குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயப் பரிசளிப்பு விழாவும் 'செம்மண் சுடர் விருது வழங்கலும்'


யாழ்.குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலய வருடாந்தப் பரிசளிப்பு விழாவும், செம்மண் சுடர் விருது வழங்கலும் சனிக்கிழமை (17-10-2015) காலை 9 மணி முதல் வித்தியாலய கிருஸ்ணர்  அரங்கில் அதிபர் த.தவராஜா தலைமையில் இடம்பெற்றது.

இவ் விழாவில் யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகவும், உடுவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சு.சண்முக குலகுமாரன் சிறப்பு விருந்தினராகவும், பாடசாலையின் பழைய மாணவனும் ஓய்வு நிலைக் கிராம உத்தியோகத்தருமான சோ.பரமநாதன் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர். விழாவில் குப்பிழான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ சி.கிருஷ்ணசாமிக் குருக்கள் ஆசியுரை  நிகழ்த்தினார்.

இதன் போது தவணைப் பரீட்சையில் உயர் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள்,பல்வேறு போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவர்கள், க.பொ .த சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள், விளையாட்டுத்துறையில் சாதித்த மாணவர்கள் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.


பிரித்தானியா குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றத்தின் ஏற்பாட்டில் குப்பிழானைச் சேர்ந்த மூத்த ஆன்மீகவாதி சைவப் புலவர் விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மையார், எழுத்தாளர் குப்பிழான் ஐ -சண்முகன், சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம், குப்பிழான் வடக்கு ஓய்வு நிலைக் கிராம சேவகர் செ -ஞானசபேசன்  யாழ்.அரச அதிபரால்  செம்மண் சுடர் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர். 


அமரத்துவமடைந்த குப்பிழான் கிராமம் தனிக் கிராமம் உருவாகக் காரணமான மூத்த கிராமத் தொண்டன்  தம்பு தருமலிங்கம் சார்பாக அவரது பேரனும், சிங்கப்பூரில் புலம்பெயர்ந்து வதியும் ஊர்ப் பற்றாளர்  கந்தையா கிருஸ்ணர் சார்பாக அவரது உறவினர் தில்லைநாதன் இரவீந்திரநாதனும்  விருதினைப் பெற்றுக் கொண்டனர்.


மற்றும் செம்மண் சுடர் விருது பெறும் முன்னாள் குப்பிளான் விவசாய சம்மேளனத் தலைவர் சண்முகம் வைத்தீஸ்வரன், குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமத்துக்குத் தனது காணியை உவந்தளித்த ஆறுமுகம் சிறிஸ்கந்தமூர்த்தி , கலாநிதி கந்தையா கணேசலிங்கம், மூத்த பத்திரிகையாளர் பொன்னம்பலம் நடனசிகாமணி  ஆகியோரின் பெயர்களும் மேடையில் வாசிக்கப்பட்டன. அத்துடன் பிரித்தானியா குப்பிளான் விக்கினேஸ்வரா மன்றத்தால் வெளியிடப்பட்ட பொன்விழா சிறப்பு மலர் நூல் அங்கு கூடியிருந்த விருந்தினர் ,செம்மண் சுடர் விருது பெற்றவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு வழங்கப்பட்டன.


செம்மண் சுடர் பெற்றவர்கள் சார்பாக ஏற்புரையை சைவப் புலவர் விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மையார் நிகழ்த்தினார். இனி வரும் காலங்களில் 'செம்மண் சுடர் விருது'  ஒவ்வொரு வருடமும் மூத்த கிராமத் தொண்டன் தம்பு தருமலிங்கம் ஞாபகார்த்தமாக வழங்கப்படவுள்ளதாகவும் தெரிய வருகிறது. கிராமத்தின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் காரணமாகவுள்ள பத்துப் பேரை வருடா வருடம் தெரிவு செய்து செம்மண் சுடர் விருது வழங்கிக் கெளரவிக்கவும் குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா தீர்மானித்துள்ளது.


அதனைத் தொடர்ந்து குப்பிழானைச் சேர்ந்த 50 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதி வழங்கல் இடம்பெற்றது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 2000 ரூபா படி மொத்தமாக ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. குப்பிழான் வடக்கிலிருந்து 20 குடும்பங்களும், குப்பிழான் தெற்கிலிருந்து 20 குடும்பங்களும், பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் 10 பேருமாக மொத்தமாக 50 குடும்பங்களுக்கு இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. உலர் உணவுப் பொதிகளுக்கான நிதியினை ஊர்ப்பற்றாளரும் , பழைய மாணவனுமான கந்தையா கிருஷ்ணன் வழங்கியிருந்தார்.


விருந்தினர்களின் உரைகளும், மாணவர்களின் மயில் நடனம், குரங்கு நடனம், காவடியாட்டம், ஆங்கிலப் பாடல், அபிநயப் பாடல் போன்ற பல்வேறு கலை நிகழ்வுகளும்  நடைபெற்றன. 


மாணவர்களின்  பரிசில்களுக்கான நிதிகளை பாடசாலையின் பழைய மாணவனும், பொறியியலாளருமான எம்.எஸ்.கனகரட்ணம்  தனது மகள் உஷா கனகரட்ணம்  ஞாபகார்த்தமாகவும், முன்னாள் கிராம சேவையாளரும், பழைய மாணவனுமான சோ.பரமநாதனும்  வழங்கியிருந்தனர்.


விழாவில் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், அயற் பாடசாலை அதிபர்கள், பழைய மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள், கல்விமான்கள், ஊரவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இணுவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் தில்லையம்பலம் சசிதரன் நேற்றைய நிகழ்வுகளை முன்னிலைப்படுத்தினார். இதேவேளை பாடசாலையின் இரண்டாவது பரிசளிப்பு விழா இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:-செ -ரவிசாந்

Post a Comment

Previous Post Next Post