தை  வளர்ந்து வரும் கலைஞர்  அபராசுதன் நெறியாள்கை செய்ததுடன், பின்னணி இசையைக் குப்பிழான் தாயகம் கல்வி நிலைய  ஆசிரியர் நிரோஜனும் வழங்கியிருந்தனர்.



இந் நாடகம் கடந்த சனிக்கிழமை  இந்து கலாசார திணைக்களத்தின் 25 ஆவது  நிறைவு தினத்தை முன்னிட்டு இணுவில் கந்தசுவாமி கோயில் இந்து இளைஞர் மண்டபத்தில் இடம்பெற்ற பல்வேறு பாடசாலை மாணவர்கள் பங்குபற்றிய நாடகப் போட்டியிலும் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் வாணி விழா அண்மையில் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெற்ற போது கலை நிகழ்வாகக் குப்பிழான் கன்னிமார் கெளரி அம்பாள் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் "ஆன்மீகத்தைத் தேடு " எனும் சிறுவர் நாடகம் அரங்கேறிப் பலரதும் கவனத்தை ஈர்த்திருந்ததுடன்  பாராட்டுதலையும் பெற்றிருந்தது. .

குறித்த நாடகம் ஆன்மீக உணர்வை ஊட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதுடன் நாடகத்தில் பாத்திரமேற்று நடித்த கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் அனைவரும் தமது சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளனர். குறுகிய காலப் பயிற்சியளிக்கப்பட்டு இந்த நாடகம் மூன்றாம் இடத்தைப் பெற்றமை வரவேற்புக்குரியது.



கன்னிமார் கெளரியம்பாள் அறநெறிப் பாடசாலைக்கும், எமது மண்ணுக்கும் பெருமை சேர்த்த இந்த நாடகத்தில் பாத்திரமேற்று நடித்த மாணவர்கள், அவர்களுக்கு ஊக்குவிப்பாகவிருந்த அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் போட்டிகளிலும் பங்கேற்று முதலிடம் பெற்று மண்ணுக்கு மேலும் பெருமை சேர்க்க எல்லாம் வல்ல வீரமனை நாயகி  கன்னிமார்  கெளரியம்பாளின் திருவருளை  வேண்டுகின்றேன்.

செ -ரவிசாந்

Post a Comment

Previous Post Next Post