மூத்தோர்கள் கௌரவிப்பு: புற்றுநோயாளர்களுக்கு நிதி திரட்டல் - கன்னிமார் ஆலய நிர்வாகத்தின் முன்மாதிரி

 


முதியோரைக் கெளரவித்தலும் புற்றுநோயாளர்களிற்கு உதவி வழங்கலுக்காக நிலையான வைப்புக்குரிய நிதி திரட்டலுக்கான பெருவிழாவும்  01.10.2020 வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு குப்பிழானில் இடம்பெற்றது.


எம் கிராமத்தில் 101 வயதினை பூர்த்தி செய்த விழா நாயகரும் ஓய்வு பெற்ற ஆசிரியரும், சோதிட வல்லுநருமான பொன்னையா ஐயம்பிள்ளை ஐயா நிகழ்வு ஆரம்பமாகிய சிவபூமி ஆச்சிரமத்தில் இருந்து கன்னிமார் ஆலயம் வரை நாதஸ்வர, தவில் வித்துவான்கள் சகிதம் கம்பீரமாக நடந்தே வந்திருந்தார்.  (வாகனங்களில் ஏறி வருமாறு பலரும் வற்புறுத்தியும் அவர் நடந்தே வருகிறேன் என கூறினார்.)

எம் கிராமத்து முதியோர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இன்றைய தினம் அமைந்திருந்தது. 


குப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கௌரி அம்பாள் ஆலய நிர்வாக சபையினரின் ஏற்பாட்டில் கன்னிமார் ஆலய முன் மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

ஆலயத் தலைவரும், ஓய்வுநிலைக் கிராம அலுவலருமான சோ. பரமநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவுச் சிறப்பு வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி- மகாலிங்கம் அரவிந்தன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.


மொரட்டுவப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை விரிவுரையாளர் பேராசிரியர்- கந்தப்பு பாலசுப்பிரமணியம், தேசிய கல்வி நிறுவக ஓய்வுநிலைப் பணிப்பாளர் கலாநிதி- உலகநாதர் நவரத்தினம், வடமாகாண ஓய்வுநிலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தம்பிஐயா கணேசநாதன், கமநலத் திணைக்களக் கணக்காளர் குணலிங்கம் சுரேஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

மூத்தோர்களை பேணிப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம, சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றினார்.



மேலும் இந்நிகழ்வில் கிராம மக்கள் மற்றும் கிராமத்து மூத்தோர்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்பளிப்புகளும் வழங்கி வைக்கப்பட்டன.

அல்லை விவசாயி கிரிசனின் மூலிகை இலைக்கஞ்சி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு பரிமாறப்பட்டது.

புற்றுநோயாளர்களுக்கு இதுவரை சேர்ந்த நிதியாக எம் கிராமத்து புலம்பெயர்ந்தோர் இதுவரை நான்கு இலட்சம் வரை குறித்த நிதியத்தில் வைப்பிலிட்டுள்ளதாக ஆலய தலைவர் பரமநாதன் பேசும் போது குறிப்பிட்டிருந்தார்.


இந்நிகழ்வின் இறுதியில் எம் கிராமத்தில் முதியோர் நல சங்கம் ஒன்று ஆரம்பிப்பது தொடர்பிலும், அவர்கள் தங்களுக்கிடையில் ஒற்றுமையாக செயற்படுவது தொடர்பிலும், மாதமொருமுறை கூடி கதைப்பது தொடர்பிலும், சமூகத்துக்கு தாங்கள் ஒன்றாக சேர்ந்து என்ன செய்யலாம் என்பது தொடர்பிலும், முதியோர்களின் உடல், உள நலன்களை பேணுவது தொடர்பிலும் தொடர்ந்து செயற்படுவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டது.   




Post a Comment

Previous Post Next Post